இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் OTT தளமான ஜீ-5 தளத்தில் வரும் ஜூன் 27-ம் தேதியன்று ‘போஸ்ட்மேன்’ என்ற புதிய தமிழ் வெப் சீரீஸ் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தத் தொடரை தயாரிப்பாளர் சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார். இந்தத் தொடரில் தமிழின் சிறந்த குணச்சித்திர நடிகரான முனீஸ்காந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகை கீர்த்தி பாண்டியனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் நித்யா, டி.எம்.கார்த்திக் மற்றும் பாலாஜி வேணுகோபாலும் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – மதிவதனன், இசை – விஜய், விக்கி, கலை இயக்கம் – கே.வாசுதேவன், எழுத்து, ராம் விக்னேஷ், பிரசாந்த் குணசேகரன், தயாரிப்பு – சமீர் பரத் ராம், இயக்கம் – பிரசாந்த் குணசேகரன்.
இந்தத் தொடர் பத்து எபிசோடுகள் கொண்டது. இதில் ஒன்பது எபிசோடுகளில் புதிய புதிய திரைக்கதைகளைக் கொண்ட கதைகளுடன் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
தொடரின் கதை 1995-ம் ஆண்டு துவங்குகிறது. முனீஸ்காந்த் போஸ்ட்மேனாக வேலை பார்த்து வருகிறார். கல்யாணமாகி மனைவியை இழந்து 2 வயது பெண் குழந்தையுடன் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார்.
1995 பொங்கல் தினத்தன்று ‘பாட்ஷா’ படம் ரிலீஸாகிறது. அன்றைக்கு பார்த்து சில இன்லேண்ட் கடிதங்களை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் ஒப்படைக்கும் பணி முனீஸ்காந்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
முனீஸ்காந்த் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு செல்பவர், அந்தப் பணியைச் செய்யாமல் ‘பாட்ஷா’ படம் பார்க்க தியேட்டருக்குச் சென்று விடுகிறார். முதல் காட்சியில் இருந்து நள்ளிரவு காட்சிவரையிலும் படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது வாகன விபத்தில் சிக்குகிறார்.
இந்த விபத்தினால் கோமா நிலைக்குள் ஆழ்கிறார் முனீஸ்காந்த். மருத்துவமனையில் இதற்கு மேல் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டதால் அவரை அவரது அம்மா வீட்டுக்கு அழைத்து வருகிறார். வீட்டில் படுத்த படுக்கையாக கோமாவில் வீழ்ந்திருந்த முனீஸ்காந்த் சென்ற 2017 டிசம்பர் 31-ம் தேதியன்று ரஜினி தான் அரசியலுக்கு வரப் போவதை அறிவித்த நாளில் திடீரென்று கண் விழிக்கிறார். அவருக்கு நினைவு திரும்புகிறது.
இதற்குள்ளாக அவரது அம்மா இறந்துவிடுகிறார். அவரது மகளான கீர்த்தி பாண்டியன் 25 வயது பெண்ணாகி அவர் முன் நிற்கிறார். உடல்நிலை சீரானதும் முனீஸ்காந்துக்கு பழைய நினைவுகள் கொஞ்சம், கொஞ்சமாக வருகிறது.
அப்போது அவர் கொடுக்காமல் வைத்திருந்த அந்த 8 கடிதங்கள் பற்றி அவருக்குத் தெரிய வருகிறது. மிகவும் வருத்தப்படும் முனீஸ்காந்த் இப்போது அந்தக் கடிதங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்க நினைக்கிறார். அப்பாவின் இந்த ஆசைக்கு மகளும் ஒத்துக் கொள்ள.. இருவரும் கடிதங்களை கொடுக்க செல்கிறார்கள்.
அப்படி ஒவ்வொரு கடிதத்தையும் அவர்கள் கொடுக்கும் இடத்தில் ஏற்படும் சம்பவங்களும், அதன் விளைவுகளும்தான் இந்தப் படத்தின் கதை.
இத்தொடர் பற்றி நடிகர் முனிஷ்காந்த் கூறும் பொழுது, “இந்த போஸ்ட்மேன் சீரிஸின் கதை மிக, மிக வித்தியாசமானது, ஒன்பது வெவ்வேறு கதைகளை உள்ளடக்கியது இந்தத் தொடர். இது மாறுபட்ட அனுபவங்களை நேயர்களுக்குக் கொடுக்கவுள்ளது.
இது உணர்ச்சிவசமான, நகைச்சுவையான மற்றும் சக்தி வாய்ந்த கதைக் களத்தைக் கொண்டுள்ளது. இது போன்ற கதையில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நானும் ஆரம்பத்தில் இதில் நடிக்க மிகவும் தயங்கினேன். இதில் நடித்தால் சினிமாவில் நமக்கு வாய்ப்பு குறைந்துவிடுமே என்றுகூட யோசித்தேன். ஆனால் இந்தத் தொடரின் கதையும், இதில் என்னுடைய கதாபாத்திரமும் எனக்குச் சினிமாவில்கூட கிடைக்காதது என்பதால் துணிந்து இதில் நடித்துவிட்டேன்.
மேலும், ஜீ-5 நிறுவனம் உலக அளவில் மிகப் பெரிய அளவுக்கு பார்வையாளர்களை தக்க வைத்திருப்பதால் இத்தொடர் மிகப் பெரிய அளவுக்கு ரீச்சாகப் போகிறது என்பதில் சந்தேகமில்லை..” என்றார்.
தொடரின் இயக்குநர் பிரசாந்த் குணசேகரன் பேசும்போது, “ஜீ-5 நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பையும் வெவ்வேறு தளத்தில் இருந்து உருவாக்குகிறது. அந்த வகையில் இந்த ‘போஸ்ட்மேன்’ தொடரும் ஒரு தனித்துவமான கதையைக் கொண்டது.
இந்தத் தொடர் திரை ரசிகர்களையும், சீரியல் பார்வையாளர்களையும் ஒரு சேர கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்துவித உணர்ச்சிப் பெருக்கான திரைக்கதையும், சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வகையில் நடிகர், நடிகைகளின் நடிப்புமாய் இத்தொடரை உருவாக்கியிருக்கிறோம்.
நாங்கள் அவர்களுக்காக இதை உருவாக்கி மகிழ்ந்ததைப் போலவே பார்வையாளர்களும் இதை அனுபவிப்பார்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்…” என்றார்.
ஜீ-5 நிறுவனத்தின் இந்தியாவின் செயல் தலைவர் அபர்ணா ஆச்சரேக்கர் இது குறித்து பேசும்போது, “எங்களது ஜீ-5 தளத்தில் சமீபத்தில் நாங்கள் வெளியிட்ட தமிழ் ஒரிஜினல் தொடர்களான ‘திரவம்’ மற்றும் ‘ஆட்டோ சங்கருக்கு’ ஒரு அற்புதமான வரவேற்பை தமிழ் ரசிகர்களிடையே இருந்து பெற்றுள்ளோம்.
இப்போது இந்த ’போஸ்ட்மேன்’ தொடரும் அது போன்ற சிறந்த தரத்தோடு உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒன்பது கதைகளுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த அழகான தொடரை பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
கடிதங்கள் சரியான நேரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் கைகளுக்கு வந்திருந்தால், அவர்களின் வாழ்க்கை எப்படி மாறியிருக்கும் என்று பார்வையாளர்களை நிச்சயமாக இந்தத் தொடர் யோசிக்க வைக்கும்…” எனறார்.
3500-க்கும் மேற்பட்ட பல்வேறு பிராந்திய மொழித் திரைப்படங்கள், 500-க்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4000-க்கும் அதிகமான இசை வீடியோக்கள், 35-க்கும் அதிகமான நாடகங்கள் மற்றும் 12 மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களை ஜீ-5 OTT தளம் உலகம் முழுவதும் உள்ள தனது பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜீ-5 தளம் தனது சந்தாதாரர்களுக்காக பிராந்திய பிரீமியம் பேக்குகளை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அறிமுகப்படுத்தியது. இது பெரும் வெற்றியைக் கண்டது. தற்போது ஜீ-5 தமிழ் பிரீமியம் பேக்கின் விலை மாதத்துக்கு ரூ 49/- மற்றும் ஒரு வருடத்திற்கு ரூபாய் 499 ஆகும்.