ஒரு விளையாட்டு மைதானத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் இது. தொழில் நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்து இருந்தாலும், விளையாட்டும், விளையாட்டு மைதானமும் நம் மனதுக்கு மிக நெருங்கிய விஷயமாக இருக்கிறது.
விளையாட போகிறார்களோ இல்லையோ.. விளையாட்டு மைதானம் பயிற்சி செய்யவும், அரட்டை அடிக்கவும் தோதான இடமாக இருந்து கொண்டேதான் இருக்கும். பல்வேறு உறவுகள் உருவாகும் இடமாக விளையாட்டு மைதானம் இருக்கும்.
அத்தகைய ஒரு விளையாட்டு மைதானத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதைக் காப்பாற்ற நினைக்கும் அங்கே நித்தமும் விளையாடும் இளைஞர்களுக்கிடையே நடக்கும் இழுபறிதான் இந்த ‘புகழ்’ திரைப்படம்.
ஜெய், நாம் அன்றாடம் சந்திக்கும் இளைஞர்களில் ஒருவரை ‘புகழ்’ படத்தில் பிரதிபலிக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி இருக்கிறார். அவருக்கு அண்ணனாக நடிக்கும் கருணாஸ் ஒரு உண்மையான அண்ணனை பிரதிபலிக்கிறார். கதாநாயகி சுரபி இந்தப் படத்துக்கு பிறகு ரசிகர்களிடம் மிகவும் பரிச்சயம் ஆனவராக இருப்பார். இயக்குநர் மணிமாறன் மிகவும் தெளிவான முறையில் இந்தப் படத்தை படமாக்கியுள்ளார்.
விவேக் மெர்லின் இரட்டை இசை அமைப்பாளர்கள் இந்தப் படத்தின் பாடல்கள் மூலம் தமிழ் திரையுலகில் நிரந்தர இடம் இருப்பவர்கள். வேல்ராஜின் ஒளிப்பதிவில், ராமலிங்கத்தின் கலை வண்ணத்தில், வெங்கடேஷின் பட தொகுப்பில், திலிப் சுப்புரயனின் சண்டை காட்சிகளில், வனிதாவின் உடை அலங்காரத்தில், Radiance மீடியா வருண் மணியன் வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் வாலாஜாபேட்டை அருகே உள்ள இடங்களில் நடைபெற்றது.
இப்போது இறுதிக்கட்ட தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெளிவந்த ‘புகழ்’ படத்தின் பாடல்களும், முன்னோட்டமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“வெகு விரைவில் படத்தை வெளியிட உள்ளோம். பெயருக்கு ஏற்ப ‘புகழ்’ படம் இருக்கும்..” என நம்பிக்கையோடு தெரிவித்தார் தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத்.









