full screen background image

பூச்சாண்டி – சினிமா விமர்சனம்

பூச்சாண்டி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மலேசியாவைச் சேர்ந்த Trium Studio நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆண்டி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் மிர்ச்சி ரமணா நடித்துள்ளார். மற்றவர்கள் அனைவருமே மலேசியாவைச் சேர்ந்தவர்கள். மேலும் ஹம்சினி பெருமாள், தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகநாதன், கணேசன் மனோகரன், தினேஷ் மோகனசுந்தரம், தினேஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – Asalisham Bin Mohammed Ali, படத் தொகுப்பு – ஜே.கே.விக்கி, இசை – Dustin Riduan Shah, ஒலி வடிவமைப்பாளர் – ஜேஸன், எழுத்து, இயக்கம் – ஜே.கே.விக்கி.

சின்ன வயதில் நம்மை சாப்பிட வைப்பதற்காக நமது தாய்மார்கள் சொல்லும் பயமுறுத்தல் “இ்ப்போ சாப்பிடலைன்னா பூச்சாண்டிகிட்ட பிடிச்சுக் கொடுத்திருவேன்” என்பதுதான். இந்தப் ‘பூச்சாண்டி’ என்ற வார்த்தையைக் கேட்டு வளராத மனிதர்களே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு நம் மனதுக்கு நெருக்கமான வார்த்தை அது.

உண்மையில் அது பேய், பிசாசு, பூதம் என்று கற்பனையில் மட்டுமே உலா வரும் ஒரு பயமுறுத்தும் உயிரினம் என்பதுதான் நமது எண்ணம். அந்தப் ‘பூச்சாண்டி’ என்ற தமிழ் வார்த்தை எப்படி உருவானது.. அதன் உண்மைத்தனம் என்ன என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

இந்தப் படம் மதுரையில் இருந்து பயணித்து மலேசியாவில் மையம் கொண்டு நடக்கிறது. மலேசியாவில் படமான காட்சிகள் முழுவதிலும் மலேசிய மக்களே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையைச் சேர்ந்த முருகன் என்ற மிர்ச்சி ரமணா சங்க கால தமிழர் வரலாறுகளை அறியும் ஆர்வமுள்ளவர். கூடவே பழங்காலத்திய தொல் பொருள்களை சேகரிப்பதிலும் ஆர்வமுள்ளவர்.

அவர் மலேசியாவுக்கு வந்து லோகநாதனின் வீட்டில் தங்குகிறார். அதே வீட்டில் ஏற்கெனவே தங்கியிருக்கும் மூன்று நண்பர்களுடன் பழகுகிறார். அவர்களிடத்தில் அமானுஷ்யம் பற்றி தனக்குத் தெரிந்ததை அவர்களிடம் சொல்கிறார்.

ஆவிகளுடன் பேசும் அமானுஷ்ய வித்தையை நாங்கள் ஒரு முறை அறிய முயற்சித்தபோது மல்லிகா என்ற ஆவி எங்களது நண்பன் குருவை கொன்றுவிட்டதாக அந்த நண்பர்கள் சொல்கிறார்கள்.

இந்தச் செய்தியில் ஆர்வமாகும் ரமணா மேற்கொண்டு இதில் தீவிரமாகிறார். அப்போது ஒரு நாணயத்தை வைத்து இவர்கள் ஆவிகளை வரவழைத்து பேசியது ரமணாவுக்குத் தெரிய வருகிறது. அந்த நாணயத்தின் ரகசியத்தை அறிந்தால்தான் மல்லிகாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை நாம் அறிய முடியும் என்கிறார்கள் அந்த நண்பர்கள்.

ரமணாவும் முருகன், சங்கர், அன்பு ஆகிய மூவரும் இணைந்து இறந்து போன மல்லிகா என்ற பெண் பற்றி உண்மைகளை கண்டறிய முற்படுகின்றனர்.

யார் அந்த மல்லிகா? அவரின் மரணம் எப்படி நிகழ்ந்தது? மல்லிகா ஆவி குருவை கொல்ல என்ன காரணம்…? என்பதுதான் இந்த பூச்சாண்டி படத்தின் திரைக்கதை.

முருகனாக மிர்ச்சி ரமணா’ நடித்துள்ளார். இவர் மட்டும்தான் தமிழகத்தைச் சேர்ந்தவர். படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் அனைவருமே மலேசியாவை சேர்ந்தவர்கள்தான். என்றாலும் சிறப்பான நடிப்பையே கொடுத்துள்ளனர்.

இவர்களில் சங்கர் கேரக்டரில் நடித்தவர் தினேஷ் நமது கவனத்தை ஈர்த்துள்ளார். நண்பனை இழந்த சோகத்தை உணர்ந்து அழுத்தமாக தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நண்பனை கலாய்க்கும்போதும், மல்லிகாவின் கணவனுடன் நட்புக்காக சண்டையிடும்போதும் சபாஷ் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் மாற்றுத் திறனாளியான லோகநாதனும் பெரும் பாராட்டுக்குரியவர். தன்னுடைய உடல் குறைபாட்டை காட்டிக் கொள்ளாமலேயே நடித்திருந்தாலும் கடைசியில் ஒரு காட்சியில், “நீங்க எல்லாம் ஒரு நாள் எங்களை போல வாழ முடியுமா..? மலம் கழிக்கக்கூட அடுத்தவரை நாங்கள் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. என்றைக்காவது ஒரு நாள் உங்களை மாதிரியே நாங்களும் எந்திரிச்சு நடந்து முடி முடியாதா என்று எங்களுக்கும் ஏக்கமாகத்தான் இருக்கு..” என்று அவர் பேசும்போது நம்மை அறியாமல் கண் கலங்குகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது டிவிஸ்ட்டுதான் படத்தின் ஹைலைட்டே..!

மல்லிகா வேடத்தில் நடித்திருக்கும் ஹம்சினி பெருமாள் கொஞ்சம் நேரமே வந்தாலும் தனது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். சில காட்சிகளில் சமந்தாவின் சாயலில் தோற்றமளிப்பது கவனிக்கத்தக்கது.

படத்தில் ஆவிகளுடன் பேசும்போது கலகலப்பாக தொடங்கி பின்னர் திகிலாக மாறும்போது நம்மையும் சீட் நுனிக்கே கொண்டு வரும் அளவுக்கு சிறப்பாக இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவாளர் அசல் இஸம் பின் முகமது அலியின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். மலேசிய நாட்டின் அழகை பகலிலும், இருளிலும் ஒன்றுபோல் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பாடல்கள் தேவையில்லை என்பதை உணர்ந்து அதைத் தவிர்த்திருந்தாலும் க்ளைமாக்ஸில் புரோமோ சாங் வைத்து படத்தின் கதையைச் சொல்லியிப்பது சிறப்பானதுதான்.

வழக்கமான பேய் படமாக இல்லாமல் மன்னர்கள் காலத்துக் கதைகளைச் சொல்லி… ராஜேந்திர சோழன் மற்றும் களப்பிரர் ஆட்சிக் காலத்தையும் நமக்கு புரியும்படி சொல்லிருப்பது இயக்குநர் ஜே.கே.விக்கியின் படைப்புத் திறனைக் காட்டுகிறது.

தமிழகத்தில் மன்னர்கள் காலத்தில் சைவம், வைணவ மதங்களுக்கிடையே போட்டிகள் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு காலக்கட்டத்தில் அந்தந்த மன்னர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார்களோ அந்த மதமோ கோலோச்சும்.

 அப்படிப்பட்ட சூழலில் ஆட்சிக்கு வந்த ஒரு மன்னர் தீவிரமான வைணவராக இருக்கிறார். இதனால் நாட்டில் இருக்கும் சைவர்கள் மீது கடுமை காட்டுகிறார்.

குறிப்பாக சிவனடியார்கள் நெற்றியில் திருநீறு அணியக்கூடாது என்று கட்டளை இடுகிறார் மன்னர். மன்னரின் இந்த உத்தரவிற்கு எதிராகக் களமிறங்கிய சிவனடியார்கள் நெற்றியை விட்டுவிட்டு தங்களது உடல் முழுதும் திருநீறு பூசிக் கொண்டு வலம் வந்திருக்கிறார்கள்.

இப்படி உடல் முழுவதும் திருநீறு பூசிக் கொண்ட ஆண்டிகள்தாம் அக்கால மக்களால் பூச்சாண்டிகள் என்றழைக்கப்பட்டனர். அப்போதைய அரசரும் இவர்களைக் குற்றவாளிகள் போல் நடத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தை மையமாகக் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் மலேசியாவைச் சேர்ந்த இயக்குநரான ஜே.கே.விக்கி.

யார் கண்ணிலும் படாத.. கைகளிலும் சிக்காத சங்க கால நாணயத்தை முதன்முறையாக மல்லிகா கையில் எடுக்கும்போது ரொம்பச் சாதாரணமாக அதைப் படமாக்கியிருக்கிறார்கள். இதன் முக்கியத்துவத்தை காட்சிகளில் உணர்த்தாமல் போனது ஏனோ..?

அதே சமயம் ஒரு நாணயத்தில் உள்ள வரைப்படங்கள் குறித்து முருகனின் அப்பா கதாபாத்திரம் பேசும் வசனங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த படம் மலேசியாவில் தற்போது வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் வெளியாகவுள்ளது.

RATING : 3.5 / 5

Our Score