வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்து கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான படம் ‘பாபநாசம்.’
மலையாளத்தில் ஜீத்து ஜோஸப் கதை, இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ஒரு குடும்பத் தலைவன் தனது குடும்பத்தை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டும், ஒரு தந்தை தனது மகளை எந்த அளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்துடன் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்வண்ணம் இந்த ‘பாபநாசம்’ படம் உருவாகியுள்ளது.
சென்சாரில் ஒரு சிறிய கட் கூட இல்லாமல் ‘யு’ சர்டிபிகேட் வாங்கிய இந்த ‘பாபநாசம்’ படம் வரும் ஜூலை 3-ம் தேதி ரிலீஸாகும் என்று சென்சார் சர்டிபிகேட் கிடைத்த 3 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கெனவே ஜூலை 3-ம் தேதி ரிலீஸாகவிருந்த சில படங்களின் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியாகிவிட்டார்கள். கமல்ஹாசனின் திரைப்படமென்றால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இந்தப் படம் மலையாள திரைப்பட வரலாற்றிலேயே 50 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்த படம். ஆகவே இந்தப் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பினை திரையுலகமே அறிந்திருக்கிறது.
இதன் உடனடி பாதிப்பாக அதே ஜூலை 3-ம் தேதியில் வெளியாகவிருந்த ஜெ.சதீஷ்குமாரின் தயாரிப்பில் அருள்நிதி நடித்திருக்கும் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் ஜூலை 31-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போதுவரையிலும் ஜூலை 3 ரிலீஸ் என்று சொல்லி வரும் மற்ற படங்களும் அன்றைக்கு ரிலீஸாகுமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
தமிழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட திரையில் வெளியாகவுள்ளதாக தெரிகிறது. இன்று நள்ளிரவு முதல் ‘பாபநாசம்’ படத்தின் டிக்கெட்களை ஆன்லைன் சேவை மூலம் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.