“நிஜ பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து பிச்சையெடுத்தேன்..” – நடிகர் விஜய் ஆண்டனியின் அனுபவம்..!

“நிஜ பிச்சைக்காரர்களுடன் சேர்ந்து பிச்சையெடுத்தேன்..” – நடிகர் விஜய் ஆண்டனியின் அனுபவம்..!

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம் ‘பிச்சைக்காரன்’. இதில் சாட்னா டைட்டஸ் ஹீரோயினாக அறிமுகமாகிறார். 'டிஷ்யூம்', 'ரோஜாக்கூட்டம்', 'பூ', '555' படங்களை இயக்கிய சசி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

கே.ஆர். பிலிம்ஸ் சரவணன் மற்றும் கார்த்திக் இருவரும் இந்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் மொத்த ஏரியாவையும் வாங்கி எல்லா ஏரியாக்களையும் விற்று முடித்தும் விட்டனர். கூடவே ஸ்கைலார்க் பிலிம்ஸ் ஸ்ரீதர் வியாபாரத்தில் கை கோர்த்துள்ளார்.

IMG (35)

சமீபத்தில் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் முன்னோட்டத்தையும் ‘நெஞ்சோரத்தில்…’ என்ற பாடலையும் திரையிட்டனர்.

IMG (3)

படத்தை வாங்கி வெளியிடும் கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன் பேசும்போது, "இது நான் வாங்கி வெளியிடும் முதல் படம். முழுக்க, முழுக்க விஜய் ஆண்டனி பாணி கமர்ஷியல் படம். ‘நான்’, ‘சலீம்’ ஆகிய படங்களில் காதலையும், ஆக்சனையும் விஜய் ஆண்டனி சிறப்பாக கையாண்டு இருந்தார். ‘இந்தியா பாகிஸ்தான்’ முழுக்க காமெடிப் படமாக அமைந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஆக்சன், காதல், காமெடி எல்லாமும் இருக்கிறது. இயக்குநர் சசியின் அற்புதமான இயக்கத்தில் படம் மெருகேறி மிகச் சிறப்பாக வந்துள்ளது..” என்றார் .

இயக்குநர் சசி பேசும்போது, “இது பிச்சைக்காரர்களைப் பற்றிய படம் அல்ல. சூழல் காரணமாக பிச்சைக்காரனாக நடிக்கும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதை. இதற்கு பிச்சைக்காரன் என்பதைவிட பொருத்தமான வேறு டைட்டிலே இல்லை.

IMG (21)

படத்தைப் பொறுத்தவரை எடுக்க நினைத்ததை சரியாக எடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். படத்தைப் பார்த்த எல்லோருக்குமே படம் பிடித்திருந்தது.

என்றாலும் அண்மையில் ஒரு நாள் எனக்குள் கொஞ்சம் பதட்டம். எனது படத்தை நம்பி விலை கொடுத்து வாங்கிய கே.ஆர்.பிலிம்ஸ் மற்றும் ஸ்கை லார்க் நண்பர்கள் படம் பார்க்க இருந்த நாள் அது. படத்தைப் பார்த்தார்கள், மறுநாள் அவர்கள் ஆபிசுக்குப் போனேன்.

அப்போது கார்த்திக் மிகுந்த உற்சாகமாக வரவேற்றார். முன்னைவிடவும் உற்சாக வரவேற்பு. அப்போதுதான் எனக்கு நிம்மதி. படத்தை வாங்கிய எல்லாருக்கும் பிடித்தது போலவே, டிக்கட் வாங்கிப் பார்க்க வரும் எல்லோருக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் .

கே.ஆர். பிலிம்ஸ் சரவணன் வேறு யாராலும் முடியாத அளவுக்கு மிக பிரம்மாதமாக இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போகிறார்.. அவருக்கு எனது நன்றிகள்.." என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, "என்னை ‘டிஷ்யூம்’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியதே சசி சார்தான். அவரோட படம் பண்ணனும்னு என் ஆசையை தெரிவித்தேன். அவர் சொன்ன கதை இது. கேட்டு முடித்ததும் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுது விட்டேன். இந்தப் படத்தைத் தயாரித்து நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

IMG (31)

இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டால் ரொம்ப கொடுமையாக இருந்தது.

மகனும், மருமகளும் துரத்தி விட்டதால் பிச்சை எடுக்க வந்த பெண்மணி, பிச்சை எடுத்து மகளை படிக்க வைக்கும் அப்பா. அந்தக் குடும்பத்துக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார், இப்படி பல நிகழ்வுகள். நாம் அவர்களை மிகச் சுலபமாக 'உனக்கு கை, கால் நல்லாத்தான் இருக்கு. உழைச்சு சம்பாதிக்க வேண்டியதுதானே..?' என்று திட்டுகிறோம்.. அல்லது புறக்கணித்து விட்டுப் போகிறோம்.

ஆனால் இன்னொரு வகையில், வாழ்க்கையில் நாம் எல்லோருமே பிச்சைக்காரர்கள்தான். பிச்சையாக என்ன கேட்கிறோம் என்பது மட்டுமே மாறுகிறது. நான் வாய்ப்புப் பிச்சை எடுத்து இருக்கிறேன். இப்போதும் பைனான்ஸ் பிச்சை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இந்தப் படத்தை வாங்கிய சரவணனிடம் எல்லோரும் ‘என்ன இது.. முதன் முதலா பட விநியோகம் பண்றீங்க. ‘பிச்சைக்காரன்’ என்ற படத்தை வாங்கறீங்க?'ன்னு கேட்டிருப்பாங்க. ஆனா அவர் படத்தை நம்பி வாங்கினார். என் மனைவி பாத்திமா தரும் நம்பிக்கை அதிகம். அவங்க இல்லேன்னா நான் இல்லை.

இது எல்லோருக்கும் பிடிக்கிற படமா வந்திருக்கு. இனிமேலும் நான் நிறைய படங்களில் நடித்தாலும் இந்த ‘பிச்சைக்காரன்’ படம்தான் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருக்கும்..” என்றார்.

‘பிச்சைக்காரன்’ படம் மார்ச் மாதம் 4-ம் தேதி உலகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.