இந்தியாவில் தடை செய்யபட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படம் ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்தில் அக்டோம்பர் 1-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு திரையிடப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா என்னும் தமிழ்ப் பெண்ணின் வாழ்க்கை வரலாற்றை, ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற பெயரில் கணேசன் என்னும் தமிழர் திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.
இத்திரைப்படம் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையை குறை சொல்லி எடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லி இந்தப் படத்திற்கு இதுவரையில் இந்தியாவில் திரையிட தணிக்கை அனுமதி கிடைக்கவில்லை.
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநரான கணேசன் கடந்த வாரம் ஜெனீவாவிற்கு சென்றார். ஜெனீவாவில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அனைத்துலக மனித உரிமைகள் மாநாட்டின்போது இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்ட அவர் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.
இதற்காக கடந்த ஒரு வாரமாக பல நாட்டு மனித உரிமை அமைப்புகளின் பிரிதினிதிகளை சந்தித்து இந்தப் படம் பற்றி பரப்புரை செய்திருக்கிறார் இயக்குநர் கணேசன்.
இதன் பலனாக பல நாட்டு பிரதிநிதிகளும் இந்த போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படத்தைப் பார்க்க விரும்பியதையடுத்து அக்டோபர் 1-ம் தேதி மதியம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் அரங்கத்திலேயே இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.
இது பற்றி பேசிய இயக்குநர் கணேசன், “இந்தப் படம் தொடர்பாக ஒரு சிலரால் எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்தப் படத்தை இங்கே திரையிட்டால் என்னை கொலை செய்வேன் என்று போனில்கூட மிரட்டுகிறார்கள். எனக்கு என் உயிரை பற்றி கவலையில்லை.. நியாயத்துக்காக, மனித நேயத்துக்காக குரல் கொடுப்பவர்கள் எனக்கு ஆதரவு அளித்தால் பொதும். நான் கடைசிவரை இந்தப் படத்தைத் திரைக்கு கொண்டு வர போராடுவேன்..” என்றார்.