அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது

அனைத்திந்திய படமான ‘புஷ்பா’வின் முதல் பார்வையான ‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, அதன் தயாரிப்பாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை முட்டம் செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்சின் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் ஆகியோர் தயாரிக்கின்றனர். இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று இதன் தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சுடன் நடந்து வருகிறது. இன்னும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடிவரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. படத்தின் கதையை விரிவாகச் சொல்ல வேண்டிய தேவை இருப்பதால்தான் இந்த இரண்டு பாகங்கள் என்ற முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச காடுகளில் நடைபெறும் செம்மர திருட்டு குறித்து இந்த ‘புஷ்பா’ திரைப்படம் விவரிக்கிறது. இப்படத்திற்காக முதல் முறையாக  அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தண்ணா ஆகியோர் கை கோர்த்துள்ளனர்.

இயக்குநர் சுகுமார் மற்றும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உடன் மீண்டும் இணைந்துள்ள அல்லு அர்ஜுன், இந்த அகில இந்திய திரைப்படத்தின் முதல் பார்வை மூலம் தனது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர்கள் நவீன் எர்நேனி மற்றும் ஒய் ரவி ஷங்கர் பேசும்போது, “நாங்களே எதிர்பார்க்காத வண்ணம் இந்தப் புஷ்பா’ படத்தின் கதையும், கதாபாத்திரங்களும் உயிர் பெற்று, வளர்ந்து நின்றிருப்பதால், படத்தில் இரண்டு பாகங்களாக வெளியிட்டால்தான் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளோம்.

‘புஷ்பராஜ் அறிமுகம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இரண்டு பாகங்களாக திரைப்படத்தை வெளியிட இருக்கிறோம்.

சிறந்த நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் எங்களுடன் இருப்பதால், இந்த கதையின் மூலம் திரையரங்குகளில் மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம்..” என்று தெரிவித்தனர்.

இந்த ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் 2021 ஆகஸ்ட் 13 அன்று வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு வெளியாகும்.

 
Our Score