ஈழத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்த முள்ளிவாய்க்கால் போரின்போது சிங்கள ராணுவத்தினரால் அநியாயமாகக் கொல்லப்பட்ட ஈழத்து தொலைக்காட்சி செய்தியாளர் இசைப்பிரியாவின் வாழ்க்கையை போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் படமாக எடுத்திருக்கிறார்கள். எஸ்.எஸ்.கே.கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பாக கே.சி.குருநாத் சல்சானி இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா நடிக்கிறார். இவர் இலங்கையில் நடந்த முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதாப்பாத்திரமேற்று நடிக்கிறார். மற்றும் பிரபாகரன், சுமந்தன், சுபாஷ்சந்திரபோஸ், ராதா, ரேகா, ஸ்ரீலஷ்மி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பார்த்திபன்.. இவர் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் உதவியாளர்.
இசை – இளையராஜா
பாடல்கள் – நா.முத்துகுமார், மூ.மேத்தா, பழனிபாரதி
கலை – பிரவீன்
எடிட்டிங் – சுந்தர்
தயாரிப்பு நிர்வாகம் – முருகபூபதி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கு.கணேசன்.
இவர் பெங்களூர்வாழ் தமிழர். கன்னடத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். அதில் இரண்டு படங்கள் குழந்தைகள் பற்றிய படங்கள். இரண்டு படங்கள் சமூகவியல் படங்கள். இவருக்கு கன்னடத்தில் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டு பின்னர் தமிழர் என்பதாலேயே மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழர்கள் பற்றிய உயர்வான கருத்துக்கள் இவரது படங்களில் இருக்கும். அதனால் கன்னட வெறியர்களால் பல முறை கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்.
தயாரிப்பு – கே.சி.குருநாத் சல்சானி
இந்தப் படம் பற்றி இயக்குனர் கு.கணேசனிடம் கேட்டோம் …
இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் குழந்தை பருவம் முதல் இளமைப் பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலைவரை கதையாக்கப்பட்டிருகிறது. நெஞ்சை உருக்கும் சம்பவங்கள் கொண்ட படமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ’ உருவாகிறது. படத்தின் கதையோட்டத்திற்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இசைப்பிரியாவின் வாழ்க்கைக்கு இளையராஜாவின் இசை உயிர் கொடுத்திருக்கிறது..” என்றார் கு.கணேசன்.
இந்தப் படத்திற்கு இசைப்பிரியாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள் என்பது இன்னுமொரு விஷயம். அதனை இந்தச் செய்தியில் பார்க்கலாம்..!









