full screen background image

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ல் நடைபெறுகிறது..!

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ல் நடைபெறுகிறது..!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2015-2017-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் ஜனவரி 25-ம் தேதி நடைபெற இருக்கிறது.

கடந்த முறை கேயார் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு சங்கம் செயல்பட்டு வந்த நிலையில் தயாரிப்பாளர் தாணு அவர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்தத் தீர்மானத்தின் மீது நடந்த ஓட்டெடுப்பில் கேயார் தோல்வியடைய அவர் சங்க நிர்வாகத்தில் ஈடுபடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியிருந்தது.

இதன் பின்பு தயாரிப்பாளர் தாணு தொடர்ந்த வழக்கின் இறுதி வாதம் கடந்த மாத இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. இதன் பின்பு கடந்த நவம்பர் 30-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நிர்வாக அமைப்பை நீக்கிவிட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக நியமிப்பதாக அறிவித்தது. கூடவே 3 மாதங்களுக்குள் சங்கத்தின் தேர்தலை நடத்திக் கொடுக்கும்படியும் நீதியரசர் ஏ.கே.ராஜனை கேட்டுக் கொண்டது.

அதன்படி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஏ.கே.ராஜன், தயாரிப்பாளர்களின் கருத்துக்களை கேட்டுவிட்டு வரும் ஜனவரி 25-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.

ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர், 21 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஓட்டுப் பதிவு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரையிலும் வழங்கப்படும் வேட்பு மனுக்களை டிசம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை தாக்கல் செய்யலாம். டிசம்பர் 26-ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுவை வாபஸ் வாங்க கடைசி நாள் டிசம்பர் 29.

நிர்வாகக் குழுவின் பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் இத்தேர்தல் நடைபெறும் நாளிலிருந்து கடைசி 5 ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு நேரடி தமிழ்ப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும். அல்லது சென்சார் சர்டிபிகேட் பெற்றிருக்க வேண்டும்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட விரும்புவர்கள் ஏதாவது ஒரு நேரடி தமிழ்ப் படத்தை முன் காலத்தில் தயாரித்தவர்களாக இருத்தல் வேண்டும்.

வாக்களிக்க தகுதி பெற்ற உறுப்பினர்கள் சந்தா செலுத்தி தங்களது பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

சங்க உறுப்பினரான தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கடந்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள்.

வாக்குப் பதிவு ஜனவரி 25-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்ற முறை 3 குழுவாகத் தயாரிப்பாளர்கள் போட்டியிட்டார்கள். இந்த முறை எப்படியோ..?

Our Score