full screen background image

பேட்டைக்காளி – வெப் சீரீஸ் – விமர்சனம்

பேட்டைக்காளி – வெப் சீரீஸ் – விமர்சனம்

ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் இணையத் தொடர் என்ற பெருமையை இந்தப் ’பேட்டைக்காளி’ பெற்றுள்ளது.

’மேற்கு தொடர்சி மலை’ அந்தோணி இந்த இணையத் தொடரில் கதாநாயகனாக, தன்னுடைய திறமையான நடிப்பை இதில் கொடுத்துள்ளார். ஷீலா நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், கிஷோர், வேலா ராமமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இயக்குநர் La. ராஜ்குமார் இந்த நிகழ்ச்சியை நடத்துபவராகவும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழி நடத்துபவராகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளனர்.

ஆஹா ஓடிடி தளத்தில் இந்த இணையத் தொடர் வெளியாகியுள்ளது.

காளைகளை அடக்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் இடையே உள்ள பெருமை, வீரம், விளையாட்டுத் திறன் மற்றும் பலவற்றை இந்தப் ‘பேட்டைக்காளி’ காண்பிக்கிறது.

ஜல்லிக்கட்டும் தமிழர்கள் வாழ்வும் பிரிக்க முடியாத ஒன்று. அதைத் தரமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டின் உணர்வுப்பூர்வமான தருணம் என்றால் அது காளை வளர்ப்பவர்களின் அன்பு மற்றும் அதை விளையாட்டில் அடக்குபவர்களின் ஆக்கிரமிப்பு இவற்றைச் சொல்லலாம்.

ஜல்லிக்கட்டு கதை என்றால் அது மதுரையைச் சுற்றிதானே நடக்கும். இந்தக் கதையும் மதுரையைக் களமாக கொண்டதுதான். சீரிஸின் முதல் எபிசோடில் நடிகர் கிஷோர் நிறைய மாடுகளை தன்னகப்படுத்துகிறார். மேலும் பலி தீர்க்கும் பொருட்டு ஒரு கொலையும் செய்கிறார். அவரது பாயிண்ட் ஆப் வீவ்யூவில் கதை துவங்குகிறது.

அதன்படி கிஷோரின் அக்கா மகனான கலையரசன் மாடுபிடி வீரன். அவரின் பெரும் லட்சியமே எல்லா மாடுகளையும் அடக்க வேண்டும் என்பதுதான். தாய் மாமன் மகள் மீது காதலோடும், ஜல்லிக்கட்டு போட்டிகளோடு வாழ்வு எனவும் சுற்றித் திரிகிறார்.

பக்கத்து ஊரில் இருக்கும் வேல ராமமூர்த்தி பெருஞ்சேர்மன். அவரது சுயநல விருப்பத்தால் ஒரு இளம் பெண்ணை மனைவியாக்கி கொண்டுள்ள அவர், ஜல்லிக்கட்டுப் போட்டியில் அவரது மாடு களம் இறங்கும் போது  கலையரசன் ஊரைச் சேர்ந்தவர்கள் களத்தில் இறங்க கூடாது என்பதை விதியாக வைத்திருக்கிறார்.

வேல ராமமூர்த்தி தன்னைவிடவும் தன் மகன்கூட பெயர் வாங்கி விடக்கூடாது என்று நினைப்பவர். அதனால் அவரது மகனுக்கு, அப்பா மீது வெறுப்பும் விரோதமும் வளர்கிறது. கலையரசன் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வேல ராமமூர்த்தி காளையை அடக்கும்படி தூண்டப்படுகிறார். அதனால் பெரும் விபரீதம் நடைபெறுகிறது.

மேலும் ஆற்று நீரில் தானாக ஒரு கன்று வந்து ஷீலாவின் கைகளுக்குள் வருகிறது. அந்தக் கன்றுக்கு ‘பேட்டக்காளி’ என்று பெயர் வைக்கிறார்கள். அந்தக் கன்று ஜல்லிக்கட்டு காளையாக வளர்க்கப்படுகிறது.

இந்தப் பேட்டக்காளி எப்படி முன் நடந்த சம்பவங்களோடு லிங் ஆகிறான்? வேல ராமமூர்த்தி, கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தியின் மகன், ஷீலா, வேல ராமமூர்த்தியின் இளம் மனைவி ஆகியோரின் பங்களிப்பு என்னென்ன என்பதே இந்த பேட்டைக்காளியின் அடுத்தடுத்த எபிசோட்கள் சொல்லவிருக்கும் கதை.

துடிப்பும், துள்ளலுமாக என வீறு நடை போட்டு நடித்துள்ளார் கலையரசன். வெள்ளந்தி மனிதனாகவும், வீரனாகவும், பாசக்காரனாகவும் அவர் காட்டியிருக்கும் பெர்பாமன்ஸ் ரசிக்க வைக்கிறது.

பொறுப்புள்ள தாய் மாமனாகவும், ஆவேசமிக்க சுயமரியாதைக்காரனாகவும் ரொம்பவே ஈர்க்கிறார் கிஷோர். படத்தின் கதையாழத்தை தன் நடிப்பாலே நமக்கு உணர்த்துகிறார் கிஷோர்.

வேல ராமமூர்த்தியின் வில்லத்தனம் ஒரு சில இடங்களில் செயற்கையாக தெரிந்தாலும் பல இடங்களில் நன்றாகவே எடுபட்டுள்ளது. அவரின் இளம் மனைவியாக வருபவரும் நல்ல நடிப்பு. வேல ராமமூர்த்தியின் மகன் கேரக்டர் நச் என வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார். ஷீலா மூன்றாம் எபிசோடில் அறிமுகம் ஆனாலும் மனதில் பதிந்து போகிறார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காட்டப்படும் கேமரா கோணங்கள் எல்லாமே அபாரம். குறிப்பாக ‘பேட்டக்காளி’ காளையை அறிமுகம் செய்யும் காட்சியில் கேமராமேன் பம்பரமாகச் சுழன்றிருக்கிறார்.

இசை அமைப்பாளர் பின்னணி இசையில் பல இடங்களில் மாஸ் கூட்டியிருக்கிறார். காளை அடக்கும் காட்சிகளில் நல்ல அதிர்விசையை அடித்து உற்சாகம் காட்டுகிறார். சீரிஸ் என்பதால் படத் தொகுப்பாளர் சுதந்திரமாக செயல்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு எல்லா வீரர்களுக்கும் பொதுவான விளையாட்டு என்ற பொதுப் பார்வை தவறு, வீரத்தை நிரூபிப்பதிலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது என்பதை இயக்குநர் பொட்டில் அடித்தாற்போல் புரிய வைத்துள்ளார்.

பல இடங்களில் பட்ஜெட் குறைபாடுகள் தெரிகின்றன. முதல் இரண்டு எபிசோடுகள் நம்மை முழுமையாக கதைக்குள் இழுக்கவில்லை. ஆனால், நாமறியாத நமது கலாச்சாரத்தை உலகறியச் செய்யும் இப்படியான படைப்புகள் அவசியம்.

இதுவரை நான்கு எபிசோட்கள் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. விரைவில் அடுத்தடுத்த எபிசோட்ஸ் வரவிருக்கின்றன.

பார்க்கலாம்தான்..!

Our Score