full screen background image

நடிகர்களே இல்லாத படத்தை இயக்குகிறார் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ இயக்குநர் பட்டாபிராமன்!

நடிகர்களே இல்லாத படத்தை இயக்குகிறார் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ இயக்குநர் பட்டாபிராமன்!

உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நடிகர்களே இல்லாமல் ஒரு படம் உருவாக இருக்கிறது.

பலராலும் பாராட்டப்பட்ட ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய பட்டாபிராமன் (விபிஆர்) இயக்கி, தயாரித்து, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளது.

குறும் படப் பின்னணியில் இருந்து வந்த விபிஆர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. இவர் இதற்கு முன்பு இயக்கிய ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டு பெற்றது.

இந்தப் புதிய, வித்தியாசமான முயற்சி பற்றி இயக்குநர் வி.பி.ஆர். பேசும்போது, “எனது இந்தப் புதிய படத்தின் கதைக் களம் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.  இந்த புதிய முயற்சி அனைவரின் கவனத்தை ஈர்க்கும். இப்படத்தின் கதைக்கு நடிகர்கள் தேவையில்லை, காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை மட்டுமே பார்வையாளர்களை ஈர்க்கப் போதுமானதாக இருக்கும்.

அனைவரையும் ரசிக்க வைக்கும் நோக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இந்தப் படத்தைக் கண்டு ரசிக்கலாம். 2023 கோடை விடுமுறைக் காலத்தில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். 

ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருக்கும் படத்தை இயக்கத்தான் முதலில் திட்டமிட்டிருந்தேன். ஆனால் பார்த்திபன் ஏற்கெனவே அதைச் சாதித்துவிட்டதால், நடிகர்கள் இல்லாமல் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

புதிய படத்திற்கு, திரையில் நடிகர்கள் இல்லாவிட்டாலும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் திரைக்கதை எழுதியுள்ளேன். இந்தப் படம் கின்னஸ் சாதனை மற்றும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டுக்கான முயற்சியாகவும் இருக்கும்” என்றார்.

விபிஆர் படத்தொகுப்பாளராகவும் பங்களிக்க உள்ள இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைக்க, விஜய் திருமூலம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் தேவராஜ் இந்த படத்திற்குக் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகளை ரெமி ஸ்டுடியோ மேற்கொள்ளவுள்ளது.

எஸ் பயாஸ்கோப் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் பட்டாபிராமன் தயாரித்து இயக்குகிறார்.

Our Score