“நண்பி, மனைவியானால் என்ன நடக்கும்..?”–சொல்கிறது ‘ஓ மை கடவுளே’ படம்! 

“நண்பி, மனைவியானால் என்ன நடக்கும்..?”–சொல்கிறது ‘ஓ மை கடவுளே’ படம்! 

ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டில்லி பாபு மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிநயா செல்வம்-அசோக் செல்வன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே.’

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் இருவரும் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். வாணி போஜன் மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி, ராம் திலக்குடன் இணைந்து ஒரு கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

எழுத்து, இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து, இசை – லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவு – விது அயன்னா, படத் தொகுப்பு – பூபதி செல்வராஜ், கலை இயக்கம் – இராமலிங்கம், உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், உடைகள் – முகம்மது சுபையர், சண்டை இயக்கம் – ராம்குமார், பாடல்கள் – கோ சேஷா, புகைப்படம் – ராஜா, தயாரிப்பு மேற்பார்வை – சேது ராமலிங்கம், பூர்னேஷ், நிர்வாக தயாரிப்பு – நோவா.

இந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் இன்றைய நவநாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது.

ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்துள்ளது.

gowtham vasudev menon

இது குறித்து ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான டில்லி பாபு பேசுகையில் “இந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் இளைஞர்களை மட்டுமல்ல; அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆர்வம்மிக்க படத்தின் தொழில் நுட்பக் குழு மிகக் குறுகிய காலத்தில் இந்தப் படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறது.

இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும்… அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன.

இப்படத்தில் சில காட்சித் தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக் காட்சிகளில் நிஜமான சினிமா இயக்குநர் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும். அதே நேரம் காதல் படங்களை இயக்கியவராகவும் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின்போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால், அவர் ஒப்புக் கொள்வாரா எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது.

ஆனால், நாங்கள் கெளதம் மேனனை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறியபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரும் விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களைக் கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்…” என்றார்.

oh my kadavulea-poster-2

படம் பற்றி இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பேசும்போது, “இந்தப் படம் இப்போதைய இளைஞர்களின் மத்தியில் இப்போதும் இருக்கும் காதல், காதலி, திருமணம், மனைவி, குடும்பம், பிரெண்ட்ஷிப் போன்ற பல விஷயங்களைப் பேசுகிறது.

ஒரு மனைவியை பிரெண்ட்டாக நினைத்து வாழ்வது மிக எளிது. ஆனால் அதே நேரம் ஒரு நண்பி மனைவியானால் ஏற்படும் சில, பல பிரச்சினைகளைப் பற்றித்தான் இத்திரைப்படம் பேசுகிறது.

சென்சாரில் இந்தப் படத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட காட்சியை மட்டும் நீக்கினால் ‘யு’ சான்றிதழ் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் அந்த ஒரு காட்சிதான் இந்தப் படத்தின் கதையை மிக எளிமையாக பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கும். அந்தக் காட்சி இல்லையென்றால் படம், ஜீவனே இல்லாத உடல் போலாகிவிடும் என்பதால் அதற்கு நாங்கள் மறுத்துவிட்டோம். அதனால் ‘யு/ஏ’ கொடுத்திருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டோம்..” என்றார்.

வரும் 2020 பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படத்தை Sakthi Film Factory நிறுவனத்தின் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Our Score