நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் ‘ஒத்த செருப்பு’ என்ற வித்தியாசமான படத்தையடுத்து, ஒரே ஷாட்டில் எடுக்கப்படும் தனது அடுத்தப் படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்து வந்தார்.
‘இந்த மாதமே ஷூட்டிங் போகலாம்’ என்ற திட்டத்தில் இருந்தவர் இப்போது அதனை ஒத்தி வைத்திருக்கிறார்.
காரணம், படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் 35 நாட்கள் ஒத்திகை நடைபெறப் போகிறது. இதில் 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் வரும் நடிகர்களுக்குக்கூட அதே 35 நாட்கள் ஒத்திகைக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைப்பது பார்த்திபனுக்கு சிரமமாக இருக்கிறதாம்.
இதற்கிடையில் மழை வேறு வந்துவிட.. பார்த்திபன் நடிப்பதற்காக ஒத்துக் கொண்ட வெளிப்படங்களும் தங்களது படப்பிடிப்பைத் துவக்கியதால் பார்த்திபன், இந்தப் படங்களுக்கு போக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
எழில் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திலும் பார்த்திபன் நடிக்கிறார். மேலும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்காக தற்போது ஹைதராபாத்தில் செட் போட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதிலும் பார்த்திபன் தொடர்ச்சியாக நடிக்க வேண்டியிருப்பதால்..
இந்த நடிப்பு வேலையையெல்லாம் முடித்துவிட்டு பின்பு இயக்குநர் வேலையைக் கையில் எடுக்கலாம் என்று நினைத்து தற்போதைக்கு படத்தை ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார் பார்த்திபன் என்பது புதிய தகவல்.