full screen background image

பொய்க்கால் குதிரை – சினிமா விமர்சனம்

பொய்க்கால் குதிரை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை டார்க் ரூம் பிக்சர்ஸும்,  மினி ஸ்டுடியோவும்  இணைந்து  தயாரித்துள்ளன.

படத்தில் பிரபுதேவா, வரலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரைசா வில்சன், ஜான் கொக்கேன், ஜெகன், ஷாம், பேபி ஆரியா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

பள்ளூ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். ‘ஹரஹர மகாதேவா’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய பலான படங்களை இயக்கிய இயக்குநரான சந்தோஷ் ஜெயக்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

வாழ்க்கையோட்டத்தில் விதியின் விளையாட்டில் சிக்கி துவண்டு போயிருக்கும் ஒருவன் தன் வாழ்வை மீட்டெடுக்க எப்படி போராடுகிறான் என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

விபத்து ஒன்றில் தனது மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் கதிரவன் என்ற பிரபுதேவா. இருந்தாலும் உயிர் பிழைத்திருக்கும் தனது 5 வயது மகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அம்மா இல்லாத குறை தெரியாத அளவுக்கு மகளை வளர்த்து வருகிறார் பிரபுதேவா.

இந்த நேரத்தில் சோதனை மேல் சோதனையாக அவரது மகளுக்கு இதயத்தில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. 70 லட்சம் ரூபாய் இருந்தால்தான் மகளைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைமை.

இந்த நேரத்தில் சிறையில் இருக்கும் தனது அப்பாவான பிரகாஷ்ராஜிடம் சென்று உதவி கேட்கிறார். அப்போது பிரகாஷ்ராஜ் நகரில் மிகப் பெரிய தொழிலதிபராக இருக்கும் ருத்ரா என்ற வரலட்சுமி சரத்குமாரின் மகளான ஷ்ரேயாவை கடத்த வேண்டிய ஒரு வேலையிருக்கிறது. செய்தால் உன் மகளின் ஆபரேஷனுக்கான பணம் முழுவதுமாக உனக்குக் கிடைக்கும்” என்கிறார்.

தனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரேயொரு நோக்கத்திற்காக இந்தக் கடத்தலில் இறங்குகிறார் பிரபுதேவா. அந்தத் திட்டம் நிறைவேறியதா இல்லையா..? மகள் பிழைத்துக் கொண்டாளா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படம் முழுவதும் ஒற்றைக் காலுடன் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டு நடித்திருக்கும் பிரபுதேவாவிற்கு இதற்காகவே ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து..

படத்தின் துவக்கத்தில் அந்த ஒரு காலுடனேயே பிரபுதேவா போடும் அறிமுகப் பாடல் புத்துணர்ச்சியோடு படத்தைத் துவக்கி வைத்துள்ளது எனலாம். 

பேருந்தில் ஒரு சிறுமிக்காக ரவுடிகளுடன் மோதுகின்ற காட்சியின் துவக்கத்தில் அந்த லீட் காட்சியில் பிரபுதேவாவின் அழுத்தமான வசன உச்சரிப்பும், நடிப்பும் அந்த சண்டை காட்சியை மிக, மிக நியாயப்படுத்தியிருக்கிறது. நடனப் புயல் ஆக்சன் புயலாகவும் கிளப்பியிருக்கிறார்.

கடத்தல் விவகாரம் சொதப்பலாகி அதில் அவர் மாட்டிக் கொள்ளும்போது நமக்கு அவர் மீது பரிதாபம் ஏற்பட்டாலும் கடைசியில் நமக்கே அல்வா கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. மருத்துவமனையில் மகளைக் காணாத அதிர்ச்சியில் அவர் காட்டும் நடிப்பு சூப்பர்ப். 

கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டாகி திரைக்கதை நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும்போதும் பிரபுதேவா தனித்து தெரிகிறார்.

வரல‌ஷ்மி சரத்குமார் கெத்தான ஒரு பெண் தொழிலதிபராக வலம் வருகிறார். தனது குழந்தையை மீட்பதற்காக அவர் படும் அவஸ்தையும், துயரமும், பதட்டமும், பதைபதைப்பும் ஓகே ரகம்தான். என்ன.. இன்னும் கொஞ்சம் நடிப்பை இயக்குநர் வரவழைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

வரல‌ஷ்மி சரத்குமாரின் கணவராக தேவா எனும் கதாபாத்திரத்தில் ஜான் கோக்கேன் தனது மூடி மறைக்கப்பட்ட வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதையிலும், இவரது கதாபாத்திரம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக இல்லையென்றாலும் பக்கத்து வீட்டு பெண்ணாக சில காட்சிகளில் வரும் ரைசா வில்சன் சில வசனங்களை மட்டுமே பேசியிருக்கிறார்.

பிரபுதேவாவின் மகளாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பும் அமர்க்களம்தான். மொட்டை மாடிக்குச் சென்று ஒற்றைக் காலுடன் நின்று சத்தியாக்கிரக போராட்டம் நடத்தும்போது நம்மையும் “ஐ லவ் யூ” சொல்ல வைத்திருக்கிறார்.

நண்டு ஜெகன் சிற்சில இடங்களில் லைட்டான நகைச்சுவையை கொட்டியிருந்தாலும், கடைசியில் எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்பதைப் போல திடீர் வில்லனாவது எதிர்பாராத சஸ்பென்ஸ்தான்.

பிரகாஷ்ராஜ் வெறுமனே இரண்டே இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்திருக்கிறார். இதேபோல் போலீஸ் உயரதிகாரியாக நடித்திருக்கும் ஷாம் ஒரேயொரு காட்சியில் மட்டுமே வந்து போகிறார்.

இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும் படத்தின் ஓட்டத்திற்கு தடையாகவும் இருக்கின்றன. பள்ளுவின் ஒளிப்பதிவில் படம் பிரகாசமாகத் தெரிகிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சிகளில்கூட ஒளியை ஒளித்து வைக்காமல் படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளில் அத்தனை அழகு. பிரேம் பை பிரேம் கண்களைக் கவரும்விதத்தில் கலை இயக்கமும், ஒளிப்பதிவும் இணைந்து செயல்பட்டிருக்கிறது.

ஒரு கால் இல்லாத நிலையிலும் சண்டை காட்சிகளை கவரும் வகையில் அமைத்திருக்கிறார் சண்டை பயிற்சியாளர் தினேஷ் காசி. பாராட்டுக்கள்.

இந்த சென்டிமெண்ட் கதைக்குள் குழந்தைகள் கடத்தல், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையடிக்கும் சிகிச்சை முறைகள், தொண்டு நிறுவனங்களின் இன்னொரு பக்கம், நோயாளிகளை காட்டி பணம் பறிக்கும் சில சமூக வலைத்தளங்கள், இணயைத்தளங்கள்.. என்று பல்வேறு விஷயங்களையும் திரைக்கதையில் நாசுக்காக சேர்த்திருக்கிரார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் உண்மையான வில்லன் யார் என்பது தெரியாமல் சஸ்பென்ஸிலேயே செல்வதால் சற்று சோர்வைத் தந்திருக்கிறது.

பிரகாஷ் ராஜ் ஏன் ஜெயிலில் அடைபட்டிருக்கிறார்.. என்ன வழக்கு அது.. ஷாமுக்கும், வரலட்சுமிக்குமான நட்பு எத்தகையது என்பதெல்லாம் படத்தில் பதில் இல்லாத கேள்விகள்தான்..!

தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டி இன்னொரு குழந்தையைக் கடத்தத் துணியும் பிரபுதேவாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சே அந்த இடத்தில் சரிகிறது. இது நியாயமில்லையே இயக்குநர் ஸார்.. அந்தக் குழந்தைக்கு மட்டும் பெற்றோர்கள் இருக்க மாட்டார்களா..? அதுவும் இந்தக் குழந்தை மாதிரிதானே..!? அதைப் போய் துன்புறுத்தலாமா..? நாயகன் இந்த அளவுக்கு சுயநலனுடன் இருந்தால் அது பொதுப் புத்திக்கு சரி என்றாலும், மனித தர்மத்துக்கு எதிரானதல்லாவா..? இயக்குநர் ஏன் யோசிக்கவில்லை..?

கடைசியில் பிரபுதேவா இந்த கதை இன்னும் முடியவில்லை என்று சொல்லி  படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பாருங்கள் என்று நமக்குச் சொல்கிறார். இதில் இரண்டாம் பாகம் எடுக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. ஆனாலும் காத்திருப்போம்.

பொய்க்கால் குதிரை – நிஜமான ஆட்டம்தான்..!

RATING : 3.5 / 5

Our Score