“சமூகம் தவறான பாதையில் போக நல்ல படங்கள் வராததும் ஒரு காரணம்தான்..” என்று தகவல் திரைப்பட விழாவில் ஏ.எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன் பேசினார் .
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு சூழலில் கிடைக்கும் தகவல் அவனது வாழ்க்கையையே மாற்றியமைக்கும். அதை மையப்படுத்திய கதைதான் ‘தகவல் என்கிற படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை கே.சசீந்தரா இயக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் பரதன், ஜோஷி போன்ற பல இயக்குநர்களிடம் பணிபுரிந்து இருக்கிறார். மோஷன் கிராப்ட் புரொடக்ஷன் மற்றும் எப்.வி.எம்.எஸ். ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
‘தகவல்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. சுவாமி சச்சிதானந்தமாயி பாடல்களை வெளியிட்டார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணகி, ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜெயந்தி கண்ணப்பன், பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் இசைத் தட்டை பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ஏ.எல்.எஸ். புரொடக்க்ஷன்ஸ் ஜெயந்தி கண்ணப்பன் பேசும்போது, “நாங்கள் 60 ஆண்டு காலமாக திரையுலகில் இருக்கிறோம். நான்கு முதல்வர்களுக்கு ஊதியம் கொடுத்த நிறுவனம் எங்களுடையது. கலைஞருக்கு ‘பணம்’, எம்.ஜி.ஆருக்கு ‘திருடாதே’ புரட்சித் தலைவி அம்மாவுக்கு ‘கந்தன் கருணை’, என்டி. ராமராவுக்கு ‘ராமாயணம்’ என்று எங்கள் தயாரிப்பில் பல சிறப்பான படங்களை தயாரித்துள்ளோம்.
இப்போது வரும் படங்களில் பெண்களை மதிப்பது போன்ற காட்சிகளே இல்லை. நாங்கள் பெண்களை மதித்து பெருமை சேர்க்கும் வகையில் ‘சக்கரவர்த்தி திருமகள்’. ‘சாரதா’, ‘ஆனந்தி’, ‘சாந்தி’ போன்ற படங்களை தயாரித்தோம்.
என் மாமனார் ஏ.எல்.சீனிவாசன் பீம்சிங், மாதவன் போன்ற எவ்வளவோ பெரிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார். இன்று தென்னிந்தியப் படங்கள் தொழில் நுட்பத்தில் வட இந்தியப் படங்களுக்கே சவால் விடுகின்றன., ஹாலிவுட்டுக்கும் சவால் விடுகின்றன. ஆனால் நல்ல படங்கள் எடுக்கப்படுகிறதா என்றால் அதுதான் இல்லை.
இன்றைய சமூகம் தவறான பாதையில் போக நல்ல திரைப்படங்கள் வராததும் ஒரு காரணம். இன்று பெண்கள் நடந்து கொள்வது மாற வேண்டும். பெண்களுக்கு அறிவும் வேண்டும். அடக்கமும் வேண்டும். இந்தச் சூழலில் பெண்களைப் பற்றி அவர்களின் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த ‘தகவல்’ படம் பற்றி பெற வேண்டும்” என்றார் ஜெயந்தி கண்ணப்பன்.
இவ்விழாவில் மூன்னாள் நீதிபதி கண்ணகி, பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, மலையாள இயக்குநர் சந்திரமோகன், எழுத்தாளர் கோபால கிருஷ்ணன், சமூக ஆர்வலர் எம்.பி.சீனிவாசன், .படத்தின் இயக்குநர், கே.சசீந்திரா, ஒளிப்பதிவாளர் ஜித்து ஜோஸ், நடிகை ரிஷா, இசையமைப்பாளர் சாஜித் தென்றல், நடன இயக்குநர் கூல் ஜெயந்த், தயாரிப்பாளர் ஒய். அசோக் குமார் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.











