வித்தியாசமாக, சமூக சேவையோடு தங்களது படத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள் ‘பப்பரப்பாம்’ படக் குழுவினர்..
இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவனின் உதவியாளரும், ‘உறுமி’ படத்தின் வசனகர்த்தாவுமான சசிகுமாரன் இயக்கியுள்ள முதல் படம் ‘பப்பரப்பாம்’.
இதில் ‘நான் மகான் அல்ல’, ‘யாழ்’, ‘விடியும் முன்’ ஆகிய படங்களில் நடித்துள்ள வினோத் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’ இஷாரா, யாமினி, ராஜா, கதிர் கமல், ‘நாய்கள் ஜாக்கிரதை’ ஜெனிஷ், ‘சூப்பர் சிங்கர்’ புகழ் அழகேசன் உட்பட பலரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சண்முகசுந்தரம், இசை – கே.எஸ்.ரோஸ், எடிட்டிங் – கே எம் ரியாஸ். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாகத்தான் உள்ளது. மரணத்திலிருந்து உயிர்த்தெழும் ஒருவனைப் பற்றிய கதையாம்.
தங்களுடைய படத்தை அறிமுகம் செய்ய புதுமையான ஒரு வழியை கையாண்டிருக்கிறார்கள் படக் குழுவினர். நாடு முழுவதிலும் இப்போது பேஷனாக உள்ள மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தப் படக் குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர். படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, பட்டினப்பாக்கம்- நொச்சிக்குப்பம் அருகேயுள்ள சாலைகளை இந்தப் படக் குழுவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து சுத்தம் செய்துள்ளனர்.
”இப்படி சுத்தம் செய்து தங்கள் படத்தை அறிமுகம் செய்வதை பெருமையாக நினைப்பதாகவும், இது இத்தோடு நிற்காமல் படம் வெளியாகும்வரை இதே குழுவோடு வேறு வேறு இடங்களிலும் எங்களது இந்தத் தூய்மைப் பணியைத் தொடர்வோம்” என்றார் இயக்குனர் சசிகுமாரன்.
‘நாங்களும் சுத்தம் செய்கிறோம்’ என்கிற மாதிரி போஸ் கொடுத்துவிட்டு ஓடி விடாமல் அடிக்கிற வெய்யிலில் காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்த சுத்தம் செய்யும் பணி மாலை ஆறு மணிவரை குழுவினர் யாரும் கலையாமல் சுத்தம் செய்ததை பார்த்த அந்த ஏரியா மக்களும் அவர்களோடு இணைந்து கொண்டனர். அந்த சாலையே அரசியல்வாதிகள் கூட்டம்போடும் நாளில் சாலை எப்படி பளிச்சென்று இருக்குமோ அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஐம்பது குப்பைத் தொட்டிகளை அந்த சாலையெங்கும் நிரந்தரமாக வைத்தனர் ‘பப்பரப்பாம்’ படக் குழுவினர்.
படக் குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்..!












