கொரோனா வைரஸ் தாக்குதலினால் நாடே ஊரடங்கு சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்கும்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மீண்டும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி என்கிற பெயரில் தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் தலைமையில் ஒரு அணி போட்டியிடுகிறது.
இந்த அணி திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடுவது தொடர்பான ஒரு கருத்து முன் வைப்பு அறிக்கையை இன்றைக்கு வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கை இங்கே :
இந்தக் காலகட்டத்தில் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள், அதனை வெளியிடும் வினியோகஸ்தர்கள், அதனை திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகிய அனைவருக்கும் நன்மையுடன் கூடிய லாபம் கிடைக்க நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி. சில நடை முறை சீர்திருத்தங்கள் கொண்டு வந்து நாம் அனைவரும் பயனடைய வேண்டி கீழ்க்கண்ட நிலைப்பாட்டினை எங்களது அணி அனைத்துத் தரப்பினரிடமும் முன் வைக்கிறது.
(1) சிறு மூதலீட்டு படங்களுக்கு திரையரங்குகளில் ஒரு காட்சி மட்டுமே என்ற நிலை மாறி குறைந்தபட்சம் நூறு திரையரங்குகளில் மூன்று காட்சிகள் திரையிட வேண்டும்.
(2) க்யூப், யூஎப்ஓ போன்ற டிஜிட்டல் புரெஜெக்ஷன் வி.பி.எப். கட்டணத்தை இனிமேல் தியேட்டர் உரிமையாளர்களே செலுத்த வேண்டும்.
(3) அனைத்துத் திரையரங்குகளிலும் ஆன்லைன் டிக்கெட் மூலம் வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பங்கு கொடுத்திட வேண்டும்.
(4) திரையரங்குகளில் படம் ஓடி முடித்தவுடன் அந்தப் படத்தைத் திரையிட்ட தயாரிப்பாளருக்கோ / வினியோகஸ்தருக்கோ உடனுக்குடன் அவருடைய விகிதாசார பங்கினை வழங்கிட வேண்டும்.
(5) தியேட்டர்களின் வாடகையை இனிமேல் 50 சதவிகிதம்வரையிலும் குறைத்து வசூலிக்க வேண்டும்.
(6) அனைத்து திரையரங்குகளையும் கணிணி மயமாக்கி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
(7) இனிமேல் திரையரங்குகளில் ஒளிபரப்பபடும் விளம்பர வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும்.
(8) தமிழ்த் திரைப்படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். திரைப்படம் வெளியிடும்போது கன்ஃபர்மேசனை சிண்டிகேட் அமைத்து கன்ஃபார்ம் செய்யக் கூடாது.
(9) திரையரங்குகளில் இருக்கும் ஜெனரேட்டர்களுக்காக தனி கட்டணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
(10) தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய குழுவினை ஏற்படுத்தி இரு சாராரும் அவ்வப்பொழுது நிகழும் சம்பவங்களை கலந்து பேசி நிறைகளை நிறைவேற்றி, குறைகளை களைய வேண்டும்.
மேற்கண்ட புதிய மாற்றங்களை கொண்டு வந்து திரையுலகில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் அணியின் நிலைப்பாடு.
என்றும் நட்புடன்,
இராம.நாராயணன் முரளி என்கிற N.இராமசாமி
R.ராதா கிருஷ்ணண்
S.சந்திரபிரகாஷ் ஜெயின்
ராஜேஷ் (கே.ஜே.ஆர்)
மைக்கேல் ராயப்பன்
N.சுபாஷ் சந்திரபோஸ்.
தயாரிப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர்கள்
தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி









