full screen background image

“நான் இதுவரைக்கும் நடிக்காத கதைக் களம் இந்தப் படம்” – நடிகர் விமலின் பாராட்டுரை..!

“நான் இதுவரைக்கும் நடிக்காத கதைக் களம் இந்தப் படம்” – நடிகர் விமலின் பாராட்டுரை..!

Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K.ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரம் இல்லை’.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநரான மைக்கேல் கே.ராஜா.

இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – மைக்கேல் K.ராஜா, தயாரிப்பாளர் – சிவா கில்லாரி (Shark 9 pictures), இசை – N.R.ரகுநந்தன், ஒளிப்பதிவு – டெமில் சேவியர் எட்வர்ட்ஸ், படத்தொகுப்பு – M.தியாகராஜன், கலை இயக்கம் – சுரேந்தர், சண்டை இயக்கம் – மெட்ரோ மகேஷ், நடன இயக்கம் – ரிச்சி ரிச்சர்ட்சன், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ராகேஷ் ராகவன், நிர்வாக தயாரிப்பாளர் – வெங்கி மகி, பத்திரிக்கை தொடர்பு – சதீஷ், சிவா (AIM).

விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசும்போது, “நான் தெலுங்குக்காரன். ஆனால், உங்கள் முன் தமிழில்தான் பேசப் போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப் பிரபலங்களுக்கு நன்றி. படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.

இந்தப் படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன். இன்னும் பல கதைகள் கேட்டு முடிவு பண்ணலாம் என்ற முடிவிலிருந்தேன். அப்போதுதான் இந்தக் கதை வந்தது. அப்போது நான் நியூசிலாந்திலிருந்தேன். காலை 5 மணிக்குக் கதை சொல்ல வரச் சொன்னேன் ஆனால், மைக்கேல் 4 மணிக்கே வந்தார். அவர் கதையைவிட அவருடைய அர்ப்பணிப்பு எனக்குப் பிடித்து விட்டது. அவருக்காகத்தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன். அப்போது கொரோனா வந்து எங்கள் கனவுகளைத் தகர்த்துப் போட்டது. கொரோனா முடிந்த பிறகு மீண்டும் ஆரம்பித்தோம்.

எனக்கு சினிமா தெரியாது முற்றிலும் புதிது. வியாபாரம் தெரியாது ஆனால் அதில் கருணாஸ் அண்ணா, டிஃபெண்டர் பிரதர்ஸ், ரகுநந்தன் மூவரும் சப்போர்ட் செய்ததால்தான் இந்தப் படத்தினை செய்ய முடிந்தது. இது மிகவும் எமோசனலான படம். 

+12 பெயில் படம் பார்த்தபோது அழுதேன். அதே போல் இந்தப் படத்தைப் பார்த்தபோதும் எனக்கு அழுகை வந்துவிட்டது. கருணாஸ் அண்ணா குழந்தையாக மாறி நடித்திருக்கிறார். விமல் சார் எனக்காக நிறைய வசதிகளைக் குறைத்துக் கொண்டு நடித்தார். ஒரு நாள்கூட அவர் லேட்டாக வந்ததில்லை. அவருக்கு நன்றி.

இந்தப் படத்தில் உழைத்த அனைவரும் தங்கள் படம் போல வேலை பார்த்தார்கள். இது குடும்பங்களோடு பார்த்து மகிழும் படமாக இருக்கும். குடும்பத்தோடு பார்க்கும் நல்ல படங்களை இந்த கம்பெனி எடுக்கிறார்கள் என அனைவரும் சொல்ல வேண்டும். அதுதான் என் நோக்கம். இந்த இயக்குநர் இந்தக் கதைக்காக 10 வருடங்கள் உழைத்துள்ளார். அவருக்கு ஆதரவு தாருங்கள்..” என்றார். 

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. மைக்கேல் கதையை சொன்னபோதே எனக்குக் கண்களில் கண்ணீர் வந்தது. அயோத்தி சிறந்த படமாக இருக்கும் என இதே மேடையில் சொன்னேன். அதே போல் இந்தப் படமும் மிக எமோஷலான படமாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். விமலுடன் இது எனக்கு நான்காவது படம். மிக அருமையாக நடித்துள்ளார். கருணாஸ் எல்லோரையும் அழ வைத்துவிடுவார். இந்தப் படம் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். விஷுவலும், பாடலும் செம்மையாக இருக்கும்..” என்றார்.

நாயகி மேரி ரிக்கெட்ஸ் பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. கருணாஸ் சார் நிறைய ஒத்துழைப்பு தந்தார். விமல் சார் நிறையச் சொல்லித் தந்தார். ஒரு அற்புதமான படம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்…” என்றார்.

ஜே பேபி இயக்குநர் சுரேஷ் மாரி பேசும்போது, “சினிமாவை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் கதையை நான் படித்திருக்கிறேன். ஜே பேபி படத்தில் மைக்கேல் நிறைய வேலை பார்த்திருக்கிறார். அந்தப் படத்தை எல்லோரும் ரசிக்க அவரும் ஒரு காரணம். மைக்கேல் மிகக் கோபக்காரர். ஆனால் குழந்தை மனம் கொண்டவர். தான் நினைத்ததைத் திரையில் கொண்டு வர வேண்டுமென அடம்பிடிப்பார். நல்ல படைப்பாளி. இந்தப் படம் எல்லோருக்கும் திருப்பு முனையாக இருக்கும். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் S.R.பிரபாகரன் பேசும்போது, “இந்த போகுமிடம் வெகு தூரமில்லை படத்தின் தயாரிப்பாளருக்கு முதல் நன்றி. நல்ல கதைகளைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொன்ன அவர் மனதிற்கு நன்றி.

படத்தின் நாயகன் விமல் எனக்கு நெருங்கிய நண்பர். விலங்கு மூலம் மீண்டும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அவர் அடுத்தடுத்த படங்கள் நல்ல எதிர்பார்ப்பில் உள்ளது. இந்தப் படம் மிக எதார்த்தமாக இருக்கிறது எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும்.

மைக்கேல் பற்றி அனைவரும் பேசும்போதே அவரது திறமை தெரிகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். கருணாஸ் அண்ணன் உடன் ஏதாவது ஒரு படத்தில் வேலை பார்க்க ஆசை. அது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அவரது கெட்டப்பே வித்தியாசமாக இருக்கிறது. அவருக்கும் இப்படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

ரகுநந்தன் இளையராஜா போல தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள். படம் சிறப்பாக உள்ளது. படத்திற்குப் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தாருங்கள்..” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது, “ஜே பேபி இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அந்தப் படம் மிக அழகாக இருந்தது. அதேபோல் இந்தப் போகுமிடம் வெகுதூரமில்லை படமும் இருக்கும். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது கோகுல்தான். என்னை ஏன் நடிக்கக் கூப்பிடவில்லை எனக் கேட்டேன். இரண்டே கேரக்டர்கள்தான் என்று சொல்லி விட்டார். பிணமாக நடிக்கக் கூப்பிட்டிருந்தாலும் பாடி லாங்க்வேஜ் காட்டி நடித்திருப்பேன். அடுத்தப் படத்தில் மறந்து விடாதீர்கள்.

தயாரிப்பாளர் தனக்குத் தமிழ் தெரியவில்லை என்றார். தமிழ் நீங்கள் போகுமிடம் நிறைய இருக்கிறது. வாழ்த்துக்கள். என் அன்பு மாப்பிள்ளை விமலுக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அவர் இந்தப் படத்திற்கே சம்பந்தமே இல்லாதவர் போல் அமைதியாக இருக்கிறார் வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.

நடிகர் அருள்தாஸ் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு மிகவும் சின்ன ரோல், மைக்கேல் எனக்குப் பெரிதாக அறிமுகமில்லை ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் பார்த்தேன் அருமையான இயக்குநர். ஆர்டிஸ்டிடம் எப்படி வேலை வாங்க வேண்டுமென்று தெரிந்தவர். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக வருவார். தமிழில் டிராவலிங் படங்கள் வருவது அரிது. ஏனென்றால் பல இடங்களுக்குச் சென்று எடுப்பதே கஷ்டம் ஆனால், அந்த ஜானரில் அருமையாக இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். படம் மிகச் சிறந்த ஃபீல் குட் படமாக இருக்கும். விமலுக்கும், கருணாஸுக்கும் இப்படம் திருப்பு முனையாக இருக்கும். எதிர்பார்க்காத க்ளைமாக்ஸ். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..” என்றார்.

கவிஞர் சிநேன் பேசும்போது, “கோகுல கிருஷ்ணன் மற்றும் தாமோதரன் இருவருக்காகவும்தான் நான் வந்தேன். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். போகுமிடம் வெகுதூரமில்லை என்ற தலைப்பே மிகப் பெரிய வாழ்வியல் தத்துவத்தை அழகாகச் சொல்கிறது அது எனக்கு மிகவும் பிடித்தது.

தமிழ் தெரியாது எனச் சொல்லிவிட்டு தமிழில் பேசிய, தமிழில் படம் தயாரித்துள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நியூசிலாந்தில் அவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர். நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன் எனச் சொல்லும் அவர் மனது மிகச் சிறப்பானது. ஒரு இயக்குநருக்கான தயாரிப்பாளராக இருக்கிறார் அதற்காகவே அவருக்கு வாழ்த்துக்கள்.

கருணாஸ் அண்ணா பல தளங்களில் தன்னை நிரூபித்துவிட்டவர். விமல் அவர்களும் இந்தப் படம் மூலம் பெரிய வெற்றியைப் பெறுவார். மிகச் சிறந்த மெலடிகள் தரும் ரகுநந்தன் இன்னும் பெரிய இடத்துக்குச் செல்வார். விமலுக்கும், ரகுநந்தனுக்கும் பெரிய உயரத்தை இந்தப் படம் தரும். ஒரு நேர்த்தியான படைப்பு, ஒரு ஷாட்டில் தெரிந்துவிடும். டிரெய்லரிலேயே அத்தனை பிரமிப்பாகத் தெரிந்து விடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் செந்தில்நாதன் பேசும்போது, “தயாரிப்பாளர் இயக்குநரின் 15 வருடப் போராட்டம் என்றார். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடப்பதுதான். எனக்கும் 15 வருடப் போராட்டத்திற்கு பிறகுதான் பூந்தோட்ட காவல்காரன் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அர்ப்பணிப்பிற்கு இந்தப்படம் பெரிய வெற்றியைத் தரும்.

கேமரா, மியூசிக், எடிட்டிங், ஆர்ட் என எல்லாமே அற்புதமாக இருக்கிறது. கருணாஸ், விமல் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். எல்லோருக்கும் மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் தரும் வாழ்த்துக்கள். தாமோதரன் நிறைய ஆதரவு தந்ததாகத் தயாரிப்பாளர் சொன்னார், என் வீட்டிலருகேதான் அவர் இருக்கிறார். வாழ்த்துக்கள். மைக்கேலுக்கு இந்தப் படம் இன்னும் நிறைய வாய்ப்புகள் வரட்டும்..” என்றார்.

தயாரிப்பாளர் P.L.தேனப்பன் பேசும்போது, “இயக்குநர் மைக்கேல் முதலில் என்னிடம் தான் கதையைச் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்த கதை. நானே பலருக்குச் சொல்லியிருக்கிறேன். நான் தயாரிக்க வேண்டிய படம். ஒரு சில காரணங்களால் முடியவில்லை. கருணாஸிடம் சொன்னேன். அவர் மூலம் இந்தப் படம் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் யாருமே எதிர்பார்க்காதபடி இருக்கும். அத்தனை அற்புதமான படமாக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர் மைக்கேல் K.ராஜா பேசும்போது, “இது எனது முதல் மேடை, இந்தக் கதையை வைத்துக் கொண்டு 10 வருடங்களாக இந்தக் கோடம்பாக்கத்தைச் சுற்றியிருக்கிறேன். அதற்கு முன்னால் இன்னும் பல கதைகளோடு சுற்றியுள்ளேன். போகுமிடம் வெகு தூரமில்லை. ஆனால் இந்த இடத்திற்கு வர வெகு தூரம் பயணித்துள்ளேன்.

தயாரிப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் குழந்தை மாதிரி. கதை கேட்டவுடன் “செய்யலாம்” என்றார். அதை நான் எதிர்பார்க்கவேயில்லை. ஆனால் கொரோனா வந்து 3 வருடத்தைத் தின்றுவிட்டது. அப்புறம் மீண்டும் “எனக்கு இப்போதைய சூழ்நிலையில் படம் செய்யும் ஐடியா இல்லை. ஆனால் உனக்காகத் தயாரிக்கிறேன்” என்றார். அந்த வார்த்தையில்தான் இங்கு வந்துள்ளோம். நான் துவளும் போதெல்லாம் இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, “செமையாய் இருக்கு” என சிலர் சொல்லும் வார்த்தைதான் ஒரு கலைஞனுக்குக் கிடைக்கும் மிகப் பெரிய ஊக்கம் .

அது போல் இந்தக் கதையைக் கேட்ட அனைவருமே எனக்கு ஊக்கம் தந்துள்ளார்கள். தேனப்பன் சார் மூலம் கருணாஸ் சாரை சந்தித்து கதை சொன்னேன். நாமே பண்ணலாம் என ஊக்கம் தந்தார். திறமை மட்டும்தான் சினிமாவில் உங்களைக் கொண்டு சேர்க்கும். அதில் நம்பிக்கையாக இருங்கள் ஜெயிப்பீர்கள். கேமராமேன் மிகப் பெரிய ஒத்துழைப்பு தந்தார். எடிட்டருடன் பயங்கரமாக சண்டை போட்டுள்ளேன், ஆனால் அவருடைய எடிட்டிங்தான் படமே. அதற்காக நன்றி.

விமல் சார் பற்றிச் சொல்ல வேண்டும். அவரைப் பற்றி நிறையச் சொன்னார்கள். துவக்கத்தில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் ஷீட்டிங்கில் 7 மணிக்குச் சொன்னால் மேக்கப்போடு வந்து நிற்பார். அத்தனை அர்ப்பணிப்போடு இருந்தார். இந்தப் படத்தில் டயலாக் இல்லாமல் வெறும் முக பாவனைகளில் நடிக்க வேண்டும். அதில் அசத்தியிருக்கிறார் விமல்.

இந்தக் கதைக் களமே புதிது ஆனால் இதை நம்பி எடுத்தது மிகப் பெரிய விசயம், தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். படம் நன்றாக வர வேண்டுமென என்னுடன் உழைத்த என் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள். படம் பாருங்கள். அற்புதமான அனுபவமாக இருக்கும்..” என்றார். 

நடிகர் கருணாஸ் பேசும்போது, “இயக்குநர் இவ்வளவு ஆணித்தரமாக, அழுத்தமாகப் பேசக் காரணம் அவரது திறமைதான். அத்தனை சிறப்பாகப் படம் எடுத்துள்ளார். தயாரிப்பாளர் சிவா மிக நல்ல மனம் கொண்டவர். நியூசிலாந்து போய் சாதித்துக் காட்டிய இந்தியன். 24 ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் யாரிடமும் நான் போய் வாய்ப்பு கேட்டதில்லை. சினிமா உலகம் யாரையும் மதிக்காது, நமக்கான வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரைத்துறை என்பது மிகப் பெரிய பயணம்.

மைக்கேல் இந்தக் கதை இப்படித்தான் வர வேண்டுமெனப் பிடிவாதமாக எடுத்துக் காட்டியுள்ளார். என்னையும், விமலையும் வித்தியாசமாகக் காட்டியுள்ளார். அவருடன் எனக்கு இதுதான் முதல் படம், நான் ஒரு ஹீரோவுடன் நடித்த எல்லாப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்தக் கதையைக் கேட்டு இந்தப் படத்தில் நடித்தால் நாம் இறந்த பிறகு பேர் சொல்லிக் கொள்ளும் படமாக இருக்குமென என் குடும்பத்தினரிடம் சொன்னேன். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த வாய்ப்பு என் கையை விட்டுப் போனது. ஆனால் நாமதான் நடிக்கணும் என்று எழுதியிருந்தால் அதுதான் நடக்கும். அப்படிதான் இப்போது நடந்துள்ளது. மகிழ்ச்சி. இந்தப் படத்திற்காக உண்மையாக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். எல்லோருக்கும் பெருமை சேர்க்கும் படமாக இது இருக்கும்.” என்றார்.

நடிகர் விமல் பேசும்போது, “இங்கே எங்களை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. தாமோதரன் மற்றும் கோகுல்தான் இந்தப் படத்தில் நான் நடிக்கக் காரணம். இயக்குநர் கதை சொல்லிப் பிடித்த பிறகுதான், தயாரிப்பாளரிடம் பேசினேன். வெள்ளை மனத்துக்காரர். கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேண்டுமென நினைப்பார். இந்த மேடையில் நாங்கள் எல்லோரும் இருக்க அவர்தான் காரணம்.

நான் நிறையப் புதுமுக இயக்குநர்களோடு வேலை பார்த்திருக்கிறேன். அவர்கள் எல்லோரும் இப்போது பெரிய இயக்குநர்களாக இருக்கிறார்கள். அதேபோல் மைக்கேலும் பெரிய இயக்குநராக வர வாழ்த்துக்கள். எப்போதும் முதல் படத்தில் அவர்களின் வாழ்வின் ஜீவன் இருக்கும் இந்தப் படத்திலும் இருக்கிறது.

இசையமைப்பாளர் ரகுநந்தனோடு இது எனக்ரு நான்காவது படம். இதுவும் வித்தியாசமாக இருக்கும். கருணாஸ் அண்ணனும் நானும் 15 வருடப் பழக்கம். ஆனால் இந்தப் படத்தில்தான் ஒன்று சேர்ந்துள்ளோம். நான் இதுவரையிலும் இது மாதிரியான படம் செய்ததில்லை. மிக அழுத்தமான பாத்திரம், மெனக்கெட்டு உழைத்துள்ளோம். எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்…” என்றார்.

Our Score