full screen background image

“ஒரே குடும்பமாக இருந்தோம்..” – மனம் நெகிழ்ந்த ‘ராஜவம்சம்’ படக் குழுவினர்..!

“ஒரே குடும்பமாக இருந்தோம்..” – மனம் நெகிழ்ந்த ‘ராஜவம்சம்’ படக் குழுவினர்..!

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா தயாரித்துள்ள திரைப்படம் ‘ராஜ வம்சம்.’

இந்தப் படத்தில் கதாநாயகனாக சசிகுமார் நடித்துள்ளார்.  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ‘ராஜ வம்சம்’ திரைப்படம் சசிகுமாரின் 19-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது..!

இந்தப் படத்தில் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா, சக்தி மணி, சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என்று குறிப்பிடத்தக்க 49 கலைஞர்கள் இந்தக் கலைஞர்கள் நடித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஒரு அறிமுக இயக்குநர், தனது முதல் படத்திலேயே 49 நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளது இதுவே முதன்முறையாகும்.

ஒளிப்பதிவு – சித்தார்த், இசை – சாம்.சிஎஸ்., கலை இயக்கம் – சுரேஷ், படத் தொகுப்பு – சபு ஜோசப், நிர்வாகத் தயாரிப்பு – N.சிவக்குமார், தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன் பரமசிவம்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான கதிர்வேலு இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுந்தர்.சி.யிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

RAAJAVAMSAM AUDIO LAUNCH (11)

விழாவில் தயாரிப்பாளர் டி.டி.ராஜா பேசும்போது, “இயக்குநர் கதிர்வேலு இந்தக் கதையை என்னிடம் சொன்னதும் சசிகுமாரிடம் கதையைச் சொல்லி தேதிகள் கேட்டோம். அவரும் உடனேயே தேதிகளைக் கொடுத்தார். அடுத்து இவ்வளவு நடிகர்களை வைத்து எப்படி  படம் எடுப்பது என்று யோசித்தேன். ஆனால் இயக்குநர் “சார் எடுத்துவிடலாம் சார்” என்று நம்பிக்கையாகச் சொன்னார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன் மற்ற அனைத்து  நடிகர்களும் யோசிக்காமல் தேதி கொடுத்தார்கள். இப்படத்தில் ஒத்துழைத்து கொடுத்து நடித்தவர்களுக்கும், பணியாற்றியவர்களுக்கு என் நன்றி..” என்றார்.

vijayakumar

நடிகர் விஜயகுமார் பேசும்போது, “இந்தப் படமே ஒரு ‘ராஜவம்சம்’தான். சசிகுமார் சிறந்த நடிகர் சிறந்த பண்பாளர், சிறந்த தம்பி. அவரைப் போல ஒருவரை நான் பார்த்ததே இல்லை. நிக்கி கல்ராணி நல்ல நடிகை. சிறப்பா நடிச்சிருக்காங்க. இத்தனை கலைஞர்களை வைத்து வேலை வாங்கும் திறமை கதிர்வேலு அவர்களுக்கு இருக்கிறது. இந்தப் படம் பெரிய குடும்பப் படம். தமிழ்நாட்டில் எல்லா குடும்பங்களும் பார்க்க கூடிய படமாக இருக்கும். இந்தப் படத்தில் பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்…” என்றார்.

r.k.selvamani

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் கதிர்வேலுக்கு எனது வாழ்த்துகள். ஏன்னா இவ்வளவு நடிகர்ளை ஒன்றாக வைத்து என்னால் ஒரு போட்டோகூட எடுக்க முடியாது. கதிர்வேலு நல்ல திறமையாளர். ஒரு படத்தில் ஹீரோ அட்ஜெஸ்ட் பண்ணிப் போகலன்னா படமே எடுக்க முடியாது. அதற்கு சசிகுமாருக்கு நன்றி.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் சார்பாக இங்கு வந்து நல்ல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார் அதன் தற்போதைய தலைவரான ராஜேஷ் கண்ணா. அவருக்கு எனது நன்றி. இந்தத் தயாரிப்பாளரை நான் இப்போதுதான் பார்த்தேன் என்று விஜயகுமார் சார் சொன்னார். அந்த வகையில் இயக்குநர் கதிர்வேலு கொடுத்து வைத்தவர். இந்தப் படம் செண்டிமெண்டாக நிச்சயம் ஓடும் என்று தோன்றுகிறது.

திட்டமிட்டு படத்தை முடித்திருக்கிறார் கதிர். இவ்வளவு பிரம்மாண்டமான படத்தை 50 நாட்களில் முடித்துள்ளது பெரிய விசயம். படப்பிடிப்பில் உயிரிழப்புகளை இனி தவிர்க்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்கள் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

radharavi

நடிகர் ராதாரவி பேசும்போது, “விழாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் என் வணக்கம். ராதாரவி பேசினால் சர்ச்சை என்கிறார்கள். என் பேச்சு புரியாதவர்களுக்குத்தான் சர்ச்சை. இந்தச் சகோதரர் கதிர்வேலு ரொம்பப் போராடி வந்திருக்கிறார். தயாரிப்பாளரை நான் இன்றுதான் பார்க்கிறேன். சசிகுமார்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். ரொம்ப தங்கமான பிள்ளை. இப்ப நிறைய நடிகர்கள் பாடிகார்டோடு வருகிறார்கள். சசிகுமார் ரொம்பவும் எளிமையாக இருக்கிறார். கேமராமேன் எங்களை போகஸ் பண்ணவே இல்லை. கேமராவுக்கு முன் யார் வருகிறார்களோ அவர்களை நிறுத்தி படமாக்கினார். இந்தக் கூட்டத்தில் நானும் ரொம்ப கஷ்டப்பட்டு நடித்தேன். ஆனால் சந்தோஷமாக நடித்தேன்.

சசிகுமாருக்கு இது செகண்ட் லைப் என்றார்கள். அவருக்கு இப்போது இருப்பதே நல்ல லைப்தான். நிக்கி கல்ராணி நல்லா நடிச்சிருக்கார். அவருக்கு எல்லாக் கேரக்டருக்கும் பொருத்தமான நடிகை. அவருக்கு எல்லா மொழியும் தெரியும் என்றார்கள். அது நல்ல விசயம். நானும் இந்தி கற்றிருந்தால் இன்றைக்கு அனைத்து மொழிகளிலும் நடித்திருப்பேன். எனக்கும் இந்திய சினிமாவில் ஒரு பெரிய இடம் கிடைத்திருக்கும். இந்தப் படத்தை குடும்பத்தோடு தியேட்டருக்கு வந்து பாருங்கள்…” என்றார்.

c.s.sam

இசையமைப்பாளரான சி.எஸ்.சாம் பேசும்போது, “வில்லேஜ் படங்கள் எல்லாம் எனக்கு வருவதே இல்லை. கூட்டுக் குடும்பத்தின் வேல்யூ எல்லாம் எனக்குத் தெரியும். எனக்கு கம்பம் அருகேதான் சொந்த ஊர். அதனால் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை படமாக்கும் படத்தில் வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு இயக்குநர் கதிர்வேலுக்கு நன்றி…” என்றார்.

nikki galrani

நாயகி நிக்கி கல்ராணி பேசும்போது, “நான் முழுக்க முழுக்க சிட்டில வளர்ந்த பொண்ணு. அதனால் கிராமத்து கல்ச்சர் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. நல்ல அனுபவத்தைத் தந்த கதிர்வேலு சாருக்கு நன்றி. சூட்டிங்ல நல்ல எக்ஸ்பீரியன்ஸ். இந்த ராஜவம்சம் படம் இவ்வளவு கிராண்டா இருக்குன்னா அதுக்கு மூன்று பேர்தான் காரணம். நடிகர் சசிகுமார் சார், தயாரிப்பாளர் ராஜா சார், இயக்குநர் கதிர்வேலு இவர்கள் மூன்று பேரும்தான் அதற்குக் காரணம். படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி…” என்றார்.

kathirvelu

இயக்குநர் கதிர்வேலு பேசும்போது, “சசிகுமார் சார் கதையைக் கேட்டுட்டு ‘ரொம்ப நல்லாருக்குடா’ என்றார். தயாரிப்பாளரும் கதையைக் கேட்ட உடனேயே என்னை கமிட் செய்தார். இந்தப் படம் இன்னைக்கு இப்படியொரு ஸ்டேஜ்ல இருக்கான்னா அதுக்கு முழு முதல் காரணம் ராஜா சார்தான்.

நான் யோசித்த விஷயத்தை ஸ்கிரீனில் கொண்டு வருவதற்கு ராஜா சார் ரொம்பவும் சப்போர்ட் பண்ணார். படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் நன்றாக உதவி செய்தார்கள். யாரும் என்னிடம் கதையே கேட்கவில்லை.  சசிகுமார், நிக்கி கல்ராணி இருவரிடம் மட்டும்தான் முழுக் கதையையும் சொன்னேன். கேமராமேன் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணார். அப்படியேதான் எடிட்டரும். இசையமைப்பாளர் சாம் என் டார்லிங். அவர் பக்காவாக பின்னணி இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.  இந்தப் படம் ரொம்ப, ரொம்ப நல்ல படம். அனைவரும் எனக்கு ஆதரவு தர வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

sasikumar

நடிகர் சசிகுமார் பேசும்போது, “இந்த ‘ராஜ வம்சம்’ திரைப்படம் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிச் சொல்ற படம். அதைக் குடும்பமாகப் பார்க்கும்போது நம்ம எல்லாருக்கும் பிடிக்கும். நாற்பது நடிகர்கள் இருக்கிற படம்னா பட்ஜெட் ஜாஸ்தியாக இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் தயாரிப்பாளர் ராஜா சார் ரொம்பவும் நம்பிக்கையாக இருந்தார்.

இந்தப் படம் ஒரு நல்ல பீல் குட் படமாக இருக்கும். பெரிய, பெரிய சீனியர் நடிகர்களோடு நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்ளோ பேரையும் சமாளித்த கேமராமேனும், இயக்குநரும் பாராட்டுக்குரியவர்கள். பர்ஸ்ட் இந்த டீம் பார்ம் ஆகுறதுக்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பின்னர் போகப் போக சரியாகிவிட்டது. இந்தப் படத்தில் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள். சினிமாவிலும் நாம் ஒரு குடும்பமாகத்தான் இருக்க வேண்டும்..” என்றார்.

Our Score