பி.வி.பி. சினிமாஸ் தென்னிந்திய திரையுலகில் தங்களுடைய ஆளுமையை மேலும் மேலும் உறுதிப்படுத்தி வருகிறார்கள். பிரமிப்பூட்டும் பிரம்மாண்டமான படங்களை வரிசையாக தயாரித்து வழுங்குவதன் மூலம் திரைப்பட வர்த்தகத்தில் பெரிதான ஒரு மாற்றத்தை தருவதில் முனைப்போடு இருக்கிறார்கள்.
இன்று 2015, மார்ச் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்னையில் ஒரு எளிமையான பூஜை மூலம் தங்களது அடுத்த படைப்பை துவக்கியுள்ளனர். தென்னிந்தியாவில் எல்லா மொழி பேசுபவர் இடையேயும், எல்லா பிராந்தியத்திலும் புகழ் பெற்று இருக்கும் நாகர்ஜுனாவும், கார்த்தியும் இணைந்து நடிக்கும் இந்த படம் ஏராளமான பொருட்செலவில் தயாராகிறது.
இவர்களது கூட்டணி வர்த்தக ரீதியாக அகில இந்திய அளவில் உள்ள நடிகர்களுக்கும் சவால் விடும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்கள் எனப்படும் எல்லா படங்களிலும் நாயகியாக நடித்துவரும் ஸ்ருதிஹாசன் இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தெலுங்கில் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட நடிகர்களோடு தொடர்ச்சியாக வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்குகிறார்.
‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘பெங்களூர் டேய்ஸ்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்த கோபி சுந்தர் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தன்னுடைய பிரத்தியேக கை வண்ணத்தால் ஒளிப்பதிவுத் துறையில் பெரும் பெயர் பெற்ற ஒளிபதிவாளர் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
தனனுடைய அழகாலும், திறமையாலும் தென்னிந்திய ரசிகர்களை கட்டி போட்ட மூத்த நடிகை ஜெயசுதா இந்த படத்தில் கார்த்திக்கு அம்மாவாக நடிக்கவுள்ளார். விவேக்குடன் மனோபாலாவும் இணைந்து ரசிகர்களை நகைச்சுவை மூலம் விலா நோக சிரிக்க வைக்க உள்ளனர்.
மூத்த நடிகரும், கார்த்தியின் தந்தையுமான சிவகுமார் விழாவுக்கு வருகை தந்ததோடு இல்லாமல் தனது நகைச்சுவை உணர்வு மிகுந்த பேச்சால் எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். தன்னுடைய இளமையான தோற்றத்தின் மூலம் இன்றைய இளம் நடிகர்களை நாண வைக்கும் பொலிவுடைய நடிகர் சிவகுமார் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
உற்சாகமும், நல்லெண்ணமும் நிரம்பியிருந்த இந்த படப்பிடிப்பு தளம் படத்தின் மூலக் கருத்தான சகோதரத்துவமான தோழமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
பி.வி.பி. சினிமா சார்பில் வினய் சிலக்கபதி, ஏ.ஆர்.அரசு, கண்ணன், ராஜீவ் கம்மிநேணி மற்றும் Four frames கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.