full screen background image

கால்பந்தாட்ட வீரர்களின் நடிப்பில் உருவாகும் ‘போலாமா ஊர்கோலம்’ திரைப்படம்

கால்பந்தாட்ட வீரர்களின் நடிப்பில் உருவாகும் ‘போலாமா ஊர்கோலம்’ திரைப்படம்

அசலான ஓய்வு பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள யதார்த்த படமாக உருவாகியுள்ளது ‘போலாமா ஊர் கோலம் ‘.

இந்தப் படத்தை கஜசிம்ஹா மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பிரபுஜித் தயாரித்து அவரே நாயகனாகவும் நடித்துள்ளார்.

இவர் தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங்’ எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இதில்  கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் தயாரிப்பாளரான பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு’, ‘ஜகமே தந்திரம்’, ‘பேட்ட’ போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

இன்னொரு முக்கிய பாத்திரமேற்றுள்ள மதுசூதன், பெரிசு’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர்.

இந்தப் படத்தில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா, பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர். முதன்முதலாக இந்தப் படத்தில்தான் நாயகியாக நடித்துள்ளார்.

இவர்கள் தவிர ரவி ஏழுமலை, துளசி, சிவகார்த்திக், சூர்யா, கிருஷ்ணா, ரபிக், ஆதீ இராசன் போன்ற புதுமுகங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இது மட்டுமல்ல.. 1980-களில் இந்தியாவின் மாநில, தேசிய கால்பந்து விளையாட்டில் பங்கெடுத்துப் புகழ் பெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வைஷாலி சுப்பிரமணியம். இவர் 70 சதவிகித காட்சிகளைப் படம் பிடித்துள்ளார். எஞ்சிய 30 சதவிகித பகுதிகளை டேவிட் பாஸ்கர்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத் தொகுப்பு – தீபக். படத்தில் ஒரே ஒரு சண்டைக் காட்சியும், ஒரே ஒரு பாடல் காட்சியும் உண்டு. சண்டைக் காட்சிகளை குன்றத்தூர் பாபு அமைத்துள்ளார். இசை – சமந்த் நாக். பாடலை அனுராதா எழுதியுள்ளார். பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மானின் சீடரான கே.எம்.ரயான் அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரான நாகராஜ் பாய்  துரைலிங்கம், கலா பிரபு தொடங்கி விக்னேஷ் சிவன், ஹெச்.வினோத்வரையிலும் பல இயக்குநர்களிடம் பல்வேறு படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் நாகராஜ் பாய் துரைலிங்கம் பேசுகையில், “இது வட சென்னையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது.

ஒரு மூத்த கால்பந்தாட்ட வீரர், தனது காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்.

அவர் தனது பயணத்தில் சந்திக்கும் அழகிய காதல் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான, அதிர்ச்சியான, சுவையான, சுவாரஸ்யமான சம்பவங்களின் கால்பந்தாட்ட தொகுப்புதான் இந்தப் படம். அந்தப் பயணத்தில் பல்வேறு முடிச்சுகளும், திருப்பங்களும் இருக்கும். படமாகப் பார்க்கும் போது பார்வையாளர்களைக் கட்டிப் போடும்படி விறுவிறுப்பாக இருக்கும்.

கால்பந்தாட்டத்தையும், அதன் அசல் தன்மையோடு ஊடுருவச் செய்து கலகலப்பான சுவாரசியமான திரைப்படமாக இது உருவாகியிருக்கிறது

இந்தப் படத்தில் நடித்திருக்கும் 20 கால்பந்தாட்ட வீரர்கள் இன்னமும் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பவர்கள்தான். இவர்களைச் சுற்றித்தான் இந்தக் கதை சுழல்கிறது. உலகிலேயே veteran கால்பந்தாட்ட 20 வீரர்களை  நடிக்க வைத்து உருவாக்கப்பட்டுள்ள முதல் படம் இது.

படத்தில் வரும் சினிமாத்தனம் இல்லாத யதார்த்தமான காட்சிகள் ரசிகர்களைக் கவரும். இப்படம்  ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு யதார்த்தமான திரை அனுபவம் தரும். வணிக ரீதியிலான திருப்தியை எங்களுக்கும் தரும் என்று நம்புகிறேன்..” என்றார் இயக்குநர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின் பெரும் பகுதி ஆந்திராவிலும், மீதமான பகுதிகள் தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது.

இப்படம் விரைவில் வெளிவர உள்ளது.

 
Our Score