‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் அனுமதி மறுப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

முள்ளிவாய்க்கால் போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழப் பெண்ணான இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதையை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் கே.கணேசன் என்கிற இயக்குநர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்.

‘இந்தப் படம் அண்டை நாடான இலங்கையை மோசமாக சித்தரிக்கிறது’ என்று சொல்லி சென்சாரில் அனுமதி தர மறுத்துவிட்டார்கள். ரீவைஸிங் கமிட்டியும், டிரிப்யூனல் கமிட்டியும்கூட இந்தப் படத்திற்கு அனுமதி தர மறுத்துவிட்டதால், வேறு வழியில்லாமல் படத்தின் இயக்குநர் கே.கணேசன் கோர்ட் படியேறியிருக்கிறார்.

‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்திற்கு சென்சார் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து இயக்குநர் கே.கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரம் :

"பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட நான் 4 கன்னட திரைப்படங்களை இயக்கியுள்ளேன். இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் தமிழ்ப் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை சேனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டது. இதில் இசைப்பிரியா என்கிற தமிழ் பெண் பத்திரிகையாளரை சிங்கள ராணுவம் கொடூரமாகக் கற்பழித்து கொலை செய்த தகவல் வெளியானது.

இதையடுத்து இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்கிற பெயரில் ஒரு திரைப்படமாக உருவாக்கி அதை நானே இயக்கியிருக்கிறேன். இந்தப் படத்தை குருநாத் சல்சானி தயாரித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தன்யா, நாகிநீடு, ராதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தேன். இந்தப் படத்தை தணிக்கை வாரிய உறுப்பினர்கள் 5 பேர் பார்த்தனர். அதில் ஜெயந்தி என்பவர் என்னிடம் ஆவேசமாக, ‘எந்தத் தைரியத்தில் முதல் காட்சியிலேயே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சமர்ப்பித்த தீர்மான நிகழ்வைக் காட்டினீர்கள்..?’ என்று கேட்டார்.

அதற்கு நான், ‘தமிழக அரசிடம் முறையான அனுமதியைப் பெற்றுத்தான் இந்தக் காட்சியை எடுத்துள்ளேன்’ என்று சொன்னேன். இதையடுத்து ‘இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான இந்தப் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அடுத்த்தாக படத்தைப் பார்த்த நடிகர் எஸ்.வி.சேகர் என்னிடம், “இசைப்பிரியா கற்பழித்து கொலை செய்யப்பட்டார் என்பதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா...?” என்று கேட்டார். அதற்கு நான் சேனல்-4 தொலைக்காட்சியில் வெளியான காட்சியை சொன்னேன். அதற்கு அவர் ‘அந்தச் செய்தி பொய்யானது. இலங்கை தமிழர்களுக்கு அனுதாபம் ஏற்படும்விதமான படங்களை இந்தியாவில் வெளியிட அனுமதிக்க முடியாது. வேண்டுமென்றால் வெளிநாடுகளில் வாழும் இலங்கை தமிழர்களுக்காக இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்..’ என்று கூறிவிட்டு போய்விட்டார்.

இதன் பின்னர் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர முடியாது என்று தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும்..”

– இவ்வாறு தன் மனுவில் இயக்குநர் கே.கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது நீதிபதி, “இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை போல் ‘மெட்ராஸ் கபே’, ‘புலிப்பார்வை’ போன்ற படங்கள் வந்துள்ளனவே. அந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதே..?” என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர், “மெட்ராஸ் கபே’, ‘புலிப்பார்வை’ போன்ற படங்களை பார்த்து தணிக்கை சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்த தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பெயர், விவரங்களுடன் இந்த மனுவுக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனு மீதான வீசாரணையை வரும் 26-ம் தேதித்து தள்ளி வைக்கிறேன்..” என்று நீதிபதி உத்தரவிட்டார்.