full screen background image

நடிகர் சங்கத் தேர்தல் – விஷால் அணியினருக்கு ஆதரவு கூடுகிறது..!

நடிகர் சங்கத் தேர்தல் – விஷால் அணியினருக்கு ஆதரவு கூடுகிறது..!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினருக்கு திரையுலகில் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது..

விஷால் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணை தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

pandavar ani (8)

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகர்கள் பிரசன்னா, ஸ்ரீமன், நந்தா, உதயா, பிரேம், ராஜேஷ், நடிகைகள் சங்கீதா, குட்டி பத்மினி, சோனியா உள்பட 24 பேர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆதரவாளர்கள் கூட்டத்தில் பல முக்கிய திரையுலகப் புள்ளிகளும் வந்து கலந்து கொண்டது சரத்குமார் அணியினரை கலங்கடித்துவிட்டது.

இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே 500-க்கும் மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவித்தார்கள்.

நடிகர்கள் தரப்பில் இருந்து சத்யராஜ், பாக்யராஜ், நிழல்கள் ரவி, டெல்லி கணேஷ், எஸ்.வி.சேகர், ராஜேஷ், வடிவேலு, பசுபதி, ஜெயம் ரவி, ஆர்யா, விமல், சித்தார்த், சந்தானம், ஜீவா, விக்ராந்த், வைபவ், சாந்தனு, சூரி, துஷ்யந்த், விஷ்ணு, கிருஷ்ணா, ஆதவ் கண்ணதாசன், ரமணா, ஜித்தன் ரமேஷ், பிரசன்னா, உதயா, சக்தி ஜீவன், ஜூனியர் பாலையா, விஜயபாஸ்கர், மணிகண்டன், அட்டே மனோகர், ராஜ்காந்த், பீலிசிவம், டெல்லி குமார், பெஞ்சமின், கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், சாம்ஸ். சுந்தர்.சி, ராம்போ ராஜ்குமார், நரேன், ஆதி, ரமேஷ், ஸ்ரீமன், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும்…

நடிகைகள் தரப்பில் இருந்து சச்சு, வடிவுக்கரசி, சரண்யா பொன்வண்ணன், குட்டி பத்மினி, பானுப்பிரியா, நிஷாந்தி, கோவை சரளா, ஆர்த்தி, ரஞ்சனி, சாயாசிங், சங்கீதா, ரோகிணி, ஷர்மிளா, ஷர்மிலி, சாந்தி கணேஷ், சுஜா வாருணி, கலா ரஞ்சனி, சாந்தி வில்லியம்ஸ், சபீதா ஆனந்த், வினோதினி, நிவேதா தாமஸ் உள்பட பல முக்கிய நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.

சரத்குமார் அணியின் சார்பாக சரத்குமார் தலைவர் பதவிக்கும், ராதாரவி செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர். நடிகர் சிம்புவும், விஜயகுமாரும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் போட்டியிடுகிறார்.

மேலும், ராம்கி, ‘அவர்கள்’ ரவிக்குமார், டி.பி.கஜேந்திரன், மோகன்ராம், கே.ராஜன், ஜாக்குவார் தங்கம், பசி சத்யா, வி.ஆர்.திலகம், சிசர் மனோகர், ராஜேந்திரன் ஆகியோரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் வசிக்கும் தமிழ்த் திரையுலகில் நடித்து வரும் பெரும்பாலான நடிகர், நடிகையர்களின் ஆதரவு விஷால் அணியினருக்குத்தான் கிடைத்துள்ளது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

இதில் நடிகர் சத்யராஜ், மற்றும் பாக்யராஜ், வடிவேலு ஆகியோரின் வரவு விஷால் அணியினருக்கு மிகுந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

சத்யராஜ் அந்தப் பக்கம் போனதில் சரத் அணியினர் படு அப்செட். இத்தனைக்கும் சத்யராஜூம், ராதாரவியும் ‘மாமா’, ‘மாப்ளை’ என்று ஒருமையில் ஒருவரையொருவர் அழைக்கும் அளவுக்கு மிக நெருக்கமானவர்கள். இருந்தும் சத்யராஜ், ‘புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதில் எந்தத் தவறும் இல்லை’ என்று மேடையிலேயே பேசிவிட்டார். நடிகர் சிவக்குமாரின் அன்பான அழைப்பே சத்யராஜை திசை திருப்பியிருக்கும் என்பது திரையுலகப் பேச்சு.

நடிகர் வடிவேலுவை பொறுத்தவரையில் சரத் அணியினரால் ‘நன்றி கொன்றவர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். வடிவேலு, விஜயகாந்துடன் சண்டையிட்டு தனித்து நின்றபோது அவருக்கு எல்லாவித உதவிகளையும் செய்தவர் சரத்குமார்தான். “நான் இன்னிக்கும் இந்த சினிமா துறைல நம்புறது சரத்குமார் அண்ணனை மட்டும்தான்..” என்று அப்போது பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார் வடிவேலு. காலம் மாறிப் போன நிலைமையில் காற்று எங்கே அதிகம் வீசுகிறதோ அந்த இடத்துக்கே போய்விடுவோம் என்றெண்ணி விஷால் அணி பக்கம் வந்துவிட்டார் வடிவேலு.

ராதிகாவும், பூர்ணிமா பாக்யராஜும் மிக நெருங்கிய தோழிகள். பாக்யராஜும் அவர்களுக்கு நெருக்கமான நட்பு வட்டராம்தான். இருந்தும் பாக்யராஜ் அந்தப் பக்கம் போனதில் சரத் டீமிற்கு வருத்தம் இல்லாமலா இருக்கும்.? பூர்ணிமா உறுப்பினராக இருந்தும் நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஷாலுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த குஷ்புவும் நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை. குஷ்புவின் பிறந்த நாள் பார்ட்டிக்கெல்லாம் தம்பதி சமேதராக கலந்து கொண்ட சரத், ராதிகாவிற்கு அன்றைக்கே தனது விஷால் ஆதரவு பேட்டியின் மூலம் நோஸ்கட் கொடுத்துவிட்டார் குஷ்பு. நடிகர் விவேக்கும் நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்றாலும் தனது ஆதரவு விஷால் டீமுக்குத்தான் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டார்.  

ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் எஸ்.வி.சேகர் இருவரும் விஷால் டீமிற்கு அளித்த ஆதரவை பார்த்து ‘நடிகர் சங்கம் பிராமணர்கள் கைக்கு போகப் போகிறது. அதற்கான சதி வேலைதான் இப்போது நடக்கிறது’ என்றெல்லாம் கூட்டங்களில் பேசினார் ராதாரவி. ஆனால் மோகன்ராம் இப்போது ராதாரவி அணியில் போய்ச் சேர்ந்துவிட்டார்.

இளைய தலைமுறையைச் சேர்ந்த நடிகர், நடிகைகளில் 90 சதவிகிதத்தினரின் ஆதரவு விஷால் அணியினருக்கே கிடைத்திருப்பது அவர்களே எதிர்பார்க்காத ஒன்று.

பண்பட்ட, நாகரிகமான, பாசமாக பழகக் கூடிய நடிகரான நாசரின் இத்தனையாண்டு கால நட்பு.. விஷால் மற்றும் கார்த்தியின் ஈகோ இல்லாமல் பழகும் தன்மை.. ரஜினி, கமல் இருவரின் மறைமுக ஆதரவு எல்லாவற்றுக்கும் மேலாக இவர்களே குற்றம்சாட்டுவதுபோல நடிகர் ராதாரவியின் சக நடிகர்கள் மீதான ஆட்சேபணைக்குரிய பல பேச்சுக்கள், கிண்டல்கள், செய்கைகள் எல்லாம் சேர்ந்து விஷால் அணி பக்கம் திரையுலகத்தையே கொண்டு வந்து தள்ளிவிட்டது.

எது எப்படியிருந்தாலும் நாடக நடிகர்களின் வாக்குதான் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதால், எப்படியும் தங்களுடைய ‘ஆட்சிக்’ காலத்தில் தங்களால் சங்கத்தில் சேர்க்கப்பட்ட நாடக நடிகர்கள் தங்களை கைவிடமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் ராதாரவியும், சரத்குமாரும் இப்போதுவரையிலும் தெம்பாக உள்ளார்கள்..!

Our Score