இம்ப்ரஸ் பிலிம்ஸ் சார்பில் பத்திரிகையாளர் கவிதா மற்றும் மெட்ரோ புரொடக்ஷன்ஸ் ஆனந்த கிருஷ்ணன் இணைந்து தயாரித்துள்ள ராபர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எம்.பாண்டி.
இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
இதில் சத்யா, தீபா சங்கர், ஜெயபிரகாஷ், சென்றாயன், டேனி போப், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : என்.எஸ்.உதயகுமார், இசை : ஜோகன் சிவனேஷ், படத் தொகுப்பு : ஸ்ரீகாந்த், கலை : விஜய் சரவணன், நடனம் : ஹரி கிருஷ்ணன், பாடல்கள் : அருண் பாரதி, லோகன், ஜோகன் சிவனேஷ், மெட்ராஸ் மீரான், சாரதி, வெளியீடு – சக்தி ஃபிலிம் ஃபேக்டரி, பத்திரிக்கை தொடர்பு : திரைநீதி செல்வம்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘மெட்ரோ’ என்ற ஒரு திரைப்படம் வெளிவந்திருந்தது. அந்தப் படத்தில் செயின் ஸ்நேச்சிங் செய்யும் கிரிமினல் குற்றவாளிகளின் வாழ்க்கை கதையை எடுத்திருப்பதாக சொல்லி செயின் ஸ்நேச்சிங் செய்வது எப்படி… போலீஸிடம் இருந்து தப்பிப்பது எப்படி… அதன் நகைகளை விற்பனை செய்வது எப்படி… என்று சகலத்தையும் இளைஞர்களுக்கு சொல்லிக் கொடுத்து தப்பான படமாக வந்திருந்தது. அந்த தப்பான படத்தின் அடுத்த பாகமாக இன்னொரு தப்பான படமாக இந்த ’ராபர்’ என்ற திரைப்படம் வந்திருக்கிறது.
‘ராபரி’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழாக்கமான ‘வழிப்பறி செய்பவன்’ என்கின்ற அர்த்தத்தில், ‘ராபன்’ என்று சொல்ல முடியாமல் ‘ராபர்’ என்று ஒரு மரியாதை கொடுத்து அந்த கிரிமனலை அழைத்து இப்படி ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள்.
‘மெட்ரோ’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்த அதே சத்யாதான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். கிராமத்தில் தன்னுடைய தாயுடன் வசித்து வந்தவர் தன்னுடைய படிப்பு ஏற்ற வேலை சென்னையில்தான் கிடைக்கும் என்பதால் அம்மாவை ஊரிலேயே இருக்க சொல்லிவிட்டு இவர் மட்டும் சென்னைக்கு வந்து ஒரு ஐடி நிறுவனத்தில் வேலைக்கு செல்கிறார்.
இப்போது கிடைக்கின்ற சம்பளம் அவருக்கு போதுமானதாக இல்லை. ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஹீரோ சத்யா அதற்கு கூடுதலாகப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். நேர்மையான முறையில் சம்பாதித்தால் பணம் வராது என்று நினைத்தவர் குறுக்கு வழியில், திருட்டு வழியில் இறங்குகிறார்.
டூவீலரில் சென்று பெண்களின் கழுத்தில் கழுத்தில் இருக்கும் செயினை அறுத்துவிட்டு தப்பிக்கும் ஒரு முதல் முயற்சியில் வெற்றி பெற்றதால் அதில் ஒரு தனி சுகத்தை கண்டடைகிறார் ஹீரோ சத்யா. இது அவருக்குள் ஒரு போதையை உருவாக்கிவிட இதுதான் குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க மிகச் சிறந்த வழி என்று கண்டறிந்து எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமரா இல்லையோ.. அந்த இடங்களில் எல்லாம் பெண்களிடம் வழிப்பறியில் தீவிரமாக ஈடுபடுகிறார் சத்யா.
கிடைக்கின்ற பணத்தில் கொஞ்சத்தை அம்மாவுக்கு அனுப்பிவிட்டு மீதி இருக்கின்ற பணத்தில் பெண்களிடம் ஜாலியாக இருப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் அவர் செய்கின்ற ஒரு வழிப்பறி அவருடைய வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப் போடுகிறது. நடிகர் ஜெயபிரகாஷின் மகளை இதேபோல் வழிப்பறி செய்து அவரிடமிருந்து நகைகளையும், பணத்தையும் கொள்ளை அடிக்கிறார். ஆனால் விடாமல் பின் தொடர்ந்து வரும் அந்தப் பெண்ணை மறுபடியும் தாக்கி சாகடித்துவிட்டு தப்பி ஓடுகிறார் சத்யா.
இந்த நேரத்தில் அவருடன் ஏற்கனவே கருத்து வேறுபாடு கொண்டு அவர் மீது கோபத்தில் இருக்கும் டேனி, அதை வீடியோ போட்டோ எடுத்து ஜெயபிரகாஷூக்கு அனுப்பி வைக்கிறார்.
ஜெயப்ரகாஷ் தன் மகளை கொலை செய்தவனை தீர்த்துக் கட்ட கொலை வெறியோடு காத்திருக்கிறார். அவர் விரித்த வலையில் சத்யா விழுந்தாரா…? கடைசியில் என்ன ஆனது..? ஜெயப்பிரகாஷ் பழி தீர்த்தாரா…? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
மெட்ரோ படத்தில் பார்த்த அதே சத்யாதான் இந்தப் படத்திலும்..! அப்பாவியான தன்னுடைய முக தோற்றத்திற்கு ஏற்ற நடிப்பை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார்.
தன்னுடைய முகத்தை வெளிக்காட்ட தயங்கி ஹெல்மெட்டுடனேயே பேசும் அந்த தெனாவட்டும், தன்னை எதுவும் செய்து விட முடியாது என்று நினைத்து தன்னைவிட பலம் வாய்ந்த ஆளையே அடித்து விரட்டும் அந்த ஆக்ரோசத்தையும் தன்னுடைய அழகான உடல் மொழி மூலமாக காண்பித்து நம்மை மிரட்டி இருக்கிறார் சத்யா.
தன்னுடைய ஒரே மகளை இழந்து தவியாய் தவிக்கும் ஜெயப்பிரகாஷ் ஒரு பரிதாபமிக்க அப்பாவின் நடிப்பை திரையில் காண்பித்து இருக்கிறார். இவருக்கு உதவி செய்ய வரும் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் பாண்டியனும் படம் முழுவதும் வெளிவந்து அவர் ஒரு நல்லதொரு நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
பாசமுள்ள அம்மாவான தீபா ஷங்கர் மகன் மீதான அந்தப் பாசத்தை அவ்வப்பொழுது காட்டுகின்றபொழுது இப்படியொரு அம்மாவுக்கு இப்படியொரு பிள்ளையா என்று நம்மையே கேட்க வைத்திருக்கிறார். அதே போல் கிளைமாக்ஸில் அவர் செய்யும் அந்த வெறித்தனமான செயல்.. அவரைப் பாராட்டுவதா வேண்டாமா என்கிற ஒரு குழப்பத்தில் நம்மை கொண்டு வந்து நிறுத்திவிட்டது.
வில்லன் கோஷ்டியில் நடித்திருக்கும் டேனியல், சென்றாயன் இருவரும் இந்த படத்தில் வித்தியாசமான கேரக்டர்ஸ் ஸ்கெட்ச்சுடன் படம் முழுவதும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்கள். அசத்தலான நடிப்பு டேனியலுக்கு.. வாழ்த்துக்கள். இன்னொரு பக்கம் சென்றாயன் பலவித கோணங்களில் ஜெயில் செல்லில் சத்யாவின் கதையை அவர் எடுத்துக் கொடுக்கும்விதமும் அதை படமாக்கியவிதமும் சிம்ப்ளி சூப்பர்.
உதயகுமாரின் ஒலிப்பதிவில் சென்னை நகரமே அழகாக காட்சியளிக்கிறது. செயின் பறிப்பு காட்சிகளை படமாக்கியவிதமும் அழகு. அதே சமயம் ஒரு அகோரத்தையும் கொடுக்கிறது.
இவ்வளவு கொடிய ஒரு குற்றத்தை செய்தவனை நிச்சயமாக மாறு கால்.. மாறு கை வாங்க வேண்டும் என்றுதான் நம்மில் பலரும் நினைப்போம். அப்படி ஒரு தாக்கத்தை இந்த ஒளிப்பதிவு செய்து இருக்கிறது.
இசையமைப்பாளர் ஜோகனின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம். படத் தொகுப்பு சிறப்பு. சண்டை காட்சிகளையும், செயின் பறிப்பு காட்சிகளையும் மிக அழகாக கத்தரித்து ஓட்ட வைத்துள்ளார். இதற்குப் பின்னணி இசையையும் மிக அழகாக போட்டுள்ளார் ஜோகன்.
தமிழகம் முழுவதும் தற்பொழுது தினமும் ஏதேனும் சில நகரங்களில் இது போன்ற செயின் பறிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் ஒரு சில இடங்களில் உயிர்களுக்கு ஏற்படுகின்றன.
எந்த ஒரு குற்றவாளியும் பிறக்கும் பொழுதே குற்றவாளியாக வேண்டும் என்ற நோக்கத்தில் பிறப்பதில்லை. ஆனால் அதன் பிறகு அவருடைய வளர்ச்சி, அவருடைய குடும்பம், வளர்ப்பு இதெல்லாம் சேர்ந்து அந்த இளைஞர்களை மடை மாற்றுகிறது.
உடனடியாக பணம் கிடைக்க வேண்டும். உழைக்காமல் பணம் கிடைக்க வேண்டும். சொகுசாக வாழ வேண்டும். பணக்காரனாக இருக்க வேண்டும் என்ற குறுக்குப் புத்தியில் அவர்கள் செய்கின்ற இது போன்ற செயல்கள் பல குடும்பங்களையும் பாதிக்கிறது.
இது போன்ற குற்றங்களில் ஈடுபவர்களை அந்த இடத்திலேயே தண்டிக்கும் அரசியல் சட்டம் நம்மிடையே இல்லை. நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் நிறுத்தி தண்டனை பெற்று தருவதுதான் நம்முடைய அரசியல் சட்டம் நமக்கு கொடுத்திருக்கும் விதி. இந்த விதிப்படி நடந்து கொண்டே போனால் இந்த செயின் பறிப்பு சம்பவங்களும் தொடந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தப் படத்தில் அதைக் குறிப்பிட்டு சொல்லும் இயக்குநர் படத்தின் மிக இறுக்கமான இயக்கத்தை காட்டி இருப்பதால் இந்தப் படம் எடுக்கக் கூடாத படமாகவே அமைந்துள்ளது.
இந்தப் படத்தை பார்க்கும் ஒரு சில திருடர்கள் மேலும் திருடலாமே என்றுகூட நினைக்கலாம். அல்லது திருடலாமா வேண்டாமா என்று சிந்திக்கின்ற இரட்டை மனநிலையில் இருப்பவர்கள் தேடித்தான் பார்ப்போமே என்று இறங்கலாம்.
இப்படியொரு தூண்டிவிடும் ஆபத்து கொண்ட இறுக்கமான இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது நிச்சயம் ஆபத்தானதுதான். அதே சமயம் மெட்ரோ படத்தில் இந்த மாதிரியான செயின் திருட்டுகள் ஈடுபடுபவர்கள் திருடிதான் சாப்பிட வேண்டும். அது எங்களுக்கு ஒரு போதை ஆகிவிட்டது. மதுப் பழக்கம் போல இதுவும் எங்களுக்கு போதை.. இதை தடுக்காதீர்கள் என்று சொல்வது போல இருந்தது.
அதனால் அந்த பட விமர்சனத்திலும் இந்த படம் வந்திருக்கக் கூடாத படம். எடுக்க கூடாத படம் என்றுதான் சொல்கிறோம். இந்தப் படத்தின் ஹீரோவுக்கு அவருடைய அம்மாவே தீர்ப்பு வழங்குகிறார் என்று சொல்லப்பட்டிருப்பது ஒரு பக்கம் ஏற்கக் கூடியதாக இருந்தாலும், இன்னொரு பக்கம் நிச்சயம் ஏற்க முடியாதுதான்.
இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்காக அந்த அம்மாவை குற்றம் சொல்லவே முடியாது. எந்த குழந்தையும் குற்றவாளியாக வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. இவனுடைய வளர்ப்பு சூழ்நிலை அருளிய அமைந்துவிட்டதற்கு பெற்ற தாயை குற்றம் சொல்ல முடியாது. அதற்கு பதிலாக அந்த அம்மாவே ஹீரோவை போலீசில் பிடித்துக் கொடுப்பதாக கதையை மாற்றி அமைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இதுபோன்ற மக்களை நேரடியாக பாதிக்கின்ற கதைகளை எடுக்கும் இயக்குநர்கள் தங்கள் சொல்லும் நீதியை வெளிப்படையாக மிக சரியாக சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் இதில் இருக்கும் சுகத்தை மட்டுமே இன்றைய இளைய சமுதாயத்தினர் அபகரித்துக் கொள்வார்கள்.
இதிலிருக்கும் நீதி அவர்களுக்கு இப்போதைக்கு தேவைப்படாததாகிவிடும். ஆக அவர்களுடைய வாழ்க்கையை திசை திருப்பிய பாவம் இந்தப் படத்தின் இயக்குநரையே சேரும். ஆகவே இயக்குநர்கள் மிகுந்த கவனத்தோடு இது போன்ற படங்களை கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
RATING : 3 / 5









