பரபரப்பாகியிருக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் இட ஒதுக்கீடு பற்றிய பாடல் வரிகள்..!

பரபரப்பாகியிருக்கும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் இட ஒதுக்கீடு பற்றிய பாடல் வரிகள்..!

இட ஒதுக்கீடு என்றால் சும்மாவே சலங்கையிட்டு ஆடுவார்கள் அரசியல்வாதிகள். இதில் சினிமாவில் பாட்டாகவே வைத்து பாட வைத்தால் சும்மா இருப்பார்களா..? ஒரு கை பார்த்துவிடுவது என்கிற வெறியில் இருக்கிறார்கள்.

‘பிச்சைக்காரன்’ என்ற படம் நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தில் லோகன் என்கிற பாடலாசிரியர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அதில், "கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்.. தப்பு, தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்..." என்று எழுதியிருக்கிறார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்தாலே இந்திய அரசியலே திணறிவிடும். அந்த அளவுக்கு அது அரசியல் கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உயிர்த் துடிப்பான விஷயம். இந்தப் பாடலின் அர்த்தம் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்த மாணவர்கள்தான் தப்பும், தவறுமாக ஊசி போட்டு மக்களை கொலை செய்கிறார்கள் என்ற அர்த்தத்தில் வருகிறது என்பதால் எதிர்ப்புகள் கிளம்பாமலா இருக்கும்..?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பல்வேறு மட்டங்களில் இந்தப் பாடல் வரிகள் நேற்றைக்கே புகைச்சலை கிளப்பிவிட்டன. "படம் வெளிவரும்போது ஒரு கை பார்க்காமல் விடப் போவதில்லை.." என்று முகநூலில் பல்வேறு பிரிவினரும் எழுதி வருகின்றனர். "பாடலை நீக்காவிட்டால் படத்தை வெளியிட விடக்கூடாது.." என்கிற அளவுக்கு அரசியல் கட்சியினரின் ஆவேச எழுத்துக்கள் இப்போது முகநூலில் பகிரப்பட்டுள்ளன.

இப்படியொரு பாடலை வைத்தால் நிச்சயமாக எதிர்ப்புகள் வரும் என்பது இத்தனையாண்டுகளாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் வசித்து வரும் படத்தின் ஹீரோ, பாடலாசிரியர், இயக்குநரான 'பூ' சசி மூவருக்குமே நன்கு தெரியும். அப்படியிருந்தும் இப்படியெழுதி பாடலை பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் எப்படி..?

ஒருவேளை படத்திற்கான பப்ளிசிட்டிக்காக அவர்களே எழுதி பரப்புரை செய்கிறார்களா..? அல்லது நிஜமாகவே எதிர்ப்புகளை சமாளிப்போம் என்கிற எண்ணத்தில் செயல்படுகிறார்களா என்று தெரியவில்லை..

எதுவாக இருந்தாலும் இது போன்ற சிறுபிள்ளைத்தனங்கள் திரையுலகில் தொடர்ந்தால் வெகுஜன மக்களுக்கும், சினிமா துறைக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டேதான் போகும். மக்களுக்காகத்தான் சினிமா. சினிமாவுக்காக மக்கள் இல்லை. மக்களுக்கு அறிவுறுத்தலாம். ஆனால் அது தவறுதலாக போய்விடக் கூடாது..!

இட ஒதுக்கீட்டை பெற்று அதில் படித்த மருத்துவர் சரியாக படித்திருக்க மாட்டார் என்கிற கருத்தை, பொது மக்கள் மத்தியில் திணிக்க முயல்வது மிகப் பெரிய முட்டாள்தனம். இது நம்மிடையே இருக்கிற மருத்துவர்களையும் அவமானப்படுத்தும் செயல்.

திரைப்படம் தயாரிப்பாளரின் சொத்துரிமை என்பதாக இருக்கலாம். ஆனால் அதில் சொல்லப்படும் கருத்துக்கள் ஒருவரை ஆதாரமில்லாமல் கொலைகாரராக ஆக்கக் கூடாது.. மேலும் இந்தக் கருத்துக்களுடன் படம் வெளியானால், அது தமிழகத்தில் சாதிய பின்புலத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும்.

எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்தப் பாடல் வரிகளை மட்டும் நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டால் தமிழ்த் திரையுலகத்திற்கும் நல்லது.. படத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்லது..!