full screen background image

செம்பி – சினிமா விமர்சனம்

செம்பி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன், ஏ.ஆர்.எண்ட்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்களான அஜ்மல்கான் & ரியா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, அஷ்வின் குமார், நிலா, நாஞ்சில் சம்பத், பழ.கருப்பையா, ஆகாஷ், கு.ஞானசம்பந்தன், ஆண்ட்ரூஸ், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து மற்றும் இயக்கம் – பிரபு சாலமன், ஒளிப்பதிவு – எம்.ஜீவன், படத் தொகுப்பாளர் – புவன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, இசை – நிவாஸ் k.பிரசன்னா, நடன  இயக்கம் – ஸ்ரீகிருஷ், பாடல்கள் – எம்.கே.பாலாஜி, குட்டி  ரேவதி, பிரபு சாலமன், ஆடை வடிவமைப்பு – பிரியா கரண், பிரியா ஹாரி, சண்டைப் பயிற்சி இயக்கம் – பீனிக்ஸ் பிரபு, ஒலிக் கலவை – ஜீ.தரணிபதி, தயாரிப்பு நிர்வாகம் – ஹக்கிம் சுலைமான், விளம்பர வடிவமைப்பு – ஷபீர், புகைப்படங்கள் – பி.ரிஷால் ஈஸ்வர், உடைகள் – அ.கதிரவன், ஒப்பனை – சங்கர், எம்.கே.ராஜு (கோவை சரளா), DI – ரகுராமன் (ஸ்ரீகலாசா ஸ்டுடியோ), VFX – டீநோட்  ஸ்டுடியோ, பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தனது 10 வயது பேத்திக்கு நியாயம் கேட்டுப் போராடும் ‘வீரத்தாய்’ என்ற பாட்டியின் கதைதான் இந்த ‘செம்பி’ திரைப்படம்.

கொடைக்கானலில் உள்ள ‘புலியூர்’ என்ற காட்டுப் பகுதியில் தனது பேத்தியான 10 வயது ‘செம்பி’யுடன் வசித்து வருகிறார் பாட்டி ‘வீரத்தாய்’. தாய், தந்தையை இழந்த செம்பிக்கு பாட்டிதான் உயிரும், உலகமும்..!

மலையில் இருந்து தேனும், கிழங்குகளையும் சந்தைக்குக் கொண்டு வந்து விற்று அதில் பிழைப்பு ஜீவனம் நடத்தி வரும் அடித்தட்டு மலைவாழ் மக்களில் ஒருவர்தான் வீரத்தாய்.

ஒரு நாள் தேன் கூட்டில் இருந்து சேகரித்த மலைத் தேனை தனது பேத்தியான செம்பியிடம் கொடுத்தனுப்புகிறார் வீரத்தாய். செம்பி காட்டுப் பகுதியில் செல்லும்போது அங்கே வந்த 3 பணக்கார இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்.

மிகக் கொடூரமான முறையில் நடந்த இந்தச் சம்பவத்தால் மிகக் கடுமையாகக் காயம் பட்டிருக்கும் செம்பி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அங்கேதான் இவளுக்கு நேர்ந்த கொடுமை வெளியில் தெரிகிறது.

போலீஸில் புகார் பதிவாக… தனது பேத்திக்கு நேர்ந்த கொடுமையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் வீரத்தாய்’ அந்தக் கயவர்கள் யார் என்பதை அறியவும், அவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைத்தும் போலீஸுக்கு நடையாய் நடக்கிறார்.

ஆனால் காவல்துறையோ அந்த கயவர்களுக்கு துணை போகிறது. கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி சப்-இன்ஸ்பெக்டர் ஆகாஷ் பாட்டியை வற்புறுத்துகிறார். இதனால் கோபமான பாட்டி வீரத்தாய், ஆகாஷை அடித்து துவம்சம் செய்துவிட்டு ஒரு பஸ்ஸில் தன் பேத்தி செம்பியுடன் தப்பித்து செல்கிறார்.

உயிருக்குப் போராடும் ஆகாஷை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பாட்டியை போலீஸ் வலைவீசி தேடுகிறது. கொடைக்கானல் மலையில் இருந்து இறங்கும் அனைத்து வழிகளிலும் காவல்துறை சோதனையிடுகிறது.

தமிழகத்தில் அப்போது தேர்தல் நேரம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளில் எதிர்க்கட்சித் தலைவரின் மகனும் ஒருவர். இது தெரியாமல் அவரும் இதை தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய பிரச்சினையாக எழுப்புகிறார். மக்கள் கூட்டம் எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கத் துவங்க.. ஆளும் தரப்பு கலக்கமடைகிறது.

இந்த நேரத்தில் செம்பியும், பாட்டியும் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸில் சகப் பயணிகளில் ஒருவராக வழக்கறிஞர் அஸ்வின் மற்றும் கண்டக்டர் தம்பி ராமையா, மற்றும் ஒரு போலீஸ்காரர் என்று பல தரப்பினரும் பயணிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு கோவை சரளா யார் என்று தெரிய வருகிறது. இடையில் கோவை சரளாவையும், பேத்தி செம்பியையும் கொலை செய்ய போலீஸ் டிரெஸ்ஸிலேயே அடியாட்கள் வருகிறார்கள். அவர்களை பஸ்ஸில் இருப்பவர்களே அடித்து விரட்டுகிறார்கள்.

அதன் பிறகு என்ன ஆனது..? மக்கள் யார் பக்கம்..? செம்பிக்கு கொடூரம் இழைத்தவர்கள் கைதானார்களா.? அவர்களுக்குத் தண்டனை கிடைத்ததா..? இறுதியில் நீதி யார் பக்கம் நின்றது..? என்பதுதான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்.

ஒட்டு மொத்தப் படத்தையும் ஒரே ஆளாக தன் தோள் மீது தூக்கி சுமந்திருக்கிறார் பாட்டி வீரத்தாயாக’ நடித்திருக்கும் கோவை சரளா. இதற்கு அவருடைய ஒப்பனையும், தோற்றமும் பெரிதும் உதவியிருக்கிறது.

பேத்தி மீது காட்டும் பாசத்திலும், தன்னுடைய இயலாமையை எண்ணி கண்ணீர் சிந்தும் காட்சியிலும், போலீசை எதிர்த்துப் பேசுவதிலும், தன்னை அவதூறாகப் பேசும் சக பயணிகளிடம் பொங்கித் தீர்க்கும்போதும் ஒவ்வொரு பிரேமிலும் கோவை சரளா தன் நடிப்பில் ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

அதிலும் பேத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்தவுடன் மருத்துவமனை வராந்தாவில் நடந்து கொண்டே அழுகும் காட்சியில் நம்மை நெக்குருக வைத்திருக்கிறார் கோவை சரளா. இந்தப் படத்திற்காக கோவை சரளாவுக்கு அனைத்து விருதுகளும் கிடைக்கும்..!

செம்பியாக நடித்துள்ள 10 வயது சிறுமி மிக அழகாக நடித்துள்ளார். அந்தப் பகுதி நேட்டிவிட்டி தோற்றத்துடன் இருக்கும் இவரது தேர்வும் பாராட்டுக்குரியதுதான். மருத்துவமனையில் பாட்டியை பார்த்தவுடன் தனக்கு நேர்ந்த கொடுமையைக்கூட நினைத்துப் பார்க்காமல் தனது அம்மாவின் நினைவாக வைத்திருந்த தேன் குடுவை உடைந்துவிட்டதை சொல்லும் காட்சியில் நம்மையும் கண் கலங்க வைத்திருக்கிறார்.

பேருந்து பயணத்தின்போது நடந்த சம்பவங்களைப் பற்றி பல பெண்கள் கோபமாகப் பேசுவதைக் கேட்டு மிரண்டு போன கண்களுடன் பயந்து போய் பாட்டியுடன் ஒட்டிக் கொள்ளும் காட்சிகளில் பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

மேலும் கடைசியில் நீதிமன்றத்தில் தன்னை சிதைத்த கயவர்களை கண்டவுடன் பயந்து போய் தனது கண்களாலேயே குற்றவாளிகள் இவர்கள்தான் என்பதை நீதிபதிக்கு சொல்லும் காட்சியில் கை தட்டலையும் பெற்றிருக்கிறார். வாழ்த்துகள்..!

பேருந்தில் பயணிக்கும் வழக்கறிஞராக அஸ்வின் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார். மேலும் பேருந்தின் உரிமையாளரான தம்பி ராமையாவும் தன் நடிப்பில் ஆங்காங்கே லேசான சிரிப்பலையை உருவாக்கியிருக்கிறார். எல்லோரையும் டா‘ போட்டு பேசும் ஒரு நடிகரின் கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்ப்.  

வில்லன்களான இளைஞர்கள் மூன்று பேருமே தங்களது கேரக்டரை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வயதுக்கேற்ற அலட்சிய மனப்பான்மையுடன், எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்துடன், பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் அவர்களது நடிப்பும் அருமை.

இவர்களில் நாஞ்சில் சம்பத்தின் மகனாக நடித்தவர் எதைப் பற்றியும் கவலைப்படாதவராகவும், சூர்ய பிரகாஷோ சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என்று பயப்படும் காட்சியிலும், இறுதியில் நீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்னவுடன் சொல்ல முடியாத அதிர்ச்சியையும் தன் கண்ணில் காட்டி நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

முதல்வர் பழ.கருப்பையாவும், எதிர்க்கட்சித் தலைவரான நாஞ்சில் சம்பத்தும் இன்றைய அரசியல்வியாதிகளை அப்படியே கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள்.

பிரபு சாலமன் படம் என்றாலே அது மலையும், மலை சார்ந்த பகுதியும்தான் கதைக் களமாக இருக்கும். இந்த செம்பி படத்தில் கொடைக்கானல் மலைப் பகுதியைக் களமாகக் கொண்டுள்ளார் இயக்குநர்.

கொடைக்கானலில் நாம் இதுவரையிலும் பார்த்திராத புதிய இயற்கை எழில் காட்சிகளைப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன். மலைப் பகுதியில் பேருந்து பயணிக்கும் பகுதிகளைக்கூட வித்தியாசமான கோணத்தில் காட்டியிருக்கிறார்கள். மேலும் முதல் பாடல் காட்சி முழுவதிலும் பாட்டிக்கும், பேத்திக்குமான பாச காட்சிகள் இருந்தாலும் பின்னணியில் இருக்கும் இயற்கைக் காட்சிகளே நம்மைப் பெரிதும் கவர்கின்றன.

குடுவையில் தேன் ஒழுகும் காட்சியை படமாக்க எத்தனை நேரம் மெனக்கெட்டார்களோ தெரியவில்லை. அதேபோல் பேருந்துகள் மோதல், பேருந்துகளில் இருந்து பயணிகள் மாற்றம் செய்வது போன்ற காட்சிகளில் உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார்கள் படக் குழுவினர். அதற்காக நமது தனி பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.!

பாடல்கள் கதையை நகர்த்துவதாகவே அமைந்திருப்பதால் தனிப் பெருமையை அடையவில்லை. ஆனால் பின்னணி இசை பாராட்டும்படியாக உள்ளது. பேருந்துகள் துரத்தல் காட்சியில் நம்மையும் பதட்டத்துடனேயே வைத்திருந்தது பின்னணி இசைதான்.

வழக்கமாக பிரபு சாலமனின் படங்களில் சிறப்பான இயக்கம் இருக்கும். இதிலும் அப்படியே..! ஆனால் இடைவேளைக்குப் பின்பு பேருந்தில் அனைவரும் பேசிக் கொண்டேயிருப்பது சற்று போரடிக்கிறது.

அரசியல் விழிப்புணர்வையூட்டும் வசனங்களை வைத்து நம் மனதில் பல கருத்தாக்கங்களை உருவாக்கிவிட்டார் பிரபு சாலமன். காவல்துறை, அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள், நீதி கிடைக்க தாமதமாவது என்று பல விஷயங்களையும் எளிய மனிதருக்குப் புரியும்வகையில் வசனங்களாக பேசியிருப்பது பாராட்டுக்குரியதுதான்.

அதிலும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வினை இந்தப் படத்தில் அதிகமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். நீதிமன்றக் காட்சியில் நீதிபதி கு.ஞானசம்பந்தன் மிக எளிய வகையில் நீதிமன்ற நடவடிக்கைகளைப் பற்றிச் சொல்லி தீர்ப்பு வழங்குவது இயக்குதலின் சிறப்பம்சமாகும்.

தினத்துக்கும் பல போக்சா வழக்குகள் இந்தியாவில் பதிவாகி வந்தாலும் அவைகள் நிரந்தரமாக நின்றபாடில்லை. அதை நிறுத்துவதற்கு என்ன வழி என்பதைத்தான் நாம் இனிமேல் யோசிக்க வேண்டும். அதைத்தான் இந்தப் படம் நமக்குச் சொல்லியிருக்கிறது.

செம்பி – செதுக்கப்பட்ட நீதி..!

RATING : 4.5 / 5

Our Score