full screen background image

பி டி சார் – சினிமா விமர்சனம்

பி டி சார் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி.கே.கணேஷ் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹிப் ஹாப்தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கஷ்மிரா பர்தேசி நடித்திருக்கிறார். இவர்களுடன் அனிகா சுரேந்திரன், பிரபு, முனீஷ்காந்த், ஆர்.பாண்டியராஜன், இளவரசு, தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மாதேஷ் மாணிக்கம், இசை – ஹிப் ஹாப்தமிழா ஆதி, தயாரிப்பு வடிவமைப்பு – அ.அமரன், படத்தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, சண்டை இயக்கம் – மகேஷ் மாத்யூ, நடன இயக்கம் – சந்தோஷ். உடைகள் வடிவமைப்பு – ஸ்வப்னா ரெட்டி, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜாஎனும் படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன்தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பாக கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்த சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஈரோட்டில் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனத்தின் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் நாயகன் ஆதி. அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றி வரும் காஷ்மீரா மீது இவருக்கு ஒரு தலைக்காதல்.

ஆதியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வரும் இளவரசுவின் மகளான அனிகா, ஆதி வேலை பார்க்கும் அதே கல்வி நிறுவனம் நடத்தி வரும் கல்லூரியில் படித்து வருகிறார். ஒரு நிகழ்ச்சிக்காக மாடர்னாக உடையணிந்து சென்ற அனிகாவை நான்கு ரவுடிகள் கட்டிப் பிடித்து ரவுடித்தனம் செய்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இது இவர்கள் வீட்டருகே வசிக்கும் மக்களிடையே பேசு பொருளாகிறது.

ஆதிக்கும், காஷ்மீராவுக்கும் இடையேயான காதல் ஓகேவாகிறது. காஷ்மீராவின் அப்பா பிரபு அந்த ஊரிலேயே மிகப் பெரிய கிரிமினல் லாயர். அவர் அந்தஸ்து பார்க்காமல் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்க நிச்சயத்தார்த்தத்திற்கு ஏற்பாடுகள் நடக்கிறது.

அன்றைய தினம் அனிகா மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையின் பின்னணியில் கல்வி நிறுவனத்தின் தலைவரான தியாகராஜன் இருப்பதாக ஆதிக்குத் தெரிய வருகிறது.

இதையடுத்து தியாகராஜன் மீது போலீஸில் புகார் கொடுக்கிறார் ஆதி. விஷயம் கோர்ட்டுக்குச் செல்கிறது. தியாகராஜன் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கேஸை திசை திருப்புகிறார்.

இறுதியில் என்னவாகிறது..? அனிகாவை யார் கொலை செய்தது..? தியாகராஜன்தான் குற்றவாளியா..? நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நாயகன் ஆதி இரண்டுவிதமான கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பு தொடை நடுங்கி பயில்வானாகவும், பிடி வாத்தியார் என்ற தோற்றத்திற்கே கொஞ்சமும் பொருத்தமில்லாதவராகவும், மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவராகவும் நடித்துள்ளார். இடைவேளைக்குப் பின்பு கொஞ்சம் வீரம் மிக்கவராகவும், சமூகப் பற்றுள்ளராகவும் நடித்துள்ளார். இந்த உருமாற்றம் ஏன், எதனால் நடந்தது என்பது படம் பார்த்தவர்களுக்கே தெரியாத ரகசியம்..!

நடிப்பில் ஆதியின் முகம் காட்டும் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் எப்படி பார்த்துப் பாராட்டுவது என்று தெரியவில்லை. பள்ளியில் சிறந்த ஆசிரியராக இருப்பார் என்று எதிர்பார்த்தால் இங்கிலீஷ் டீச்சரை சைட் அடித்தே பிழைப்பை ஓட்டும் ஒரு சராசரி இளைஞனாகவே பல காட்சிகளில் வலம் வருவது எரிச்சலோ எரிச்சல்..! இவரைப் பார்த்து நாயகி எதற்காக ஐ லவ் யூ சொல்கிறார் என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

இடைவேளைக்குப் பின்பு ஆளே மாறிப் போய் அம்மா தேவதர்ஷிணியிடம் பெண்ணுரிமைக்காகப் போராடும் காட்சிகளிலும், நீதிமன்றக் காட்சிகளிலும்தான் கொஞ்சமேனும் நாயகனைப் போல தென்படுகிறார் ஆதி. ஆனாலும் இன்னமும் ஒரு நாயகனுக்கான கெத்து ஆதிக்கு வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்படியொரு பரிதாபமான தோற்றத்தில் ஒரு நாயகியைப் பார்ப்பது இதுதான் முதல் முறை..! அவ்வளவு பாவப்பட்ட பெண்ணாக இருக்கிறார் காஷ்மீரா. அதோடு அவர் அணிந்திருக்கும் உடைகளும் சாதாரண குரூப்பாக நிற்கும் பெண்கள் அணிந்திருப்பதாகவே தெரிய.. ஹீரோயின் யார் என்று லேட்டாக வரும் ரசிகர்கள் கேட்கும் நிலைதான் இருக்கிறது.

ஜோதிடத்தை முழுமையாக நம்பி தன் மகன், தன் குடும்பம் என்று வாழும் அம்மா தேவதர்ஷிணி பாலியல் சீண்டல் பற்றிப் பேசும் அந்த ஒரு காட்சியில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார். சிறந்த நடிப்பு.

இவரைப் போலவே மகளின் வாழ்க்கையையும், குடும்பத்தையும் நினைத்து வருத்தப்பட்டு கத்திக் கூச்சல் போட்டு அழது தீர்க்கும் அம்மாவாக வினோதினியின் நடிப்பும் சராசரி பெண்களின் வெளிப்பாட்டைக் காட்டுகிறது. பாராட்டுக்கள்.

சிறந்த அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு தனது அட்டகாசமான நடிப்பால் அசத்தியிருக்கிறார். மகளாக இருக்காது என்று நினைத்து சடலத்தின் அருகில் செல்லும் காட்சியிலும், நீதிமன்றத்தில் அழுது, புலம்பும் காட்சியிலும் நெகிழ வைத்திருக்கிறார்.

பிரபுவின் கிரிமினல் லாயர் கதாப்பாத்திரம் பிற்பாதியில் திரைக்கதைக்கும், ஆதிக்கும் உதவியிருந்தாலும், அவரே வீட்டில் வைத்து ரவுடிகளையே அடித்து உதைக்கும் அளவுக்கு டானாக இருக்கிறார். கோர்ட், கேஸ், போலீஸ் என்று போகாமல் இவரை வைத்தே தியாகராஜனை மடக்கும்விதமாக திரைக்கதையை உருமாற்றியிருக்கலாமே.. சுவாரஸ்யமாக இருந்திருக்கும்..!

காமெடியன்களாகவே நடித்திருக்கும் பிரின்ஸிபால் பாண்டியராஜனுக்கும், வாத்தியார் முனீஷ்காந்துக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்..!

தியாகராஜன் இந்தக் கதாப்பாத்திரத்தில் எப்படி நடித்தார் என்று தெரியவில்லை. ஆனாலும் நடித்தவிதத்தில் அந்த வில்லத்தனத்தை அழகாகக் காட்டியிருக்கிறார்.

இவர் போன்ற பணக்காரர்களுக்கு சேவை செய்யவே சட்டம் படித்து சட்டத் தரணியாக வலம் வரும் ஒரு மேட்டுக்குடி வக்கீலாக நடித்திருக்கும் மதுவந்தி, தனது பேச்சிலேயே ஆணவத்தையும், கிண்டலையும் சொல்லி டென்ஷனைக் கூட்டுகிறார்.

இந்தப் படம் சிரிப்புப் படமா.. சீரியஸ் படமா என்று சந்தேகம் வரும் அளவுக்கு நீதிபதியான கே.பாக்யராஜ் நடித்திருப்பது, படத்திற்குக் கிடைத்திருக்கம் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்.

பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசையும் அதேபோல்தான். ஆனால் ஒளிப்பதிவு அழகு. கடைசிவரையிலும் தரமானதாகவே கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஆனால், படத்தில் சுவாரஸ்யமற்றுப் போயிருப்பது நீதிமன்றக் காட்சிகள்தான். இரு தரப்பினருமே ஒருவரையொரு ஏமாற்றும்விதமாக சாட்சிகளை திடீர், திடீரென்று கொண்டு வந்து நிறுத்துவதும், கடைசியாக மொத்தக் கூடையையும் மொத்தமாகத் தலைகீழாகக் கவிழ்ப்பதுபோல கதையை மாற்றியிருப்பதும் லாஜிக்கே இல்லாதது.

மாணவர்களது மனக் குறைகளை எழுதுவதற்காகவே பள்ளியில் ஒரு சுவர் இருப்பதும், மாணவர்கள் தங்களது குறைகளை அதில் எழுதி, தங்களது மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதுமான திரைக்கதை படத்திலேயே அழகானது..!

பெண்களின் உடைதான் பாலியல் பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமா என்ற சர்ச்சைக்கு இந்தப் படம் பதில் சொல்லியிருப்பது ஒருவிதத்தில் சிறப்புதான். ஆனால், அந்த உடை கண்ணியமாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தமாகச் சொல்லாமல் எந்தவித ஆடையும் என்று சொல்லியிருப்பது ஏற்க முடியாதது..!

சினிமாவில் கிளப் டான்ஸில் ஆடும் உடையை அணிந்து கொண்டு திருமணக் காட்சியில் அமர முடியாது என்பதும், திருமணக் கோலத்தில் கிளப் டான்ஸூக்குள் ஆட முடியாது என்பதையும் நாம் அனைவரும் ஏற்கத்தான் வேண்டும். ஆக “எது கண்ணியம்” என்பதை வேறொரு படம் வந்து சொல்ல வேண்டும் போல..!

இன்னொரு பக்கம் உலகத்தில் எல்லா தேசங்களிலும் அனைத்து வகையான வயதில் இருக்கும் பெண்களும் தினம், தினம் ஏதாவது ஒரு நிலையில் ஆண்களின் பாலியல் சீண்டலை சந்தித்து, அதைத் தாண்டித்தான் செல்கிறார்கள். வந்திருக்கிறார்கள். இந்த உண்மையை உரக்கச் சொன்ன விஷயத்துக்காகவும் இந்தப் படத்தை நாம் பாராட்டலாம்தான்.

கடைசியாக தானே ஒரு கல்வித் தந்தையாக இருந்தும், நாட்டில் சில கல்வித் தந்தைகள் இப்படியும் இருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொன்னதற்காக, படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் அவர்களுக்கும் நமது பாராட்டுக்கள்..!

RATING : 3 / 5

Our Score