நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனத்தின் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை.’
நடிகர் ருத்ரா நடிப்பில் மகேஷ் பத்மநாபன் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இ்ந்த விழாவில் படக் குழுவினர் உள்பட பல்வேறு திரை பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “இந்தப் படத்தின் தலைப்பை யார் வைத்தார்கள் என்று தெரியாது. மிக அருமையான தலைப்பு. இன்று சினிமாவில் கன்டென்ட்தான் ட்ரெண்ட்.

பெரிய ஹீரோ படமாக இருந்தாலும் படத்தில் என்ன விசயம் இருக்கு என்பதைத்தான் ரசிகன் பார்க்கிறான். நல்ல கதையை அழகாகச் சொன்னால் போதும். அது ஜனங்களுக்குப் பிடித்தது என்றால் அந்த ஹீரோ பெரியாள் ஆகிவிடுவார்.
விமர்சனங்களைப் பற்றி கவலையே படக் கூடாது. ப்ளு சட்டை மாறன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அவர் நிறைய படங்களை கழுவி, கழுவி ஊற்றியிருக்கிறார். இப்ப அவர் படத்தை வேறு யாரோ விமர்சிக்கிறாங்க. ஆனால் நாம் யாரையும் விமர்சிக்கக் கூடாது. நாம் கிரியேட்டர்ஸ். படைப்புகள் தோற்றாலும் படைப்பாளிகள் தோற்க மாட்டார்கள்.
வெளிவரும் முன்பே இப்படம் ஏழெட்டு விருதுகள் வாங்கியிருக்கிறதென்றால் அது மிகப் பெரிய விசயம் அல்லவா? இந்தப் படம் மீண்டும், மீண்டும் விருதுகளைப் பெறட்டும். பெரிய வெற்றியைப் பெறட்டும்” என்றார்.
படத்தின் கதாநாயகனான ருத்ரா பேசும்போது, “இந்த ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் எனது இரண்டாவது திரைப்படம். என்னோட அம்மாதான் நான் நடிகனாகணும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாங்க. இப்போது என் அம்மா இல்லை. மிஸ் யூ அம்மா.

ஒரு படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மீடியாக்கள்தான். மீடியா நண்பர்களுக்கு நன்றி. இன்றைய ஹீரோ மியூசிக் டைரக்டர்தான். படத்தில் மூன்று பாட்டுக்களை கொடுத்திருக்கிறார். அவர் எனக்குச் சகோதரர். பாடலாசிரியர் ‘கட்டளை’ ஜெயா அவர்கள், கொரியாகிராபர் இவர்கள் எல்லாரின் டெடிகேசனும் ரொம்ப முக்கியம்.
இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கோம். லொக்கேசன்கள் எல்லாமே காடுதான். காட்டு மிருகங்கள் உள்ள இடங்கள்தான். வண்டிகள் போக வசதி கிடையாது. ரொம்பவே கஷ்டப்பட்டோம். படத்தில் பங்கு பெற்ற எல்லாருக்கும் மிக்க நன்றி..” என்றார்.
தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது, “சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ என்பது இலக்கிய நயமிக்க ஒரு டைட்டில். இப்படத்தின் நாயகன் ருத்ராவின் தந்தையை நான் வாழ்த்தி வரவேற்கிறேன்.

நான் இந்தப் பதினைந்து நாட்களில் மூன்று வித்தியாசமான படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். சிறு படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஆத்மார்த்தமான மனதோடு இந்த விழாக்களுக்கு வாழ்த்த வருகிறோம்.
இந்தப் படம் வெற்றி பெற்று அசல் தேறினாலே போதும். தயாரிப்பாளர் ரகுமான் அண்ணன் உடனே ரெண்டு படத்தை அறிவிச்சுடுவார்.
50 கோடி 100 கோடி வாங்குற ஹீரோக்களை கேட்கிறேன். நீங்க வாங்குற காசு எல்லாம் சினிமாவுக்கு திரும்பி வந்துள்ளதா..? உங்களால் இந்த தமிழ்நாட்டுக்கு என்ன பயன்? ஏழை ரசிகர்கள் தர்ற பணம்தானே உங்களை கோடீஸ்வரர்கள் லிஸ்ட்டில் இடம் பிடிக்க வைத்தது..?
இங்கே ஒரு தமிழ் நடிகை அழகாக சேலை கட்டி வந்திருக்கிறார். இதே ஒரு நார்த் பொண்ணு என்றால் எப்படி வருவார்கள்..? நம் படங்களில் தமிழ் பெண்களையே நடிக்க வையுங்கள்.
நடிகர் ருத்ரா மலையாளிதான். ஆனால், துணிச்சலாக இங்கே வந்து ஒரு தமிழ்ப் படத்தினை எடுத்திருக்கிறார். மற்ற மாநிலத்தவர்கள் இங்கே வந்து படம் எடுக்க வருவதற்கான அனுமதி பிரச்சனைகளையும் சரி செய்ய வேண்டும். இத்திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்” என்றார்.