ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகிவரும் ‘பென்சில்’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்படத்தில் மேலும் ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், வி.டி.வி. கணேஷ், சுஜா வாருணி, மிர்ச்சி ஷா, அபிஷேக் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். ராஜீவன் கலை இயக்கம் செய்திருக்கிறார். திலீப் சுப்பாராயன் சண்டை பயிற்சி மேற்கொண்டுள்ளார். படத்தின் ஹீரோவான ஜி.வி.பிரகாஷ்குமாரே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த ‘பென்சில்’ திரைப்படத்தின் திரைக்கதை சற்றும் யூகிக்க முடியாத வித்தியாசமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் பெற்றோர்களும் தங்களின் பள்ளிக் காலத்தை நினைவுகூறும் அளவுக்கு காட்சிகள் அமைந்துள்ளன.
யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக துணை நடிகர்களைப் பயன்படுத்தாமல் உண்மையான பள்ளி மாணவ, மாணவியர் 100 பேருக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறும் ஒரு சண்டை காட்சியில் ஹீரோ ஜி.வி.பிரகாஷ்குமார், ஹீரோயின் ஸ்ரீதிவ்யா இருவருமே நடிக்க வேண்டியது இருந்த்தாம். சண்டை பயிற்சியாளர் டூப் போட்டுக் கொள்ளும்படி இருவரையும் வற்புறுத்திக் கேட்டும் இருவரும் ஒரு சேர மறுத்துவிட்டு இரண்டு நாட்கள் எடுக்கப்பட்ட அந்த சண்டை காட்சியில் அவர்களே நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இயக்குநர் மணி நாகராஜ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேன்னிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.