எந்த ஒரு நிறுவனத்தின் வெற்றியும் அதன் வளர்ச்சியைப் பொறுத்தே இருக்கும். இந்த வளர்ச்சிக்கு நேரம், காலம் பாராத கவனம்… அர்ப்பணிப்பு மற்றும் கடும் உழைப்பு அவசியம். இப்படியொரு உழைப்பைக் கொட்டியிருக்கும தயாரிப்பு நிறுவனம் ‘24 A.M’.
‘ரெமோ’, தற்போது உருவாகி வரும் ‘வேலைக்காரன்’ ஆகிய சினிமா தயாரிப்புகளிலும், அதன் விளம்பர யுக்திகளிலும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கும் ’24 A.M. ஸ்டுடியோஸ்’ நிறுவனம், தற்பொழுது ’24 P.M.’ என்கிற பெயரில் சினிமா விநியோகத்திலும் இறங்கியுள்ளது.
இது பற்றிப் பேசிய ‘24 A.M.’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா, ”சினிமாவின் ஒரு முக்கிய அம்சம் விநியோகம். எந்தவித ஒளிவு மறைவும் இல்லாத எங்களது அணுகுமுறையை கொண்டு அந்த சினிமா விநியோகத்திலும் இப்போது கால் பாதிக்கவுள்ளோம்.
‘Axess Film Factory’ நிறுவனத்தின் சார்பில் அருள்நிதி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, மற்றும் விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருக்கும் ‘ராட்சஸன்’ ஆகிய படங்களின் விநியோகத்தோடு எங்களது விநியோகத் துறை பயணத்தை தொடங்கவுள்ளோம்.
தயாரிப்பாளர் டில்லி பாபுவோடு இணைந்து எங்கள் விநியோகத்தை ஆரம்பிப்பதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. சமீபத்தில் ‘மரகத நாணயம்’ என்ற வசூலை குவித்த படத்தை தயாரித்த அவருக்கு இது போல மேலும் நிறைய தரமான படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனைப்பும் உள்ளது. விநியோகத் துறையிலும் நாங்கள் கடுமையாக உழைத்து சாதிக்க முனைப்போடு உள்ளோம்…” என்றார்.