full screen background image

லக்கி மேன் – சினிமா விமர்சனம்

லக்கி மேன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை தின்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தில் யோகிபாபு, வீரா, ராய்ச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயக்குமார், கவுதம் சித்தார்த்தன், ஹலோ கந்தசாமி, ராகுல் தாத்தா, பிரதீப் கே.விஜயன், அமித் பார்கவ், சாத்விக், சுஹாசினி குமரன், விலங்கு ரவி, டேவிட் சாலமன், அஜீத் கோஷி, தாவூத், மிப்பு சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பாலாஜி வேணுகோபால், இசை – சீன் ரோல்டன், ஒளிப்பதிவு – சந்தீப் கே.விஜய், படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – சரவணன் வசந்த், ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், உடைகள் வடிவமைப்பு – நந்தினி நெடுமாறன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

பிறந்ததில் இருந்தே அதிர்ஷ்டமில்லாதவன் என்ற அவப்பெயரோடு வாழ்ந்து வந்திருப்பவர் யோகிபாபு. தற்போது திருமணமாகி ஒரு மகன் இருக்கும் சூழலில் ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து வருகிறார். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

யோகிபாபு சீட்டு போட்டு வரும் சிட்பண்ட் கம்பெனியின், சீட்டுக் குலுக்கலில் அவருக்கு ஒரு கார் பரிசாகக் கிடைக்கிறது. இனிமேல்தான் டிரைவிங் கற்றுக் கொண்டு அந்தக் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை யோகிபாபுவிடம்.

இந்த நேரத்தில் அந்தக் காரை முன் வைத்து அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரான வீராவிடம் சண்டையிடுகிறார் யோகிபாபு. ஒரு முறை கலெக்டர் முன்னிலையில் வீராவை தன்னிடம் மன்னிப்பு கேட்க வைக்கிறார் யோகிபாபு. இதனால் பெரும் அவமானத்திற்குள்ளாகுகிறார் வீரா.

திடீரென்று யோகியின் கார் காணாமல் போகிறது. கூடவே கஞ்சா கடத்தலில் யோகியின் காரும் சம்பந்தப்பட்டிருப்பதாக போலீஸில் வழக்கும் பதிவாகிறது. காரை மீட்பதற்காக அதே வீராவிடம் யோகிபாபு வந்து நிற்க வேண்டிய கட்டாயம்.

இப்போது யோகி என்ன செய்தார்..? அந்தக் காரை மீட்டாரா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.

மிடில் கிளாஸ்மேன் கதாப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார் யோகிபாபு. பெட்ரோல் பங்கில் கலாய்க்கத் துவங்கி கடைசிவரையிலும் இடையிடையே அவ்வப்போது தனது கலாய்த்தலையும் செய்து கடைசியாக ஹீரோவாகவே படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மனைவியிடம் பணிவதுபோல நடித்து, பையனிடம் பாசம் காட்டுவதுபோல நடித்து, வேலை செய்யுமிடத்தில் அடக்கமாக இருப்பதுபோல் நடித்து, வீராவிடம் முதலில் வீறாப்பு காட்டி பின்பு பணிவு காட்டி.. கடைசியாக ஒத்தைக்கு ஒத்தை வர்றியா என்பது போல் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நிற்பதுபோல் நடித்து.. இப்படி பல நடிப்புகளையும் காண்பித்து சண்டையே இல்லாமல் தனது ஹீரோயிஸத்தைப் பதிவு செய்திருக்கிறார் யோகிபாபு.

இவருக்கு டப் கொடுக்கும்விதமாய் தனக்கிருக்கும் உள் மன நோயுடன் போராடியபடியே கெத்தாக நடித்திருக்கும் இன்ஸ்பெக்டர் வீராவுக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டு. ஏனெனில் வில்லன் சிறப்பாக நடித்திருந்தால்தான் ஹீரோவுக்கே மரியாதை கிடைக்கும். அது இந்தப் படத்திலும் சாத்தியமாகியுள்ளது.

தான் அவமானப்பட்டுவிட்டோம் என்பதை அறிந்து வீரா செய்யும் அடுத்தடுத்த செயல்களால் சிலந்தி வலைக்குள் சிக்கிக் கொண்ட நிலைக்குச் செல்லும் யோகிபாபுவிடம் தெனாவெட்டாகவும், தைரியமாகவும், உன்னால் என்ன செய்ய முடியும் என்பதைப்போல இவர் பேசும் பேச்சுக்களெல்லாம் ரசிகர்களுக்குள் கோபத்தை வரவழைக்கிறது. இதுதான் இந்தக் கதாப்பாத்திரத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி.

யோகியின் மனைவியாக நடித்திருக்கும் ராய்ச்சல் ரெபேக்காவின் உணர்வுப்பூர்வமான நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. பிரச்சினையென்று வந்தால் மொட்டை மாடிக்கு வந்து சின்டெக்ஸ் தொட்டியில் நின்று கோர்ட் வழக்கு போன்று புருஷனும், பொண்டாட்டியும் பேசிக் கொள்வதெல்லாம் ஒரு சுவையான திரைக்கதை.

சந்தீப் கே.விஜய்யின் ஒளிப்பதிவில் குறையில்லை. அந்தச் சின்ன வீட்டுக்குள் காட்சிகளை மாற்றி, மாற்றி வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். கலை இயக்குநர் அரும்பாடுபட்டு அந்த வீட்டை நிர்மாணித்திருக்கிறார். ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள், அந்தந்த நேரத்தில் ரிலாக்ஸ் செய்ய வைக்கிறது.

பல இடங்களில் வசனங்கள்தான் கை தட்ட வைத்திருக்கின்றன. மிடில் கிளாஸ் குடும்பங்கள் பற்றியும், அதிர்ஷ்டம் பற்றிய பேச்சுக்களும் கவனிக்க வைத்திருக்கின்றன.

ஒரு பக்கம் உழைக்காமலேயே அதிர்ஷ்டமில்லை என்று சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள்.. இன்னொரு பக்கம் தவறுக்கு மேல் தவறு செய்து பழியை அதிர்ஷ்டத்தின் மீது சுமத்துபவர்கள்.

இப்படியிருக்கும் இரண்டு பிரிவினருக்கும் உறைக்கும்விதமாக ஒரு நல்ல கருத்தை முன் வைத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கும் இயக்குநர் பாலாஜி வேணுகோபாலுக்கு நமது பாராட்டுக்கள்..! நன்றிகள்..!

RATING : 3.5 / 5

Our Score