நடிகர் பிரகாஷ்ராஜ் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் இப்போது.. அவர் மீது தடைவிதிக்க இருந்த தெலுங்க இயக்குநர்கள் சங்கத்தை, தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலமாக ‘சரிக்கட்டி’ தடை என்னும் எண்ணத்தை நீக்கிவிட்டாராம்..!
‘ஆகாடு’ படத்தின் படப்பிடிப்பின்போது இணை இயக்குநர் ஒருவரை ஒருமையில் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டிவிட்டதாக பிரகாஷ்ராஜ் மீது தெலுங்கு இயக்குநர்கள் சங்கத்தில் புகார் தரப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெலுங்கு இயக்குநர்கள் சங்கம், ஆந்திர மாநில பெப்சி அமைப்புக்கும், தெலுங்கு நடிகர்கள் சங்கத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியது..
அந்தந்த சங்கங்கள் பிரகாஷ்ராஜுக்கு அந்த நோட்டீஸை அனுப்பி வைத்தும் ‘செல்லம்’ பதிலே சொல்லவில்லை. பதிலுக்கு சைலண்ட்டாக காய் நகர்த்தினார். தற்போது அவர் நடித்துவரும் தெலுங்கு படங்களின் தயாரிபபாளர்களை போனில் பிடித்து செல்லம், செல்லமாக கொஞ்சியிருக்கிறார். ‘விரைவில் உங்களது படப்பிடிப்பில் கலந்து கொண்டு நல்லபடியாக படத்தை முடித்துத் தருகிறேன். பதிலுக்கு எனக்கு இந்த விஷயத்தில் உதவுங்கள்’ என்றாராம்..
எந்த மாநிலமாக இருந்தாலும் என்ன..? தயாரிப்பாளர்கள்தானே முதலாளிகள். அவர்கள் இல்லையேல் இயக்குநர்கள் எங்கே.. ?பிரகாஷ்ராஜின் தயாரிப்பாளர்கள் தங்களது சங்கத்தின் மூலமாக இயக்குநர்கள் சங்கத்திடம் பேசி தாஜா செய்து பிரச்சினையை ‘செட்டில்’ செய்துவிட்டார்களாம்..!
‘நோ தடை’ என்ற உறுதிமொழி இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் தரப்பட்டுள்ளதால், ‘செல்லம்’ இப்போது சந்தோஷத்தில் இருக்கிறது..!