‘சைக்கோ’ படத்தை விமர்சித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மிஷ்கின்..!

‘சைக்கோ’ படத்தை விமர்சித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மிஷ்கின்..!

Double Meaning Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்த ‘சைக்கோ’ திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார். 

உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன், இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

கடந்த வாரம் வெளியான  இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி,  ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது. 

படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என ‘சைக்கோ’ படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று ‘சைக்கோ’ படத்தின் வெற்றி விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

IMG_0298

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசும்போது, “பத்திரிக்கை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்தப் படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி…” என்றார். 

நடிகர் பவா செல்லத்துரை பேசும்போது, “எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் உயிருக்கும் அதிகமான நேசிப்பையும், இந்தப் படம் நல்லா இல்லை  என்று சரி பாதியாகவும் எதிரெதிர் விமர்சனங்கள் வந்தது இந்தப் படத்திற்குத்தான்.

IMG_0437

மிஷ்கின் படங்களின் உலகமே வேறு. அவர் திரையில் மனித வாழ்வை சீட்டுக் கட்டுக்களைப்போல் பிரித்து போடுகிறார். அதில் நீங்கள் லாஜிக் தேடக் கூடாது. இந்தப் படம் மிஷ்கின் படம். அவரது சாயல்தான் படம் முழுதும் இருக்கும். அவர் கதாப்பாத்திரங்களை வித்தியாசமாக அணுகுகிறார்.

பாண்டியராஜன், கே.பாக்யராஜ் என நமக்கு தெரிந்த நடிகர்களை நாம் அவர்களை பார்க்காத கோணத்தில் காட்டியிருக்கிறார். நேரடி வாசகர்களுக்கு இந்தப் படம் நிறைய தடுமாற்றங்கள் தரும். மிஷ்கின் இப்படத்திற்குள் பல நுட்பங்களை நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமா மறக்க முடியாத படத்தைத் தந்திருக்கும் என் நண்பன் மிஷ்கினுக்கு என் வாழ்த்துகள்…” என்றார். 

நடிகர் சிங்கம் புலி பேசும்போது, “எல்லா இயக்குநர்களுடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா நடிகர்களுக்கும் இருக்கும்.  அந்த ஆசை இந்த ஆண்டு எனக்கு நிறைவேறியிருக்கிறது.

singam puli

மிஷ்கினை  எப்படி அணுகுவது எனும் தயக்கம் எனக்குள் இருந்தது. ஆனால் இந்தப் பட வாய்ப்பு தானாகவே என்னைத் தேடி வந்தது. இப்போது அவரது படத்தில் நடித்தது எனக்குப் பெருமை. என்னை எப்படி இப்படி மாற்றினார் எனத் தெரியவில்லை. அவர் சொன்னதை மட்டுமே செய்தேன். ஆனால் வித்தியாசமாக இருந்தது. இந்த ஆண்டில் எல்லோரும் ரசிக்கும்படியான ஒரு படத்தைத் தந்திருக்கிறார்.

சைக்கோவை வைத்து ‘கருப்பு கண்ணாடி’ என்ற படம் ஆரம்பிப்பதாக இன்று படித்தேன். இனி மிஷ்கின் பற்றி படங்கள் வரத்தான் செய்யும். அவர் வெற்றி பெற்றிருக்கிறார். நான் இந்தப் படத்தில் நடித்த அனைத்து காட்சிகளும் வந்திருந்தது. அவ்வளவு திட்டமிடலுடன் படத்தை எடுத்துள்ளார். இப்படத்தை ஆதரித்த அனைவருக்கும் நன்றி…” என்றார்.

shaaji

நடிகர் ஷாஜி பேசும்போது, “மிஷ்கின் ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’ படத்தில் நடிக்க கூப்பிட்டார். ‘எனக்கு நடிக்க தெரியாது’ என்றேன். ‘என் படத்தில் யாரும் நடிப்பதில்லை.. வாருங்கள்’ என்று சொல்லி கூட்டிப் போனார்.

இந்தப் படத்தில் லாஜிக் இல்லை என சொல்பவர்கள் மிஷ்கினுக்கு தெரியாமல் நடந்திருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் மிஷ்கின் படத்தில் மிஷ்கினுக்கு தெரியாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப் படம் எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதித்துள்ளது. அதனால்தான் இத்தனை விமர்சனங்கள் வந்திருக்கிறது. இது ஒரு பரிட்சார்த்த முயற்சி. இப்படத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றி…” என்றார். 

kabilan

பாடலாசிரியர் கபிலன் பேசும்போது, “உன்ன நினைச்சு’, ‘நீங்க முடியுமா’ பாடல்கள் பற்றியே நிறைய பேச முடியும். மிஷ்கின்  படங்கள் எல்லாவற்றிலும் நான் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு பன்முக கலைஞர். அவர் இலக்கியவாதியும்கூட, அவர்கூட பாடல் எழுதுவது எளிதாக இருக்கும். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. உதயநிதிக்கு நேரடியாக முதல்முறை எழுதியுள்ளேன்.  படம் வெற்றி பெற்றதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. எல்லோருக்கும் நன்றி…” என்றார்.  

நடிகை ரேணுகா பேசும்போது, “இந்தப் படம் பற்றி சொல்ல நிறைய இருக்கு. நாம் நடிக்க ஆசைப்படுகிற  இயக்குநர் பட்டியலில் மிஷ்கின் இருந்தார். ஆனால் அவருடைய பேட்டிகளைப் பார்த்து அவர் மிக கண்டிப்பானவர் என நினைத்து பயந்திருந்தேன். ஆனால்  சந்தித்ததும் ‘நான் கண்டிப்பான ஆள் இல்லை’ என்றார்.

renuka

ஷீட்டிங்கில் குழந்தை மாதிரியே இருந்தார். நான் எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே நடிப்பேன். ஆனால், அதைக் கட்டுப்படுத்தி ‘இயல்பாக நடித்தால் போதும்’ என்றார். இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஒரு மிகப் பெரும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது…” என்றார். 

rajkumar

படத்தில் சைக்கோவாக நடித்திருந்த நடிகர் ராஜ்குமார் பிச்சுமணி பேசும்போது, “எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பது போல் எல்லாப் புகழுமே மிஷ்கினுக்கே. நான் ஒன்றுமே செய்யவில்லை. மிஷ்கின் சார் சொன்னதை மட்டுமே செய்தேன். இவ்வளவு புகழ் கிடைக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. படம் வெற்றி பெற்றுள்ளது. ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உதய் அண்ணா மிகப் பெரிய மனது கொண்டவர். இப்படத்தில் எனக்கு மிகப் பெரிய இடத்தைத் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி…” என்றார். 

நடிகை நித்யா மேனன் பேசும்போது, “இந்தப் படம் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. தரமான சின்ன படங்கள் ஓடும்போதும், உண்மையான உழைப்பு ஜெயிக்கும்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

nithya menon

மிஷ்கின் அவரது கதாப்பாத்திரங்களை மிக அழகாக வடிவமைக்கிறார். அவரை நம்பி ஒரு நடிகர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தப் படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசும் கேரக்டர் எனக்கு. ஆனால்,  நிஜத்தில் நான் கெட்ட வார்த்தைகளை பேசியதே கிடையாது. அவர் சொன்னதை அப்படியே செய்தேன்.

இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உதயநிதி, மிஷ்கின் இருவரும் என்னை குழந்தை போல் பார்த்து கொண்டார்கள். இந்தப் படத்திற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி…” என்றார். 

IMG_0391

நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “வெற்றிப் படம் தந்து மூணு வருடங்களாகிவிட்டன. இடையில் நான் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை. சுமாரான படங்கள்தான். இந்தப் படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் ராஜ்குமார்தான் ஹீரோ. நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன்.. அவ்வளவுதான். இந்தப் படத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி.சி.ஶ்ரீராம் சார் இருவருக்கும்  நன்றி.  

நானும், மிஷ்கின் சாரும் இதற்கு முன்பாகவே சேர்ந்து பணியாற்ற வேண்டிய சந்தர்ப்பம் இருந்தது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கின்றன. இந்தப் படத்தில் அது  நடந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் அனைவருமே உதவியாளர்கள்  போலவே வேலை செய்தார்கள். என்னைவிட இந்தப் படத்திற்காக அதிகம் உழைத்தது ராஜ்குமார்தான். அவருக்கு எனது வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்திருப்பது நல்லதுதான். படம் வெற்றி பெற்றதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. ‘சைக்கோ-2’ கண்டிப்பாக உருவாகும் என்று நம்புகிறேன்…” என்றார்.

IMG_0408 

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “எனது முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’ படம் முதல் இன்றுவரை என்னை நல்ல படங்களில் ஆதரித்து மற்ற படங்களின் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி.

என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார்தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள்தான் சினிமாவுக்கு நான் வரக் காரணம். அவருக்கு என் நன்றி.

என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதய்யை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன்.

அதிதிகூட  எப்போதும் சண்டைதான். அவரிடம் பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன். ஆனால், அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள்.  

என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பார். அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால், அவர் ஒரு தேவதை.

ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான்.  அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப் படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்ததுதான் இந்தப் படம். இந்தப் படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான்.

சிங்கம் புலி மிகச் சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதிகூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி.

தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இந்தப் படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர்தான். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த எடிட்டராக வருவார்.

பி.சி.ஸ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார். அது என் வாழ்நாள் கனவு. அவரால் முழுதாக  வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான்.

இந்தப் படம் பிடிக்காதவர்களுக்கும், விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி…” என்றார்.

 

Our Score