full screen background image

பரம்பொருள் – சினிமா விமர்சனம்

பரம்பொருள் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை கவி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் & கிரிஷ் இருவரும் இணைந்த தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில்  அறிமுக நாயகனான அமிதாஷ் நடிக்க.. நடிகர் சரத்குமார் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி.சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

கலை இயக்குநராக குமார் கங்கப்பன், சண்டை பயிற்சியாளராக தினேஷ் சுப்பராயன், நடன இயக்குநராக சதீஷ் கிருஷ்ணன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி ஆகியோர் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். அறிமுக இயக்குநரான சி.அரவிந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சக்திவேலன் வெளியிட்டுள்ளார்.

சமீபத்திய தமிழ்த் திரைப்படங்களின் போக்கு சஸ்பென்ஸ், திரில்லர் வகை படங்களாகவே இருக்கிறது. கடைசியாக இதே ஜானரில் வெளிவந்த ‘போர்த் தொழில்’ திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த வெற்றியைத் தொடுவதற்காக வந்திருக்கும் படம் இது.

நாயகன் அமிதாஷ் ஏதோ ஒரு காரணத்திற்காக தனது குடும்பத்தைப் பிரிந்து, தனித்து வாழ்ந்து வருகிறார். அவரது தங்கைக்கு வினோதமான நோய் தாக்கியிருப்பதால் அதற்கான சிகிச்சைக்கு ஆகும் செலவுக்காகப் பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.

நாகப்பட்டினம் அருகேயிருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தனது நிலத்தைத் தோண்டும்போது ஒரு ஐம்பொன் சிலை கிடைக்கிறது. அந்த சிலையை சிலை கடத்தல் பேர்வழியான சற்குண பாண்டியனிடம் விலை பேசுகிறார் அந்த விவசாயி.

சிலையைப் பார்க்கும் சற்குண பாண்டியன் அதைக் கைப்பற்றும் பொருட்டு அந்த விவசாயியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுவிட்டு அந்தச் சிலையுடன் எஸ்கேப்பாகுகிறார். ஆனால் சில நாட்களில் சற்குண பாண்டியனும் இறந்துபோய்விட அந்த சிலை இப்போது யாரிடம் இருக்கிறது என்பதே தெரியாத நிலைமை.

இந்த நேரத்தில் கமிஷனர் ஆபீஸூக்கு வரும் லோக்கல் இன்ஸ்பெக்டர் சரத்குமாருக்கு, இந்த விவகாரம் தெரிய வருகிறது. அவரும் இதைப் பற்றி விசாரிக்கத் துவங்குகிறார். இந்த நேரத்தில் சரத்குமாரின் வீட்டில் திருடப் போகும்போது சரத்குமாரிடம் சிக்கிக் கொள்கிறார் அமிதாஷ்.

சரத்குமார் விசாரிக்கும்போது சற்குண பாண்டியனின் விசிட்டிங் கார்டை கொடுத்து தான் அவரிடம்தான் உதவியாளராகப் பணியாற்றியதாகச் சொல்கிறார் அமிதாஷ். அந்த சிலை விவகாரம் சரத்குமாருக்கு அப்போது ஞாபகத்திற்கு வர.. அமிதாஷை வைத்தே அந்த சிலையைக் கண்டு பிடிக்கத் திட்டமிடுகிறார் சரத்குமார்.

அதற்குத் தோதான வகையில் சற்குணபாண்டியனின் முன்னாள் கூட்டாளி ஒருவரிடமிருந்து அந்த சிலை சரத்குமாரின் கைக்கு வருகிறது. அதை விற்றால் 50 கோடியாவது கிடைக்கும். அதில் பாதி, பாதியாக ஷேர் செய்து கொள்ளலாம் என்று சரத்குமாரும், அமிதாஷும் திட்டமிடுகின்றனர்.

கடைசியாக சிலை கடத்தல் தொழிலில் ஒரு பெரும் புள்ளியான வின்சென்ட் அசோகனின் தொடர்பு சரத்குமாருக்குக் கிடைக்கிறது. வின்சென்ட்டோ சிலைக்கான தொகையாக லட்சத்தில் துவங்கி, கடைசியாக 15 கோடியில் வந்து முடிக்கிறார்.

சிலையைக் கொடுத்து பணத்தை வாங்க நினைக்கும் நேரத்தில் அந்த சிலை உடைந்து போகிறது. இப்போது சரத்குமார்-அமிதாஷ் ஜோடி என்ன செய்கிறது..? இருவரும் சிலைக்காக என்ன செய்தார்கள்..? அமிதாஷூக்குப் பணம் கிடைத்ததா..? இல்லையா..? அமிதாஷின் தங்கை உயிர் பிழைத்தாளா என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான, விறுவிறுப்பான திரைக்கதை.

சரத்குமாரின் இன்ஸ்பெக்டர் கேரக்டரின் மீதுதான் மொத்தப் படத்தையும் சுமத்தியிருக்கிறார் இயக்குநர். நீதி, நேர்மை, நியாயம் என்பதெல்லாம் தனது பணியில் கிடையாது.. அநியாயம், அட்டூழியம், அடாவடி என்பதே தனது கொள்கை என்பதை நாசூக்காக தனது பல வசனங்களில் பேசிக் காட்டுகிறார் சரத்குமார்.

எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும்.. இந்த போலீஸ் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதற்குள்ளாக மிகப் பெரிய தொகையை சம்பாதித்துவிட்டு பின்பு அந்தப் பணத்தைப் பாதுகாத்துவிட்டு தனது வாழ்க்கையை இன்ப மயமாக்க வேண்டும் என்பதுதான் சரத்குமாரின் லட்சியம். அதற்காகத்தான் சிலை கடத்தல் தொழிலில் தானும் இறங்குகிறார் சரத்குமார்.

அமிதாஷூடன் பல சமயங்களில் உரசல் இருந்தாலும், அவ்வப்போது தனது போலீஸ் புத்தியைக் காட்டிஅமிதாஷை வளைத்துப் போடுவதும், சிலை செய்து கொடுத்தவனை மட்டை செய்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும், சிலை கடத்தல் புள்ளிகளிடம் போலீஸ் கெத்து மாறாமல் பேசி சமாளிப்பதும்.. தனது குடும்பப் பிரச்சினையை பெரிதாக நினைக்காமல் பணம் சம்பாதிப்பது ஒன்றையே பெரிதாய் நினைக்கும் தனது கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சரத்குமார்.

இறுதியில் தான் போட்ட ஸ்கெட்ச் தப்பாகி தானும் அந்த வலையில் சிக்கிக் கொண்டதை அறிந்து உடனேயே புத்திசாலித்தனமாய் செயல்படும் ஸ்பீடிலும் கை தட்ட வைத்திருக்கிறார் சரத்குமார்.

அமிதாஷ் ஏற்கெனவே சில படங்களில் சின்னக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம்தான் இவரது நாயகன் அவதாரத்துக்கான முதல் படம்.

இவருடைய தோற்றமும், நடிப்பும் ஹீரோவுக்கான மெட்டீரியலாக அமைந்திருப்பது சிறப்புதான். சரத்குமாரிடம் பணிந்து போவதாகக் காட்டிக் கொண்டு, அப்பாவிடம் பேசாமல் ஒதுங்கிப் போவதாகக் காண்பித்து, தங்கையிடம் பாசத்தைக் கொட்டி, வில்லன்களிடம் வீரத்தைக் காட்டி.. பாலாஜி சக்திவேலிடம் சமாதானம் பேசி.. சிலை கடத்தல் புள்ளிகளிடம் சிலையின் பெருமையை எடுத்துச் சொல்லி.. நாயகியிடம் சிலையைப் பார்ப்பதுபோல தனது இருப்பைக் காண்பித்து காதலுக்குள் இழுத்து.. இன்னும் படம் நெடுகிலும் பல்வேறு தோரணத்தில் வலம் வந்து, சரத்குமாரை சமாளித்து, வில்லன்களை விரட்டியடித்து.. கடைசியில் ரசிகர்கள் அனைவரின் நெற்றியிலும் நாமத்தைப் பூசும்போது “அட ராமா..” என்று நம்மையும் ஆச்சரியத்தில் திளைக்க வைத்திருக்கிறார் நாயகன் அமிதாஷ். வெல்டன். சிறப்பான எதிர்காலம் இவருக்குக் காத்திருக்கிறது.

இன்னும் வேறு மாதிரியான கதாப்பாத்திரங்கள் இவருக்குக் கிடைத்து அதை நல்லவிதமாகப் பயன்படுத்தி, அதில் தன்னை மெருகேற்றிக் கொண்டு நடித்தால்… வரும் காலத்தில் முக்கிய நடிகர்கள் லிஸ்ட்டில் அமிதாஷூம் இடம் பெறலாம்.

நாயகியான காஷ்மீரா பர்தேசிக்கு அதிகமான காட்சிகள் இ்ல்லையென்றாலும் படத்தோடு ஒன்றிணையும் ஒரு கதாப்பாத்திரம். காதலுக்கு நேரமில்லாமல் அவளும் நோக்கினாள்.. அண்ணனும் நோக்கினான்’ டைப்பில் பார்த்துக் கொண்டு கடைசியாக காதல் வலையில் தான் சிக்கியதை சொல்லும்போது ரசிக்க வைத்திருக்கிறார் காஷ்மீரா.

தனக்குக் கிடைத்த குணச்சித்திர கதாப்பாத்திரத்தை செவ்வனே செய்து தனது பண்பட்ட நடிப்பின் மூலம் படத்திற்கு ஹெவியான வெயிட்டை கொடுத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல்.

அவர் அறிமுகமாகும் காட்சியிலேயே முகத்தை இறுக்கமாக்கி வெக்கு, வெக்கென்ற நடையுடன் போகும்போதே இவர்தான் படத்தில் டிவிஸ்ட் பார்ட்டியாக இருக்கப் போகிறார் என்பது தெரிந்தது. அதை நிஜமாக்கிவிட்டார் இயக்குநர்.

சரத்குமாரிடம் தனக்கான ரேட்டை ஏற்றுவதற்காக தான் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டேன் என்பதை அவர் சொல்லிக் கொண்டே போகும் காட்சியில் ஒவ்வொரு வசனத்திற்கும் கை தட்டல்கள் தூள் பறக்கிறது. வெல்டன் இயக்குநரே!

சிலை கடத்தல் புள்ளிகளான வின்சென்ட் அசோகனும், அவரது கூட்டாளியும் காட்டும் நடிப்பும், அலட்சியமான பேச்சுக்களும் கடத்தல் பேர்வழிகளின் நிஜத்தைக் காட்டுவதுபோல இருந்தது.

நோயின் தாக்கத்தால் அவதிப்படும் அமிதாஷின் தங்கை தன் வேதனையை வெளிப்படுத்தும் ஒரு காட்சியில் மனதைக் கவர்கிறார்.

மற்றும் படத்தில் பங்கு கொண்டிருக்கும் அனைத்து நடிகர், நடிகைகளுமே சிறப்பான வகையில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டைத் தருவோம்.

படத்தின் பெரும் பகுதி இரவு நேரத்தில் படமாக்கியிருந்தாலும் அதை தெளிவாகப் படம் பிடித்துக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டி குமார். இவரால் காஷ்மீராவின் அழகு மேன்பட்டிருக்கிறது. காட்சிக் கோணங்களால் பலவிதங்களிலும் நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.

பல்வேறு லொகேஷன்களில் அனைத்து வகையான பொருட்களையும் நிரப்பி தனது பணியை திறம்பட செய்திருக்கிறார் கலை இயக்குநர். சண்டை இயக்குநர் வழக்கமான சண்டையாக இல்லாமல் நிஜமான சண்டை போல் மாற்றியமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

யுவன்சங்கர்ராஜாவின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை அபாரம். காட்சிகளை நகர்த்துவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார் யுவன். சிலை செய்யும் காட்சிகளில் அதன் தன்மைக்கேற்ப பின்னணி இசையை அமைத்திருக்கிறார் யுவன். படத்தில் இருக்கும் அனைத்து வகையான தொழில் நுட்பங்களும் சிறப்பாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒலி வடிவமைப்பும், உடை வடிவமைப்பும்கூட சிறப்புதான்.

பொதுவாக இது மாதிரியான படங்களில் போலீஸ் யூனிபார்ம், பதவிக் குறியீடு இதிலெல்லாம் கோட்டை விடுவது வழக்கம். ஆனால் இதில் அத்தனை கச்சிதமாக செய்திருக்கிறார் இயக்குநர்.

மேலும் இதற்கு முன்பும் இது போன்ற சிலை கடத்தலை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் சொல்லியிருக்கும் டீடெயிலிங் வேறு எந்தப் படத்திலும் இருந்ததில்லை.

நாகப்பட்டினம், சூடாமணி விகாரம், அந்த புத்தர் சிலை.. புத்தர் எப்படி சோழர்கள் காலத்தில் தமிழ் மண்ணிற்குள் வந்தார்..? புத்தர் சிலை எப்படி காலப்போக்கில் இந்து தெய்வங்களாக சித்தரிக்கப்பட்டது..? தற்போதைய இந்தோனேஷியா, கடாரமாக இருந்தபோது சோழ தேசத்திற்கும் அதற்கும் இருந்த தொடர்பு என்ன..? கடாரம் கொண்டான் என்ற பட்டப் பெயர் ராஜேந்திர சோழனுக்கு எப்படி கிடைத்தது..? என்பது போன்ற வரலாற்றுச் சம்பவங்களை வரிசைக்கிரமமாக பட்டியல் இட்டிருக்கிறார் இயக்குநர்.

இது மட்டுமா..!? ஐம்பொன் சிலை என்றால் என்ன..? அது எந்தெந்த தனிமங்களால் உருவாக்கப்படுகிறது..? இந்த சிலையை புதிதாக உருவாக்க என்னென்ன வேண்டும்..? புதிய சிலையை பழைய சிலையாக்க என்ன செய்ய வேண்டும்..? சிலை ஒரிஜினலா.. டூப்ளிகேட்டா என்பதை எப்படி கண்டறிய வேண்டும்..? சிலையின் உண்மையான வயதை எப்படி கணக்கிடுகிறார்கள்..? இதற்காக என்னென்ன பரிசோதனைகள் எங்கெங்கே செய்ய வேண்டும்..? என்று சிலை கடத்தல் தொழிலில் தற்போதும் ஈடுபட்டிருக்கும் திருடர்களுக்குக் கூட தெரியாத விஷயங்களை இங்கே பட்டியலிட்டுக் காண்பித்து… படித்தால்கூட மண்டையில் ஏறாத இது பற்றிய பொது அறிவினை நமக்குள் விதைத்திருக்கிறார் இயக்குநர்.

இது எல்லாவற்றையும்விட கடைசியில் படம் பார்த்த அத்தனை ரசிகர்களின் தோள் மீதும் ஏறி உட்கார்ந்து, சாவகாசமாக டஜன் கணக்கில் பூவை சுற்றி அவர்களை ஏமாளியாக்கியிருக்கும் இந்த இயக்குநரின் திறமையை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

அந்த அளவுக்கு எதிர்பார்க்காத டிவிஸ்ட்டுகளால் “அட.. என்னடா ஸ்கிரிப்ட் இது..?” என்று ரசிகர்களை வாய்விட்டுப் பாராட்ட வைத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த்ராஜ்.

இயக்குநர் ராமின் உதவியாளர் என்கிற பெருமையை தனது முதல் படத்திலேயே காப்பாற்றியிருக்கிறார் அவருடைய சீடரான இந்தப் படத்தின் இயக்குநர் சி.அரவிந்த்ராஜ். இந்தப் பெயரும், புகழும் இவருக்கு என்றென்றும் தொடரட்டும்!

பரம்பொருள் – அந்த சிலையைப் போலவே பொக்கிஷமான திரைப்படம்..!

RATING : 4 / 5

Our Score