பணம் தராமல் ஏமாற்றிவிட்டார் – ‘கோலிசோடா’ தயாரிப்பாளர் மீது பவர்ஸ்டார் புகார்..!

பணம் தராமல் ஏமாற்றிவிட்டார் – ‘கோலிசோடா’ தயாரிப்பாளர் மீது பவர்ஸ்டார் புகார்..!

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களுக்கு வரும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் பேச்சுக்கள் அப்படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியாகும் என்பதெல்லாம் ஒரு சில விஷயங்களில்தான்.. பணப் பாக்கி, ஏமாற்றுதல் என்பதெல்லாம் அதற்கு நேரான வாதமல்ல..

இ.பி.கோ. செக்சனில் ‘ஏமாற்றுதல்’ என்ற தலைப்பில் என்னென்ன சட்டப் பிரிவுகள் இருக்கிறதோ.. அதிலெல்லாம் ஒவ்வொரு வழக்காக போடலாமாம் நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் மீது. அந்தளவுக்கு ஐயா மீது அதீத புகார்கள் காவல்துறையிடம் குவிந்துள்ளன. இப்படி எத்தனுக்கு எத்தனான, பவர்ஸ்டாரே தனக்கு சம்பளப் பாக்கி வைச்சிருக்காங்க என்று நேற்றைக்கு புலம்பிவிட்டார்.. என்ன கொடுமை சரவணா இது..?

நேற்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் ‘இன்றைய சினிமா’ என்ற புதிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த்து. இந்த விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, ஸ்டண்ட் இயக்குநர் ஜாக்குவார் தங்கம், கலைப்புலி ஜி.சேகரன் ஆகியோர் பங்கேற்றனர். இசைத் தட்டை பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பவர்ஸ்டார் “யாரும், யாரையும் ஏமாற்றக் கூடாது..” என்று தத்துவமெல்லாம் உதிர்த்துவிட்டு.. தனக்கே சமீபத்தில் இது மாதிரியான ஒரு அனுபவம் ஏற்பட்டுள்ளதாக கூறி ‘கோலிசோடா’ படத்தில் தனக்கேற்பட்டிருக்கும் பணப் பாக்கி அனுபவத்தைச் சொன்னார்.

‘கோலிசோடா’ படத்தில் கோயம்பேடு பகுதியில் ஒரு ஷூட்டிங் நடப்பது போலவும், அதில் பவர் ஸ்டார் கலந்து கொண்டு ஆடுவது போலவும் காட்சிகள் வரும்.  “அந்தக் காட்சியில் நான்தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் மிக வற்புறுத்தி அழைத்தார்கள். 6 நாட்கள் முதலில் கேட்டு, பின்பு 3 நாட்களிலேயே முழு பாடலையும் எடுத்து முடித்துவிட்டார்கள். நான் அந்த டான்ஸ் சீன்ல நடிச்சப்போ என் போட்டோவை வெளியிட்டு விளம்பரமெல்லாம் செஞ்சாங்க. ஆனா கடைசில படம் ரிலீஸாகி ஜெயிச்ச பின்னாடி, என் போட்டோவை போடவே இல்லை. அப்புறம்… இதுல நான் ஆடியதற்கு பேசிய பணத்தில் ஒரு பகுதியை மட்டுமே கொடுத்த தயாரிப்பாளர்கள்.. இன்னமும் பணப் பாக்கி வைச்சிருக்காங்க. மிச்சத்தை கேட்டா ‘பணத்தைத் தர முடியாது. யார்கிட்ட வேண்ணாலும் போய்ச் சொல்லு’ன்னு சொல்றாங்க. 

எல்லாரும் என்னைத்தான் ஏமாத்துறவனா நினைக்குறாங்க. ஆனா நான் என் சொந்த உழைப்பில், கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தில்தான் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கேன். நான் யாரையும் ஏமாத்தலை. ஆனா எனக்கு நியாயமா சேர வேண்டிய பண பாக்கியை கொடுக்காமல் என்னைத்தான் சிலர் ஏமாத்தியிருக்காங்க..” என்றவர் கடைசியாகச் சொன்னதுதான் பன்ச் டயலாக். “ஏமாத்துறதுல எனக்கு அப்பாக்களா, இங்க நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு..”

இது பற்றி ‘கோலிசோடா’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான விஜய் மில்டனை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் தரப்பு நியாயத்தை விரைவில் சொல்வதாகத் தெரிவித்துள்ளார். அது இனிமேல் தெரியவந்தால் அதையும் இங்கே பிரசுரிப்போம்..!

Our Score