RFC கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.P.கோலி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஆதி நாயகனாகவும், ஹன்சிகா மோத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான்.
மேலும் பாலக் லால்வாணி பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், V.T.V. கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, ‘டைகர்’ தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதி – சபீர் அஹமது, இசை – சந்தோஷ் தயாநிதி, படத் தொகுப்பு – கோபி, கலை இயக்கம் – சசி, பத்திரிக்கை தொடர்பு – யுவராஜ்.
‘டோரா’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடமும் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
இப்படம் முழுக்க, முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் மிக முக்கிய அம்சமாக, ஹன்சிகாவின் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
நாயகன் ஆதி ஒரு தோல்வியடைந்த தொழில் முனைவர். அப்பா வாங்கிக் கொடுத்த கடன் தொகையை வைத்து தொழில் செய்தவர் தொழில் நஷ்டமாகி அப்பாவை கடனாளியாக்கிவிட்டார். ஒரு மாதத்திற்குள் கடனை கட்டாவிட்டால் ஆதியின் தங்கையை தனக்குத் திருமணம் செய்து தரும்படி கடன் கொடுத்தவன் வீடு தேடி வந்து மிரட்டுகிறான்.
இதனால் ஒரு மாதத்தில் 25 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதற்காக சென்னைக்கு ஓடி வருகிறார் ஆதி. சென்னையில் அவருடைய பள்ளிக்கூட நண்பனான யோகிபாபுவை சந்திக்கிறார். யோகிபாபு ஒரு பெரிய திருட்டு கம்பெனியில் திருடுதலில் எக்ஸ்பர்ட்டாக வேலை செய்து வருகிறார். தனது நிறுவனத்திலேயே ஆதிக்கும் ஒரு வேலை வாங்கித் தருகிறார் யோகிபாபு.
வந்த இடத்தில் ரோட்டில் பார்த்த பாலக் லால்வாணியைப் பார்த்தவுடன் லவ்வாகிறார் ஆதி. இது ஒரு புறமிருக்க.. பாண்டியராஜன் ஒரு விஞ்ஞானியாக பல்வேறு முயற்சிகளை செய்து பல்வேறு கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறார். தற்போது புதிதாக கூடு விட்டு கூடு பாயும் வித்தையை மருந்தாகக் கண்டுபிடித்திருக்கிறார். இதை டெஸ்ட் செய்து பார்க்க ஆள் தேடிக் கொண்டிருக்கிறார்.
இவரிடத்தில் இருந்து முன்பு திருடிய பார்முலாக்களை அமெரிக்காவில் விற்று பெரும் பணக்காரனாகியிருக்கிறார் ஜான் விஜய். இப்போது பாண்டியராஜனின் புதிய கண்டுபிடிப்பை பற்றிக் கேள்விப்பட்டவுடன், எப்படியாவது அதையும் கைப்பற்ற வேண்டும் என்றெண்ணி சென்னைக்கு வந்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் மாநில அமைச்சரான ரவி மரியா ஒரு பெண்ணுடன் பலான வேலைகளைப் பார்த்ததை ஒரு வேலை வெட்டியில்லாதவன் வீடியோ எடுத்து வைத்து மிரட்டுகிறான். இந்த வீடியோவை அவனிடமிருந்து வாங்கிக் கொடுக்கும்படி யோகிபாபுவின் கம்பெனிக்கு வந்து கேட்கிறார் ரவி மரியா. இதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை யோகிபாபு அண்ட் ஆதி டீமிடம் ஒப்படைக்கிறார் கம்பெனி ஓனரான முனீஸ்காந்த்.
அதேசமயம் பாண்டியராஜன் கண்டு பிடித்திருக்கும் புதிய பார்முலாவை திருடி வரும் அஸைண்மெண்ட்டை ஜான் விஜய் யோகிபாபு-ஆதி டீமிடம் ஒப்படைக்கிறார். இதற்காக ஜான் விஜய் கொடுக்கும் 50 லட்சம் ரூபாயை போலீஸ் கெடுபிடியால் வழியில் சந்திக்கும் அமைச்சர் ரவி மரியாவிடம் கொடுத்து, பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு வருகிறார் யோகிபாபு.
அன்றைய இரவில் யோகிபாபுவும், ஆதியும் பாண்டியராஜனின் லேபுக்குள் சென்று பார்முலாவைத் தேடும்போது, எதிர்பாராதவிதமாக அந்தக் கூடுவிட்டு கூடு பாயும் மருந்து யோகிபாபுவுக்குள் ஊசி மூலமாக பாய்ந்துவிடுகிறது.
இதனால் மறுநாள் காலையில் விழித்தெழும் யோகிபாபு, உடல் அளவில் ஹன்சிகா மோத்வானியாகவும், மனதளவில் யோகிபாபுவுமாக மாறிவிடுகிறார்.
இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்காத ஆதி அதிர்ச்சியாகிறார். இந்த உருமாற்றத்தினால் ஆதியின் காதலியான பாலக் லால்வாணி கோபித்துக் கொள்கிறார். ரவி மரியாவிடம் கொடுத்த பணத்தை ஆதியால் மீட்க முடியாமல் போகிறது. ஜான் விஜய் தான் கொடுத்தப் பணத்தைக் கேட்டு ஆதியையும், ஹன்சிகாவையும் கடத்துகிறார். முனீஸ்காந்தை ரவி மரியா மிரட்டியதால் அவரும் களத்தில் குதிக்கிறார். பாண்டியராஜனும் தன் பங்குக்கு தனது பார்முலாவைத் தேடுகிறார்.
ஆக.. உடலால் பெண்.. மனதால் ஆண் என்ற நிலையில் இருக்கும் ஹன்சிகா என்ற யோகிபாபு இதற்கு மேல் என்னவாகிறார்..? அவருடைய பிரச்சினைகள் முடிந்தனவா..? ஆதியின் பொருளாதாரப் பிரச்சினை என்னவானது..? இதையெல்லாம்தான் இந்த ‘பார்ட்னர்’ படத்தின் மீதமான திரைக்கதை.
ஒரு சின்னக் கதை.. முக்கோணத் திரைக்கதை.. இடையில் உருவ மாற்றம்.. என்று வைத்துக் கொண்டு நகைச்சுவையில் அதகளம் செய்திருக்கிறார் இயக்குநர்.
ஆதி முதல்முறையாக சிரிப்பு நாயகனாக நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் சிரிப்பு வருகிறதோ இல்லையோ… அவருடன் நடித்தவர்களால் சிரிக்க முடிகிறது.
ஹன்சிகா, யோகிபாபுவின் மேனரிசத்துடன் படம் முழுவதும் வருகை தந்து சிரிக்க வைக்கிறார். யோகிபாபு படத்தையே தாங்கிப் பிடித்த திரைக்கதையில், தனது ஆளுமையைக் காட்டியிருக்கிறார்.
ரோபோ சங்கர் தன் பங்குக்கு பல காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். கவுண்ட்டர் அட்டாக் வசனங்களால் கவனிக்க வைத்தாலும், ஆபாசமான செய்கைகள் பலவற்றை செய்து கொஞ்சம் முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறார்.
ரவி மரியாவும், ஜான் விஜய்யும் வில்லன் வேடங்களை அலட்சியமாக செய்து கை தட்டல் பெறுகிறார்கள். ஜான் விஜய்யின் டயலாக் டெலிவரியும், வசன உச்சரிப்பும் புதுமையாக இருந்து கவர்கிறது. ரவி மரியா ஜொள்ளு மன்னனாக பேசும் காட்சிகளில் ஆண்களை மட்டுமல்ல.. தியேட்டருக்கு வந்திருக்கும் பெண்களையும் சிரிக்க வைத்திருக்கிறார்.
ஆனாலும் ரவி மரியாவின் படங்களில் தொடர்ந்து நடக்கும் ஆண்களுடனான லிப் கிஸ், இந்தப் படத்திலும் தொடர்ந்திருப்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
பாலக் லால்வாணிக்கு என்ன கதாப்பாத்திரம் என்பது அவருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை. ஆனாலும், அவரும் கடைசிவரையிலும் வரும் அளவுக்குத் திரைக்கதையில் திருத்தம் செய்திருப்பதால் பார்க்க முடிந்திருக்கிறது.
மேலும் பாண்டியராஜன், விடிவி கணேஷ், முனீஸ்காந்த் என்று நகைச்சுவை நாயகர்களும் ஓரளவுக்கு நடித்து படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
சபீர் அஹமதுவின் ஒளிப்பதிவில் குறையில்லை. படம் நெடுகிலும் வண்ணமயமாகி உள்ளது. சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் கேட்கவில்லை. ஆனால் இசை மட்டுமே கேட்கிறது. கலை இயக்குநர் சசி பாண்டியராஜனின் லேபையும், ஆதியின் வீட்டையும் மிகச் சரியாக வடிவமைத்துக் காண்பித்திருக்கிறார்.
ரொம்பவும் சின்னக் கதைதான். நகைச்சுவைதான் பிரதானம் என்று ஆகிவிட்டபடியால் அதை நோக்கியே திரைக்கதை அமைத்து படம் நெடுகிலும் ஆங்காங்கே நம்மை சிரிக்க வைத்து ஜாலியாக்கி அனுப்பி வைத்திருக்கிறார் இயக்குநர்.
அந்த வகையில் இந்த ‘பார்ட்னர்’ படம், லாஜிக்கெல்லாம் பார்க்காமல் சிரித்துவிட்டு வர வேண்டிய படம்தான்..!
RATING : 3.5 / 5









