full screen background image

“விஷாலுக்கு சம்பள பாக்கியே இல்லை – அவர் பொய் சொல்கிறார்…” – தயாரிப்பாளர் நந்தகோபாலின் விளக்கம்..!

“விஷாலுக்கு சம்பள பாக்கியே இல்லை – அவர் பொய் சொல்கிறார்…” – தயாரிப்பாளர் நந்தகோபாலின் விளக்கம்..!

‘மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான நந்தகோபால், விஷால், விக்ரம் பிரபு, விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களுக்கு தனது முந்தைய தயாரிப்பு படங்களுக்காக சம்பளப் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனைக் கொடுக்காமல் திட்டமிட்டு தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாகவும் சொல்லி, இதனால் மெட்ராஸ் எண்டெர்பிரைசஸ் நிறுவனத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இனி வரும் காலங்களில் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கப் போவதில்லை என்று நேற்றைக்கு நடிகர் சங்கத்தின் சார்பாக அறிக்கை வெளியானது.

இதையடுத்து இந்த விஷயத்தில் தன்னிலை விளக்கம் அளிக்க நேற்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் நந்தகோபால்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த ஒத்துழையாமை அறிவிப்பு அறிக்கையை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் மட்டுமே முடிவெடுத்து அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது.  

இதுவரை நான் தயாரித்த அனைத்து திரைப்படங்களையும் எனது மனசாட்சிக்குட்பட்டு நேர்மையாகத்தான் தயாரித்துள்ளேன். ‘96’ படத்தில் நாயகனாக நடித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் வழங்கிவிட்டேன்.

இது விஷயமாக தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி  எடுக்கிற எந்த முடிவுக்கும் நான் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள்கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கவில்லையெனில் நான் டெல்லியில் உள்ள Office of the Director General of Competition Commisiion of India என்கிற அமைப்பில் வழக்கு தொடுக்க வேண்டி வரும்…” என்று எச்சரித்துள்ளார் தயாரிப்பாளர் நந்தகோபால்.

இந்த விவகாரம் தொடர்பாக நாம் தயாரிப்பாளர் நந்தகோபாலை தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர் நம்மிடம் சொன்னது இதுதான் :

“விஷால் நடிப்பில் நான் தயாரித்த ‘கத்திச் சண்டை’ படத்தில் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதன் பிறகும் நான் தொடர்ந்து விஷாலுடன் நட்பில் இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘துப்பறிவாளன்’ படத்தை பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளராக என் சார்பில் அவர் தயாரித்தார்.

ஆனால் படத்தை சொன்ன தேதியில் அல்லாமல் எட்டு மாதங்கள் கழித்தே என் கையில் கொடுத்தார். இதனால் எனக்கு பல லட்சங்கள் வீணாகச் செலவானது. இதனால் தயாரிப்பின்போது கூடுதலாக பணம் செலவானதாகச் சொல்லி விஷால் கேட்ட தொகையை என்னால் அவருக்குத் தர முடியவில்லை.

இந்தத் தொகையை பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். இது தொடர்பாக ஒரு முறை படப்பிடிப்பின்போது நாங்கள் இருவரும் பேசினோம். அப்போது விஷாலே “இப்போது அது பற்றி பேச வேண்டாம்” என்று சொல்லிவிட்டார்.

nandgopal-1

ஆனால், அதே பிரச்சினையை முன் வைத்து ‘96’ பட வெளியீட்டின்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலே பிரச்சினை செய்வார் என்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பிரச்சினையின்போது விஜய் சேதுபதி முன் வந்து எனக்கு உதவி செய்து அந்தப் படத்தை வெளியிட வைத்தார்.

இப்போதும் விஷால் ‘துப்பறிவாளன்’ படத் தயாரிப்பில் கூடுதலாக செலவு செய்த பணத்தைத்தான் என்னிடத்தில் கேட்கிறாரோ ஒழிய.. ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தமைக்கான சம்பளப் பாக்கியை அல்ல. அவர்தான் அந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்புச் செலவோடு அவரது சம்பளமும் அடங்கிவிடும். அதனால் விஷாலுக்கு சம்பளப் பாக்கி என்கிற பேச்சுக்கே இடமில்லை..!

veera sivaji movie poster

நான் தயாரித்த ‘ரோமியோ ஜூலியட்’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோதுதான் விக்ரம் பிரபு தரப்பினர் அவர்களாகவே வந்து விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம் செய்யும்படி கேட்டுக் கொண்டனர். அதனால்தான் ‘வீர சிவாஜி’ படத்தை அவரை வைத்து தயாரித்தேன். அந்தப் படம் எனக்கு மிகப் பெரிய நஷ்டத்தைக் கொடுத்தது திரையுலகத்தினர் அனைவருக்குமே தெரியும்.

அந்தப் படத்தில் நடித்தமைக்காக விக்ரம் பிரபுவுடன் சம்பள காண்ட்ராக்ட் எதையும் நாங்கள் போடவில்லை. சாட்டிலைட் உரிமையில் பாதி, பாதியை எடுத்துக் கொள்ளலாம் என்று அப்போதைக்கு வாய்ப் பேச்சாக பேசிக் கொண்டோம். ஆனாலும் விக்ரம் பிரபுவுக்கு 75 லட்சம் ரூபாய் வரையிலும் நான் சம்பளமாக கொடுத்துவிட்டேன்.

இப்போது சாட்டிலைட் உரிமையிலும் அவர்கள் பங்கு கேட்பதுதான் பிரச்சினையாக உள்ளது. அந்தப் படத்திற்காக நான் நிறைய பணத்தினை நஷ்டமாக அடைந்திருக்கிறேன். இந்த நிலைமையில் சாட்டிலைட் உரிமையிலும் பங்கு கேட்டால் எப்படி..? இந்த நிலைமையில் நான் அவர்களுக்குக் கொடுத்த செக் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டது. இந்தப் புகாரைத்தான் விக்ரம் பிரபு, நடிகர் சங்கத்தில் சொல்லியிருக்கிறார்.

nandgopal-5

விஜய் சேதுபதியை பொருத்தமட்டில் அவர் ‘96’ படத்தில் நடித்தமைக்கான சம்பளம் முழுவதையும் அப்போதே கொடுத்துவிட்டேன். அவருக்கு எந்தப் பாக்கியும் இல்லை.

எனக்கும், விஷாலுக்குமான இந்தப் பிரச்சினை கடந்த ஓராண்டாகவே புகைந்து கொண்டுதான் இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் நான் இது குறித்து புகார் கொடுத்து பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தபோது நடிகர் சங்கத்தில் இருந்து யாருமே வரவில்லை. ஆனால், இப்போது திடுதிப்பென்று இப்படியொரு நடவடிக்கையை அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவருக்கும் இந்த விஷயத்தில் என்னுடைய பங்கு என்ன.. யார் மீது தவறுகள் உள்ளன.. என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.. அவர்கள் நல்ல முடிவையெடுப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்..” என்று சொல்லி முடித்தார்.

Our Score