லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் ‘பெட்டிக்கடை.’
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். இன்னொரு நாயகனாக ‘மொசக்குட்டி’ வீரா நடித்துள்ளார்.
கதாநாயகிகளாக சாந்தினி மற்றும் வர்ஷா இருவரும் நடித்துள்ளனர். இன்னொரு ஜோடியாக சுந்தர்-அஸ்மிதா நடித்துள்ளனர்.
மற்றும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி, ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரநாத், ஐஸ்வர்யா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அருள், சீனிவாஸ், இசை – மரியா மனோகர், பாடல்கள் -நா.முத்துக்குமார், சினேகன், இசக்கி கார்வண்ணன், நடனம் – வின்செண்ட் விமல், சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை -முருகன், தயாரிப்பு மேற்பார்வை – செல்வம், எழுத்து, தயாரிப்பு, இயக்கம் – இசக்கி கார்வண்ணன்.
படம் பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசும்போது, “நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக் கடைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். ஒரு பெட்டிக் கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அவர்களை அன்பாக ‘அண்ணாச்சி’, ‘பாய்’, ‘செட்டியார்’ என்று உரிமை கொண்டாடி அழைப்போம்.
அந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்தக் கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை இப்போது அறுத்து எறிந்துள்ளனர் கார்ப்பரேட் முதலாளிகள்.
சாதாரண பெட்டிக் கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே இந்தப் ‘பெட்டிக்கடை’ திரைப்படம்.
படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது…” என்றார்.
இந்தப் படத்தில் திரைப்பட பாடலாசிரியர் அமரர் நா.முத்துகுமார் எழுதிய “சுடல மாட சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள” என்ற பாடல் யூ டியூப் ரசிகர்களால் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பாராட்டு மழையால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே தேசிய விருதுகளை அமரர் நா.முத்துகுமார் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று திரை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 22-ம் தேதி திரைக்கு வருகிறது.









