அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..!

சினிமாவுலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அதிலும் தனித்து நிற்க வேண்டும். நின்றால்தான் மரியாதை. இல்லாவிடில் அரசியலில் லூஸ் மோகன் ரேஞ்சுக்கு ஆக்கிவிடுவார்கள். இதில் எம்.ஜி.ஆரும், என்.டி.ஆரும் மட்டுமே விதிவிலக்கு..!

தெலுங்குலகின் சூப்பர் ஸ்டாராகவும், மெகா ஸ்டாராகவும் இன்னமும் நீடித்திருக்கும் சிரஞ்சீவி நேற்று மிகப் பெரிய அவமானத்தை எதிர்கொண்டுள்ளார். திரையுலகில் மிகவும் நல்ல பிள்ளையாக, அனைவருக்கும் பிடித்தவராக காட்சியளிக்கும் சிரஞ்சீவியின் வாழ்க்கையில் அவரது அரசியல் தடுமாற்றங்கள் மிகப் பெரிய தோல்வியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.

அவர் உருவாக்கிய பிரஜா ராஜ்யம் கட்சியை நடத்தத் தெரியாமல் சில வருடங்களிலேயே காங்கிரஸுடன் இணைத்துவிட்டார். தனித்து நின்றால் ஜெயிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு மேலும் பணத்தைச் செலவிட முடியாது என்று நினைத்துதான் காங்கிரஸில் கரைந்துவிட்டதாக இவரது எதிரிகள் சொல்கிறார்கள்.

இப்போது மத்திய அமைச்சராகவும் இருக்கும் சிரஞ்சீவி, தெலுங்கானாவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நிச்சயம் முதல்வராவார் என்கிற உறுதி மொழியை காங்கிரஸ் மேலிடம் கொடுத்திருப்பதால் தனியொரு மனிதனாக ஆந்திராவைச் சுற்றிச் சுற்றி வந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் மசூலிப்பிட்டிணம் என்ற ஊரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பிரச்சாரக் கூட்டத்தில் சிரஞ்சீவி பேசியபோது கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் அவர் மீது முட்டைகளை வீசியெறி அது அவர் முகம், தலையில் பட்டு அசிங்கமாகக் காட்சியளித்தது.

இந்த அவமரியாதையை முற்றிலும் எதிர்பார்க்காத சிரஞ்சிவி சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் அமைதி காத்திருக்கிறார். முட்டை வீசியவர்களை காவல்துறை பிடித்துச் சென்ற பின்னர் தனது முகத்தைத் துடைத்துவிட்டு அங்கேயே மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு இடத்தைக் காலி செய்திருக்கிறார்.

சினிமாவில் ஓஹோவென்று இருந்தாலும் அரசியலில் கால் வைத்தால் அதிலும் அப்படியிருக்க முடியாது. முதலில் இருந்துதான் வாழ்க்கையைத் துவக்க வேண்டும்.. இதற்காகத்தான் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தயங்கித் தயங்கி நின்று கொண்டிருக்கிறார்..

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

Our Score