full screen background image

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். தமிழ் திரையுலகின் அழிக்க முடியாத அடையாளங்களில் பாலச்சந்தர் முக்கியமானவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தமிழக கலை உலகத்தின் ஈடற்ற படைப்பாளியான இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் மறைந்தார் என்ற செய்தி அறிந்து, அதிர்ச்சியும், அளவற்ற துக்கமும் அடைந்தேன். அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் காலத்தைக் கடந்து வாழும். அவரை இழந்து கண்ணீரில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்..” என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நாயக ஆதிக்கம் நிலவிய தமிழ் திரை உலகில் அவள் ஒரு தொடர்கதை, தப்புத்தாளங்கள் படத்தின் வழியாக சமுகப் பிரச்சினைகளை பொருத்தமான கதாபாத்திரங்கள் வழியாக அழுத்தமாகப் பதித்து தனக்கான இடத்தை அமைத்துக்கொண்டவர் பாலசந்தர். தான் மறைந்தாலும் தான் பதித்த தடம் மறையாத அளவிற்கு திரைப்படத் துறையில் முத்திரை பதித்துள்ள அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது அஞ்சலியை செலுத்துகிறது’ என்று கூறியுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சாதனைகளின் சிகரமான இயக்குனர் கே.பாலசந்தர் மறைவு தமிழ் திரைப்பட உலகத்திற்கு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினருக்கும், கலைத்துறை நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாலசந்தர் சிறந்த பண்பாளர், எளிமையானவர். அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர். அவரின் மறைவு திரை உலகிற்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கே.பாலசந்தரின் புகழ் நேற்று, இன்று, நாளை என்று திரையுலகில் என்றும் ஒரு வரலாறாக இருக்கும். எளிமைக்கும், பண்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர். கே.பாலசந்தர் குடும்பத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் 40 ஆண்டு கால பழக்கம் உண்டு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவரது மறைவால் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்..” என்று கூறியிருக்கிறார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் “பல திரைப்படக் கலைஞர்களை உருவாக்கிய நாணயச் சாலை போன்றவர் இயக்குனர் கே.பாலசந்தர். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்..” என்று கூறியிருக்கிறார்.

Our Score