full screen background image

கூலிப்படை தலைவியாக பிரியாமணி நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்

கூலிப்படை தலைவியாக பிரியாமணி நடிக்கும் ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்

நடிகை பிரியாமணி தற்போது இந்தி படங்கள், வெப் தொடர்களில் விதவிதமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரில் ‘ரா’ பிரிவு அதிகாரியாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த ‘ஜவான்’ படத்தில் வில்லன்களுக்கு எதிரான போராளியாக நடித்திருந்தார். மேலும் ‘மைதான்’ என்ற படத்தில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘கொட்டேஷன் கேங்’ என்ற தமிழ் படத்தில் கூலிப்படை தலைவியாக நடிக்கிறார்.

ஸ்ரீகுருஜோதி பிலிம்ஸ் மற்றும் பிலிமினாட்டி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் காயத்ரி சுரேஷ், விவேக் கண்ணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரியாமணியுடன் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், சாரா அர்ஜூன், அஷ்ரப் மல்லிசேரி, அக்‌ஷயா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார். தயாரிப்பாளர் விவேக் குமார் கண்ணனே படத்தை இயக்கியுள்ளார்.

படம் பற்றி இயக்குநர் விவேக் குமார் கண்ணன் பேசும்போது, “இது கேங்ஸ்டர் பின்னணியிலான க்ரைம் திரில்லர் படம். கொட்டேஷன் கேங்’ என்ற பெயரில்லாமல் வேறு சில பெயரிலும் இங்கே பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. முக்கியமாக போதை வஸ்துகள் நாட்டில் கணிசமாகப் புழங்குகின்றன.

அதிகமாக நம் கவனத்துக்கு வராத அந்த போதை உலகத்தில் நம் இளைஞர்கள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பத்திரிகைகளில் வந்த இந்த போதை சாம்ராஜ்யம் பற்றி அறிந்து, எனக்குத் தெரிந்த சில இளைஞர்கள் வாழ்க்கையை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்.

எதனால் இளைஞர்கள் அந்த போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என்பதை நாமும் படத்தில் காட்சி வடிவத்தில் சொன்னால்தான் அதிலிருந்து எப்படி மீள முடியும் என்பதையும் மீண்டவர்களின் கதை என்ன என்பது பற்றியும் படம் பார்க்கும் ரசிகர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இது போதைக்கு அடிமையானால் எத்தனை இன்பம் வரும் என்றெல்லாம் ஊக்குவிக்கும் படமாக நிச்சயமாக இருக்காது. கடைசியில் அதில் சிக்குண்ட சாரா எப்படி மீள்கிறார் என்பது பற்றியும் தன் வாழ்க்கை இதனால் எவ்வளவு கெட்டுப் போனது என்பது பற்றியும் புரிந்து கொள்வதாக வருவதால் இது இளைஞர்களுக்கான விழிப்புணர்வு படமாகவும் எச்சரிக்கை படமாகவும்தான் இருக்கும்.

ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசமும் இந்த படத்துக்குள் இருக்கிறது. சாராவின் பருவத்தில் இருக்கும் பெண்தான் இதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரது தந்தை அர்ஜுனிடம் பேசியபோது அவர் மகள் இப்படி நடிப்பதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. முதலில் மறுக்கவே செய்தார்.

பின்பு, படத்தின் தன்மைகளை அவருக்குத் தெளிவாக எடுத்துரைத்து இதனால் சாராவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த பாதிப்பும் வராது என்று புரிய வைத்த பின்புதான் அவர் சாராவை நடிக்க வைக்க ஒத்துக் கொண்டார்.

சின்னப் பெண் சாராவும் நான் சொல்வதைப் புரிந்து கொண்டு மிக அழகாக நடித்திருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதவாறு நான் மிகவும் பொறுப்புடன் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.

இதே போல்தான்  ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, விகாஸ் வாரியர் முதலானவர்களும் இந்தப் படத்துக்குள் வந்திருக்கிறார்கள். அவர்கள் ஏற்று இருக்கும் பாத்திரங்களும்கூட இதுவரை நாம் அதிகம் அறிந்திடாத நிழல் உலகத்தைப் பற்றியே இருக்கும்.

கதைப்படி நாயகி பிரியாமணி சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு கேங்ஸ்டர் கூட்டத்தில் இணைந்து விடுகிறார். பின்னர் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கூலிக்காக கொலை செய்யும் கும்பலுக்கு தலைவி ஆகிறார். அதில் தொடர்ந்து அவர் நீடித்தாரா? வெளியில் வந்தாரா? என்பதுதான் கதை.

அவரை சுற்றியே திரைக்கதை அமைந்திருந்தாலும் இது ஒரு ஹைப்பர் லின்க் கதை. ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையான சாரா அர்ஜூன், காஷ்மீரில் வாழும் லெஸ்பியன் ஜோடிகளாக இருக்கும் கிரா, சோனல் ஆகியோரின் கதையும் பிரியாமணியின் கதையோடு இணையும்.

இந்தப் படத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கிய நிலையில் பிரியாமணி துணிச்சலுடன் நடித்துக் கொடுத்தார். படத்தில் பல சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்திருக்கிறார். கேங்ஸ்டர்களுக்கு அசைன்மெண்ட் கொடுக்கும் தரகராக ஜாக்கி ஷெராப் நடித்துள்ளார். அவரது மனைவியாக சன்னி லியோன் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு வித்தியாசமான இசை வேண்டி டிரம்ஸ் சிவமணியை ஒப்பந்தம் செய்தேன். அவரும் தன்னுடைய அதிகப்பட்ச திறமையை வைத்து இந்தப் படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் அற்புதமாக அமைத்திருக்கிறார். அதைப்போல் அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவும். இந்தப் படத்துக்கு புதிய நிறத்தை தந்திருக்கிறது.

வெறும் வன்முறையும், தீய பழக்கங்களை பற்றி மட்டுமே சொல்லும் படமாக இல்லாமல் இந்தப் படம் நிச்சயமாக ஒரு விழிப்புணர்வுப் படமாக இருக்கும்.

இதனால் இந்தப் படத்தை இளைஞர்கள் மட்டுமல்லாது அவர்களுடைய பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் இன்றைய பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் தன் கண்ணுக்கு தெரியாமல் என்னென்ன செய்கிறார்கள்… எப்படி வளர்கிறார்கள் என்பது தெரியாமலேயே இருக்கிறது.

போதைப் பழக்கத்தில் சிக்கிக் கொண்ட பல இளைஞர்களின் குடும்பங்களில் இருக்கும் பெற்றோரின் நிலையும் இதுதான். அதனால், அவர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுறுத்தும் படமாகவும் இந்த ‘கொட்டேஷன் கேங்’ படம் இருக்கும்.

காஷ்மீர், மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.  அடுத்த மாதம் இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகிறது…” என்றார்.

Our Score