full screen background image

“சூர்யாவைப் பார்த்து தெலுங்கு ஹீரோக்களே பயப்படுகிறார்கள்..”- நடிகர் நாகார்ஜூனா பேச்சு..!

“சூர்யாவைப் பார்த்து தெலுங்கு ஹீரோக்களே பயப்படுகிறார்கள்..”- நடிகர் நாகார்ஜூனா பேச்சு..!

சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளியின் அரங்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று களைகட்டியிருந்தது.

பி.வி.பி. சினிமாஸ் தயாரிக்க, நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா நடிப்பில் பிரபல் தெலுங்கு இயக்குனர் வம்சி தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் இயக்கும் படம் ‘தோழா’.  இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

DCIM (2)

அக்கம்பக்கத்து இளைஞர்கள்.. மீனவர்களின் குடும்பத்தினர்.. கார்த்தி, தமன்னா, சூர்யாவின் ரசிகர்கள்.. நாகார்ஜூனாவின் தீவிர ரசிகர்கள் என்று பலரும் வந்து குவிந்திருந்தனர்.

இந்த விழாவில் நடிகர் சிவகுமார், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, நடிகர் சூர்யா,  நடிகர் சங்கம் சார்பில் பொன்வண்ணன், குட்டி பத்மினி, லலிதகுமாரி, இயக்குநர்கள் மகிழ் திருமேனி, ‘இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா, இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர்கள் சசிகாந்த், தனஞ்செயன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர் 

கோபி சுந்தர் இசையில் உருவான  ஏழு பாடல்களுக்கும் தனித் தனி டீசர் வெளியிடப்பட்டு ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு பிரபலம் வெளியிட்டு படக் குழுவை வாழ்த்திப் பேசினார்கள்.

thaanu sir 

“பி.வி.பி. நிறுவனம், நாகர்ஜுனா, கார்த்தி, தமன்னா என்று மிக சரியானவர்கள் இணைந்து இருக்கும் படம் இது. எதையுமே பிரம்மாண்டமாக  செய்வதில் வல்லவர்கள் பி.வி.பி. நிறுவனத்தினர். இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..” என்றார் கலைப்புலி எஸ்.தாணு.

தயாரிப்பாளர்  டி. சிவா, தமன்னாவை ‘lucky charm’ என்று புகழ்ந்தார். “மும்பையில் இருந்து வந்து உழைத்து அவர் அடைந்திருக்கும் உயரம் பாராட்டுக்குரியது..” என்றார்.

DCIM (33) 

“கார்த்தியோடு ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்த பெருமை எனக்கு உண்டு. அதற்கு பின்பு மிகச் சிறந்த நடிகராக அவர் உயர்ந்திருக்கிறார். நாகர்ஜுனா சார் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும்கூட, சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற வாழ்த்துகள்..” என்றார் நடிகர் பொன்வண்ணன். 

“நாகார்ஜுனாவோடு ஒரு தெலுங்குப் படத்தில் நடித்த பெருமை எனக்கு உண்டு . மிகச் சிறந்த மனிதர் அவர்..” என்று சொன்ன நடிகை குட்டி பத்மினி, கார்த்தியையும் படக் குழுவையும் வாழ்த்தினார்.

DCIM (28) 

“நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவள் நான். அந்த வகையில் இந்த ‘தோழா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து  கொண்டது சந்தோசம் தருகிறது..” என்றார் நடிகை லலிதா குமரி.

மணிரத்னம் இயக்கி சூர்யா நடித்த ‘ஆயுத எழுத்து’ படத்தில் கார்த்தியும், தானும் உதவி இயக்குனராக பணியாற்றியதை குறிப்பிட்டுப் பேசிய இயக்குனர் சுதா, “அப்போதெல்லாம் கார்த்தி எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். மணிரத்னம் சார், அதை பயங்கரமாக கிண்டல் செய்வார்.  கார்த்தி இப்படி உடலை செதுக்கி ஒரு நடிகராக உயர்வார் என்று நான் அப்போ யாருமே நினைக்கவே இல்லை. அவரது முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். எனது ‘இறுதிச் சுற்று’ படம் வெளிவர பி.வி.பி. நிறுவனம் பல உதவிகள் செய்தன. அதற்கு நன்றி..” என்றார்.

DCIM (20) 

நடிகர் சிவகுமார் தன் பேச்சில், “1940-களில் தமிழ்நாட்டில் வெளியான ‘தேவதாஸ்’ என்ற தெலுங்கு படம் பட்டிதொட்டியெல்லாம் சக்கைப் போடு போட்டது. அதன் ஹீரோ நாகேஸ்வரராவ். அவரது தீவிர ரசிகன் நான். அந்த நாகேஸ்வரராவின் மகன்தான் இன்று நம்மிடையே இருக்கும் இந்த நாகார்ஜுனா. நாகேஸ்வரராவின் மகனோடு அவரது ரசிகனான எனது மகன் நடிப்பது எனக்கு பெருமை…” என்றார் 

இசையமைப்பாளர் கோபி சுந்தர் பேசும்போது, “கார்த்தி நாகார்ஜுனா நடிக்கும் இந்தப் படத்துக்கு இசை அமைத்தது போல, சூர்யா சாரின் படத்துக்கும் இசையமைக்க வேண்டும் எனது எனது ஆசை…” என்றார்.

படத்தின் இயக்குநரான வம்சி பேசும்போது, “பொதுவாக இரண்டு ஹீரோக்களை வைத்து இயக்குவது கஷ்டம் என்பார்கள். ஆனால் நாகார்ஜுனா சார், கார்த்தி சார் இருவரும் நட்புடன் பழகியதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கார்த்தியும் தமன்னாவும்தான் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள் . ஆனால், அது நடிப்பில் சாதிப்பதற்கான சண்டை..” என்றார்.

DCIM (24) 

நடிகை தமன்னா தனது பேச்சில், “இந்த வாய்ப்பை எனக்களித்த இயக்குநர், தயாரிப்பாளர் பி.வி.பி. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, நாகர்ஜுனா சாரோடும் கார்த்தியோடும் நடித்தது மகிழ்வான விஷயம்.  இயக்குநர் சொன்னது உண்மைதான். கார்த்தியோடு போட்டி போடுவேன். ஏன்னா அவரிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.. யாரிடம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவர்களோடுதான் போட்டி போட வேண்டும்.. அதனால்தான் அவருடன் செல்லமாக சண்டையிட்டு போட்டி போட்டேன்..” என்றார்.

நடிகர் கார்த்தி பேசும் போது,. “இந்தப் பள்ளியில்தான், நானும் அண்ணன் சூர்யாவும் படித்தோம். இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பள்ளிக்கு கிரிக்கெட் ஆட வந்திருப்பதாக இப்போது  என்னிடம் நாகர்ஜுனா சார் சொன்னார்.

DCIM (52) 

ஒருவருக்காக ஒருவர் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயங்காத இரண்டு நண்பர்கள், அவர்கள் சம்மந்தப்பட்ட ஒரு பெண் ஆகிய கதாபத்திரங்களைக் கொண்டது இந்த ‘தோழா’ படம். நானும், நாகர்ஜுனா சாரும் இப்போது உண்மையிலேயே அப்படியே ஆகி விட்டோம்.

ஹைதராபாத்தில் அவரது ஸ்டுடியோவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.  சைக்கிள் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு. அங்கேயும் ஒட்டினேன். அவரிடம் பேசும்போது, ”ஸ்டூடியோவில் ஏன் இத்தனை ஸ்பீட் பிரேக்கர்ஸ் போட்டு இருக்கீங்க..?” என்றேன். சாப்பிட்டு முடித்து விட்டு மீண்டும் சைக்கிள் எடுத்துக் கொண்டு போனால், ஒரு ஸ்பீட் பிரேக்கரையும் காணவில்லை. எனக்காக உடனே எல்லாவற்றையும் ஆள் வைத்து தூக்கிவிட்டார். அவர் என் மீது கொண்ட அன்புக்கு வேறு என்ன சொல்ல வேண்டும்..?” என்றார்.

நடிகர் நாகர்ஜுனா பேசும்போது, “நான் சென்னையில் பிறந்தவன். எனவே நானும் சென்னைக்காரன்தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம்.

DCIM (65)

படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்திருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அப்போது எனக்கும்  எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும். 

இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா..? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில் டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர். அவரது அடுத்த படமான ’24’ வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.. ” என்றார்,

அது மட்டுமல்ல நடிகர் கார்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி, ‘இதயத்தை திருடாதே’ படத்தில் அவர் பேசிய ‘ஓடிப் போலாமா?’’ வசனத்தை பேசி அரங்கை அதிர வைத்தார் . 

குட்டி ஹெலிகாப்டர் ஒன்று பறந்து வந்து படத்தின் பாடல்கள் அடங்கிய  தகடை அளிக்க, பாடல்களை வெளியிட்டார் நடிகர் சூர்யா.

DCIM (68)

நடிகர் சூர்யா படக் குழுவினரை வாழ்த்திப் பேசும்போது, “எனது ‘24’ படம் பற்றி நிறைய பேர் இந்த அரங்கில்  குரல் கொடுக்கிறீர்கள். இன்னும் இரண்டு வாரத்தில் படத்தின் டீசர் வருகிறது. அதுவரை பொறுமை.. இப்போது ‘தோழா’ பற்றி பேசுவோம்.

நாங்கள் படித்த பள்ளியில் நட்பின் பெருமை சொல்லும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு பற்றி அடிக்கடி கார்த்தி வியந்து சொல்வார். கதை, திரைக்கதை, பாடல்கள், படம் எடுக்கப்பட்ட விதம் அனைததையும் பற்றிப் பாராட்டிப் பேசிக் கொண்டே இருப்பார்.

DCIM (79) 

தமன்னாவை ‘அயன்’ படத்தில் நடித்தது முதலே பார்த்து வருகிறேன். அவர் சிறந்த உழைப்பாளி. மற்றும் திறமைசாலி . அவரது முயற்சியும், உழைப்பும்தான் அவரை உயர்த்தி இருக்கிறது. கோபி சுந்தரின் பாடல்கள் எல்லாமே மிக சிறப்பாக இருக்கிறது . விரைவில் ஒரு படத்தில் அவரோடு சேர்வேன். 

எங்கள் நாகர்ஜுனா சார்.. மிகச் சிறந்த மனிதர்..! ”வாழ்க்கை என்றால் பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை சந்தோஷமாக எதிர்கொண்டால் பிரச்னை ஓடிவிடும்’ என்பார். சொல்கிறபடியே வாழ்பவர். அதனால்தான் இன்னும் இவ்வளவு இளமையாக அழகாக இருக்கிறார். வாழ்க்கையைப் பற்றிய அவரது இந்த அற்புதமான பார்வை, நாகர்ஜுனா சாரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டு,  பின்பற்ற விரும்பும் விஷயம்..” என்றார். 

நன்றியுரையாற்றிய தயாரிப்பாளர் பரம்.வி.பொட்லுரி, “தோழா’ ஒரு தமிழ் படம். இதில் நடித்திருக்கும் கார்த்தி தமிழர். நாகர்ஜுனா மற்றும்  நாங்கள் தெலுங்கு. இசையமைப்பாளர் கோபி சுந்தர் மலையாளம். தமன்னா மும்பை.. அந்த வகையில் இது இந்திய ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் படம்..” என்றார் முத்தாய்ப்பாக..!

Our Score