full screen background image

எனக்குத் தடை விதிக்கும் பின்னணியில் ஒருவர் இருக்கிறார் – பிரகாஷ்ராஜ் ஆவேசம்..!

எனக்குத் தடை விதிக்கும் பின்னணியில் ஒருவர் இருக்கிறார் – பிரகாஷ்ராஜ் ஆவேசம்..!

மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் ‘ஆகாடு’ படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் பிரகாஷ்ராஜ் துணை இயக்குநர்களிடம் அவதூறாகவும், அடாவடியாகவும் பேசி நடந்து கொண்டதாகவும், இதனால் அந்தப் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. 

மேலும் இந்த்த் தகவல் தெலுங்கு பட இயக்குநர்கள் சங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டு பிரகாஷ்ராஜ் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று ‘ஆகாடு’ படத்தின் இயக்குநர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளிக்க நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். அப்போது, “எனக்கு தடை விதிக்கப்படும் என்று வெளியில் பரப்பி விடப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையில்லை. அது வெறும் வதந்திதான். இதுவொரு சதி.. இந்தச் சதிக்குப் பின்னால் ஒருவர் இருக்கிறார். நேரம் வரும்போது அவரைப் பற்றிச் சொல்கிறேன்..” என்றார்.

அவர் மேலும் பேசும்போது, “உலவச்சாறு பிரியாணி படத்தை இயக்கிவரும் சூழலில் எனக்குத் தடை விதிக்கப்படுகிறது போன்று செய்திகள் பரப்ப்ப்படுவது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. இது குறித்து தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், இயக்குநர்கள் சங்கத்திலும் புகார் கூறப் போகிறேன்.

ஆகாடு படத்தில் நானும் நடித்தேன். ஆனால் என் கேரக்டர் விஷயத்தில் எனக்கும் இயக்குநருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நான் விலகிக் கொண்டேன். இயக்குநர் வேறு ஒருவரை நடிக்க வைத்திருக்கிறார். அவ்வளவுதான்.. ஆனால் வேறு யாரோ ஒருவர் இது குறித்து குறிப்பாகச் சொல்லி எனக்கு தடை விதிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு மிகவும் வருத்தம் தருகிறது.. அவர்கள் என்னை ஒழித்துக் கட்ட முயன்று வருகிறார்கள்.

காய்ந்த மரம்தான் கல்லடி படுமென்று சொல்வார்கள். அது போலத்தான் பலரும் என் மீது கற்களை வீசி வருகிறார்கள். வெளிப்படையாகச் சொல்கிறேன்.. ஒரேயொரு நபர் மட்டும் இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் பின்னணியில் இருக்கிறார். அவர் யாரென்று விரைவில் உங்களுக்கு அடையாளம் காட்டுகிறேன்.. ஆகாடு படத்தின் தயாரிப்பாளர்கள் எதிர்காலத்தில் படமெடுத்தாலும், அதற்கு இப்போதைய துணை இயக்குநர்கள் நல்ல கதையோடு வந்தால்.. இதே மகேஷ்பாபுவோடு நடித்து படத்தை வெற்றியடையச் செய்வேன்.

சில விதிகள் காரணமாய் அந்த நபரின் பெயரைக் குறிப்பிட முடியாமல் இருக்கிறது. நடிகர்கள் சங்கத்தில் நிச்சயம் அவரைக் குறிப்பிட்டே புகார் கொடுப்பேன்..” என்று கூறியிருக்கிறார்.

இப்போது தெலுங்கு இண்டஸ்ட்ரியே தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது, நம்ம ‘செல்ல’த்தை மிரட்டும் அந்தச் ‘செல்லம்’ யாரென்று..?

Our Score