ஒன் சினிமாஸ் தயாரிப்பில் டி.ஈ.அசோக்குமார் தயாரித்துள்ள படம் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’
இந்தப் படத்தில் விஷ்ணு ஹீரோவாகவும், வர்ஷா, இஷாரா நாயர் இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
கே.பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் உட்பட பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.
காதல் கலந்த காமெடி படமாக இதனை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சுரேஷ்குமார். இவர் இயக்குநர் சுசீந்திரனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலர் தினத்தில் பிறந்த ஹீரோவுக்கு, தான் காதலித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆசை. இதற்காக காதலிக்க வேண்டி காதலிகளைத் தேடியலைகிறார். இவருக்கு காதலி கிடைத்தாளா..? காதல் கை கூடியதா..? திருமணம் நடந்தேறியதா..? என்பதைத்தான் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.
அறிவழகன் என்கிற கேரக்டரில் நடித்திருக்கும் படத்தின் ஹீரோவான விஷ்ணு தனக்குக் காதலியாக வரவிருப்பவர்களுக்கு நிறைய கண்டிஷன்கள் போடுகிறார். அதுதான் மிகப் பெரிய காமெடி.
‘பியூட்டி பார்லருக்குப் போகாத, மொபைல் டாப் அப் பண்ணச் சொல்லாத, ஷாப்பிங் போக வேண்டும் என நச்சரிக்காத பெண்கள் உடனே என்னை அணுகலாம்.
குறிப்பு : மாதம் ஐம்பதாயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்..’ என்றே அறிவிக்கிறார் ஹீரோ.
இதன் பின்பு நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் படமே.. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், “சமீபத்தில் இது போல எந்த படமும் எங்களை சிரிக்க வைத்ததில்லை” என்று சொல்லிப் பாராட்டினார்களாம். படத்திற்கு ‘யு’ சான்றிதழும் கொடுத்திருக்கிறார்கள்.
வரிவிலக்கிற்காக இந்தப் படத்தைப் பார்த்த நடுவர்களில் ஒருவரான இயக்குநர் பி.வாசு இயக்குநர் சுரேஷ்குமாரை அழைத்து பாராட்டியிருக்கிறார். “இப்படியொரு காமெடி படத்தை இதுவரையிலும் நான் பார்த்ததில்லை..” என்றாராராம் பி.வாசு.
படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.!
அதையும்தான் பார்த்திருவோம்..!