சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. வித்தியாசமான வேடத்தில் சேரன்..!

சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி.. வித்தியாசமான வேடத்தில் சேரன்..!

இயக்குநர் சேரன் குடும்ப உறவுகளின் மேன்மைகளைச் சொல்லும் விதமாக படங்களை இயக்குபவர். அதனால் அப்படிப்பட்ட அம்சங்கள் கொண்ட கதைகளை இயக்குவது மட்டுமல்ல, நடிப்பு என வரும்போதும் குடும்ப கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர்.

அப்படிப்பட்டவர் ‘ராஜாவுக்கு செக்’ என்கிற ஆக்சன் கலந்த எமோஷனல் த்ரில்லர் படத்தில் அதிரடியாக நடித்துள்ளார்.

சேரன் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது, இது தன் நடிப்புக்கு சவால் என்று தெரிந்தே ஒப்புக் கொண்டாராம். காரணம் கதையில் சொல்லப்பட்டுள்ள விஷயமும் அது ஏற்படுத்தப் போகும் தாக்கமும்தான்.

மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் இந்தப் படத்தை தங்களது பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். 

‘ராஜாவுக்கு செக்’   வைக்கும் ராணிகளாக மலையாள திரையுலகைச் சேர்ந்த சரயூ மோகன், நந்தனா வர்மா மற்றும் ஒரு முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே என மூன்று பேர் நடித்துள்ளனர்.  ‘சுண்டாட்டம்’, ‘பட்டாளம்’ உள்ளிட்ட  படங்களில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். 

இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ‘குற்றம் கடிதல்’  படத்தின் படத் தொகுப்பிற்காகப் பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத் தொகுப்பைக் கவனிக்கிறார்.

தெலுங்கில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர் வினோத் யஜமானியா,  இப்படத்தின் மூலம் தமிழுக்கு இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 

ஆக்சன் காட்சிகளை ‘டேஞ்சர்’ மணி வடிவமைத்துள்ளார். ஒட்டு மொத்தப் படத்திலும் ஒரேயொரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். இவர்,  ஏற்கனவே  ’ஜெயம்’  ரவியை வைத்து தமிழில் ’மழை’ என்கிற படத்தை இயக்கியவர்.

வழக்கமாக சேரன் நடிக்கும் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்களுக்கு ஒரு அபிப்பிராயம் இருக்கும். ஆனால் அதை முற்றிலும் உடைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது ‘ராஜாவுக்கு செக்.’ இதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் முதல் பிரதி திரையுலகின் முக்கியமான சிலருக்கு திரையிட்டு காட்டப்பட்டுள்ளது.. இது சேரன் படம், குடும்பக் கதையாக இருக்கும் என்கிற நினைப்பில் படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு செம ஷாக்.

காரணம் படம் ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ பாணியில் இருந்ததுதான். சேரனோ சிகரெட் பிடித்து, துப்பாக்கி தூக்கி வேற லெவெலில் நடித்துள்ளதும், கதை செம விறுவிறுப்பாக நகர்ந்ததும்தானாம். 

குறிப்பாக காட்சிகளில் எப்போதுமே ஒரு எமோஷனும், த்ரில்லும் இருந்து கொண்டே இருந்ததாம்.  மிரட்டலான அதே சமயம் உணர்வுப்பூர்வமான இப்படிப்பட்ட  திரில்லர் படத்தை பார்த்ததே இல்லை என்று பார்த்தவர்கள் மிரண்டு போக… இந்த தகவல் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் கசிந்ததுமே, படத்திற்கான வியாபாரமே இப்போது வேறுவிதமாக மாறிவிட்டது என்கிறார்கள்.

நல்ல எமோஷனல் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்களுக்கும் சரியான வேட்டை ‘ராஜாவுக்கு செக்’ என்கிறார்கள் படம் பார்த்தவர்கள்.

Our Score