தி எக்ஸ்ட்ரா வேகன்ஷா என்ற பட நிறுவனம் நிறுவனம் சார்பாக தயாராகும் படத்திற்கு வித்தியாசமாக ‘எடால்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் வெங்கட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யுவா நடிக்கிறார். மற்றும் சுந்தர மகாலிங்கம், சம்பத், சாந்தி, போன்ற புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – திருநாவுக்கரசு, இசை – ஜோ – ஸ்மித், எடிட்டிங் – எஸ்.எஸ்., நடனம் – பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை – மனோகர், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் இயக்கம் – ஸ்ரீஜர் (இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றியவர்).
இயக்குநர் ஸ்ரீஜரிடம் படம் பற்றி கேட்டபோது, “எலிப் பொறிக்கு ‘எடால்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. இந்தக் கதைக்கு எலிப் பொறிதான் மையமாகஇருப்பதால் இதே பெயரை வைத்திருக்கிறோம்.
ஹீரோ வெங்கட்டும் – ஹீரோயின் யுவாவும் காதலர்கள் இவர்களின் காதலுக்கு பல பேரிடமிருந்து பல விதங்களில் எதிர்ப்பு வருகிறது. எலியை பொறி வைத்து பிடிப்பது போன்று பலரை பொறி வைத்து பிடிக்கிறான். சாம, பேத, தான, தண்டம் என்கிற நான்கு யுக்திகளை வைத்து எதிரிகளை வளைக்கிறான். அது எப்படி என்பதுதான் பரபரப்பான திரைக்கதையாக ‘எடால்’ வந்திருக்கிறது.
ஆழமான நட்பையும் மதி நுட்பமான அறிவையும் உள்ளடக்கிய கதையாக ‘எடால்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படம் விரைவில் வெளிவர உள்ளது..” என்றார்.