காவிரி பிரச்சினை – டிவி பேட்டியில் மைக்கை தூக்கியெறிந்த பிரகாஷ்ராஜ்..!

காவிரி பிரச்சினை – டிவி பேட்டியில் மைக்கை தூக்கியெறிந்த பிரகாஷ்ராஜ்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். கன்னடத் தொலைக்காட்சிகளில் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவரை கே.பாலசந்தர் தமிழில் ‘கல்கி’ படம் மூலமாக அறிமுகப்படுத்தினார்.

இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் நடித்துவரும் பன்முக வித்தகர். இன்னமும் பிரகாஷ்ராஜிற்காக காத்திருக்கும் ஹீரோக்களெல்லாம் அனைத்து மொழிகளிலும் உண்டு. அவ்வளவு பிஸியானவராக இருந்தாலும் சில விஷயங்களில் நேரடியாகப் பேசி விடக் கூடியவர். கொஞ்சம் கோபக்காரர்.

பிரகாஷ்ராஜ் நடிப்பில் ;இதொல்ல ராமாயாண; என்ற கன்னட படம் தயாராகியுள்ளது. இந்த வாரம் அந்தப் படம் ரிலீஸாக உள்ளது. அதன் பொருட்டு கன்னட டி.வி ஒன்று அவரை பேட்டி எடுத்தது.

அதில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது புதிய கன்னடப் படம் பற்றி பேட்டியளித்துக் கொண்டிருந்தார். பேட்டியின் நடுவில் திடீரென, ‘காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைக்கு காரணம் யார்..? பிடிவாதமாக இருப்பது கர்நாடகமா..? தமிழ்நாடா..? இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?’ என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரகாஷ்ராஜிடம் கேள்வி கேட்க அவரோ டென்ஷனாகிவிட்டார்.

கேமராமேனிடம் ‘நான் சொல்வதை அப்படியே ரிக்கார்ட் செய்துவிடுங்கள்’ என்று கூறிவிட்டு இது தொடர்பாக சில கருத்துக்களை பிரகாஷ்ராஜ் முன் வைத்தார்.

“நாம் இப்போது ‘இதொல்லே ராமாயண‘ படம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். சினிமா பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். காவிரி விவகாரம் நீங்கள் நினைப்பது போல் தண்ணீர் மட்டுமே சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசிவிடக் கூடிய விஷயமும் இல்லை. விவசாயிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. இது மிகவும் ஆழமான விஷயம். இது பற்றி மிகவும் தீவிரமாக பேச வேண்டும். இது போன்ற நிகழ்ச்சியில் தேவை இல்லாமல் நீங்கள் இந்த கேள்வியை கேட்டு என்னை இக்கட்டுக்குள்ளாக்க வேண்டாம். இதன்மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது. மக்கள் ஏற்கனவே கோபத்தில் விரக்தியில் வேதனையில் இருக்கின்றனர்.

சினிமா நடிகரிடம் காவிரி விவகாரம் பற்றி உங்களுக்கு எப்படி கேட்க தோன்றுகிறது. உங்களுக்கு பொறுப்பு இல்லையா..? மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று ஒரு குறைந்தபட்ச பொறுப்புகூட இல்லாவிட்டால் அது சரியில்லை. இங்கு இருப்பவர்கள், அங்கு இருப்பவர்கள் எல்லோரும் மனிதர்களே. ஆனால் பிரச்னைதான் வேறு..” என கடும் கோபத்துடன் பதில் அளித்தார்.

அப்படியும் விடாமல் நிகழ்ச்சி தொகுப்பாளர் காவிரி பற்றியே கேள்வி கேட்க கோபத்தின் உச்சத்துக்கே போன பிரகாஷ்ராஜ் தனது சட்டையில் மாட்டியிருந்த மைக்கை கழட்டி வீசிவிட்டு கோபமாகப் பேசிவிட்டு அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.

இப்படியொரு கேள்வியை கேட்கப் போகிறோம் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டாவது கேட்டிருக்கலாம்.. இல்லாவிடில் சினிமா நிகழ்ச்சியில் இந்தக் கேள்வியை கேட்பதை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். சினிமா நடிகர்கள் மட்டுமே இளிச்சவாயர்களா என்ன..?

https://www.youtube.com/watch?v=CEhn5t5xKcQ

Our Score