full screen background image

“120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த அனுபவத்தை தரும்…” – ஹீரோ லூத்ஃபுதின் பாஷாவின் நம்பிக்கை..!

“120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்த அனுபவத்தை தரும்…” – ஹீரோ லூத்ஃபுதின் பாஷாவின் நம்பிக்கை..!

பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ள படம் ‘பறந்து செல்ல வா’. இந்தப் படத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நாசரின் மகன் லூத்ஃபுதீன் பாஷா ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு இது முதல் ஹீரோ அனுபவமாகும். ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் சீன நடிகையான நரேல்கேங் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நகைச்சுவை நடிகர்களாக சதிஷ், கருணாகரன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

paranthu sella vaa poster

ஒளிப்பதிவு – பிரபாகர் மற்றும்  சந்தோஷ். ஜோஸ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தை இயக்கிய அனுபவசாலியான இயக்குநர் தனபால் பத்மநாபன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி படத்தின் ஹீரோ லூத்ஃபுதீன் பேசுகையில், “முதல் முறையாக இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளேன். இதனால் இந்தப் படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமாக உள்ளது.

_mg_1181

‘சைவம்’ திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்த படங்களில் நடிப்பதற்காக நான் கதைகளை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் தனபால் இந்த ‘பறந்து செல்ல வா’ கதையை கொடுத்து, ‘இந்தப் படத்தில் சம்பத் என்ற முக்கிய கதாபாத்திரம் உள்ளது. அதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும்’ என்றார். கதையை முழுவதும் படித்தேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது. எனக்கும் பிடித்திருந்தது. நடிக்க ஒத்துக் கொண்டேன்.

இந்தப் படம் எனக்கொரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. இதுவரையிலும் இல்லாதவகையில்  முற்றிலும் புதிய விதத்தில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். படம் முழுவதும் சிங்கப்பூரில்தான் படமானது. 120 ரூபாயில் சிங்கப்பூரை சுற்றி பார்த்தது போல் ஒரு நல்ல அனுபவத்தை தரும்.

முதலில் இந்த படத்தில் நடிக்கும்போது, எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அப்பா என்னிடம் ‘நீ ஒரு நடிகன். கதாநாயகன் என்பதனை மறந்து மிக சாதாரணமான நடிகன் என்று நினைத்து நடித்தாலே போதும்’ என அறிவுரை கூறினார். 

_mg_8884

இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் என்னுடன் நட்போடு இருந்தார். எனக்கு சில இடங்களில் தடுமாறும்போது நடிப்பு சொல்லிக் கொடுத்தார்.

படம் தயாரான பின்பு என்னுடைய அம்மாவையும், தாணு சாரையும்  அழைத்து படத்தை திரையிட்டு காட்டினோம். தாணு ஸார் இடைவேளையில் ஏதாவது கூறுவார் என எதிர்பார்த்தேன். அவரோ முழு படத்தையும் பார்த்துவிட்டுத்தான் என்னை அழைத்து மிகவும் பாராட்டினார். 50 நாட்களில் இந்தப் படமாக்கப்பட்டு இருப்பதை கேள்விப்பட்டு அதற்காகவும் எங்களை பாராட்டினார்.

இப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் மிக சிறந்த முறையில் வந்துள்ளது. மேலும் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ரஜினி சார் நடித்த பாடலான, ‘நம்ம ஊர் சிங்காரி சிங்கப்பூர் வந்தாளாம்’ பாடல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. ஒரு மிக சிறிய குழு ஒன்றிணைந்து மிக சிறந்த முறையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது…” என்றார் லூத்ஃபுதின் பாஷா.

aishwarya rajesh

‘பறந்து செல்ல வா’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் பற்றிப் பேசும்போது, “படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் செல்வது எனக்கு இதுதான் முதல் முறை. இந்தப் படத்தில் நான் மார்டன் கேர்ளாக நடித்திருக்கிறேன். கதாநாயகனாக நடிக்கும் லூத்ஃபுதீனுக்கு இது முதல் படம் என்பதால்,  படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் பதற்றத்துடன் இருந்தார். நான் அவரோடு நட்புடன் பழகிய பின்புதான் காட்சிகளில் இயல்பாக நடித்தார். நாங்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்தோம். படப்பிடிப்பு மிக சிறந்த முறையில் நடந்தது..” என்றார்.

Our Score