full screen background image

பணி – சினிமா விமர்சனம்

பணி – சினிமா விமர்சனம்

கோகுலம் மூவிஸ் மற்றும் ஏடிஎஸ் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜ், அபிநயா, சாகர் சூர்யா, ஜுனாயஸ்.வி.பி., சீமா, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், சாந்தினி ஸ்ரீதரன், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்‌ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம்ஜோஜூ ஜார்ஜ், ஒளிப்பதிவுவேணு, ஜிண்டோ ஜார்ஜ், படத்தொகுப்புமனு ஆண்டனி, இசைவிஷ்ணு விஜய், பின்னணி இசைசாம் சி.எஸ்.

இது ‘பணி’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் டப்பிங் படமாகும்.

கேரளவின் திருச்சூரில் மிகப் பெரிய தாதாவா இருக்கிறார் நாயகன் ஜோஜு ஜார்ஜ். இவர் மட்டுமில்லாமல் இவருடைய தம்பிகள், மைத்துனரும் இந்த தாதா தொழிலில் இவருக்குத் துணையாக உள்ளனர்.

அதே திருச்சூரில் ஒரு ஆர்வத்தில் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள் இளைஞர்களான சாகர் சூர்யா, ஜுனாயஸ்.வி.பி. இருவரும்.! பட்டப் பகலில் ஒரு முக்கிய சாலையில் ஒரு கொலையை செய்துவிட்டு சத்தமில்லாமல் தப்பிக்கும் இவர்கள் ஜோஜூ ஜார்ஜின் மனைவியான அபிநயாவைப் பார்த்தவுடன் சபலப்பட்டு அவரைத் தொட்டுவிட, ஜோஜூ ஜார்ஜ் அவர்களைக் கடுமையாகத் தாக்கிவிடுகிறார்.

இந்தக் கோபத்தில் அவர்கள் பதிலுக்கு அபிநயாவை மானப்பங்கப்படுத்திவிட ஜோஜூ ஜார்ஜ் கொதித்தெழுந்து இவர்களைத் தேடுகிறார். அதேபோல் அவர்களும் ஜோஜூ ஜார்ஜ் குடும்பத்தைக் குறி வைத்துத் தாக்கஆடு புலி ஆட்டம்போல இவர்களின் மோதல் தொடர்கிறது. கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் பணி படத்தின் திரைக்கதை.

ஓங்குதாங்கான உடலமைப்புடன், கட்டுமஸ்தான தோற்றத்தில் இருக்கும் ஜோஜூ, தாதா வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். திருச்சூரின் காட்பாதராக இருக்கும் நிலையில் தன் வீட்டிலேயே ரெண்டு பொடிப் பயல்கள் கை வைத்துவிட்டார்களே என்ற கோபத்தில் அவர் பொங்குகின்ற காட்சிகளிலெல்லாம் மாஸ் காட்டியிருக்கிறார்.

ஆக்சன் காட்சிகளில் கண்களில் அனல் தெறிக்க ஆக்சனை பறக்கவிட்டிருக்கிறார். அதிலும் கார், பைக் சேஸிங் காட்சியிலும் நம்முடைய படபடப்பை ஏற்றிவிட்டிருக்கிறார். “கிரிசேட்டா ன்று போனில் அழைத்தவுடன் அவர் தன் கண்ணில் காட்டும் கோபமும், வெறியும், ஆத்திரமும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. படம் நெடுகிலும் வேஷ்டியில் பவனி வந்து அந்த வேஷ்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு நடக்கும் நடையிலேயே அவருடைய ரசிகர்கள் குளிர்ந்து போகிறார்கள். அட்டகாசம், அதகளம் என்பதற்கு உதாரணம் ஜோஜூவின் நடிப்பு.!

ஜோஜு ஜார்ஜின் மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, அழகு மற்றும் நடிப்பு இரண்டிலும் நம்முடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார். நாடோடிகள் படத்தில் பார்த்த அபிநயாகவுக்கும் இந்த அபிக்கும் நிறையவே வித்தியாசங்கள். ‘அந்தக் காட்சியில் துணிந்து, தைரியமாக நடித்திருக்கும் அபிநயாவுக்கு நம் பாராட்டுக்கள்..!

வில்லன்களாக நடித்திருக்கும் இளைஞர்களான சாகர் சூர்யா மற்றும் ஜுனாயஸ்.வி.பி இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். “கிரி சேட்டா என்று ஸ்டைலாக சாகர் போனில் அழைக்கும்போதெல்லாம் நமக்குள் ஒரு உற்சாகம் பற்றிக் கொள்கிறது. கடைசியில் இவர்களது முடிவு எதிர்பாராத கொடூரம்தான்..!

மகன்கள்தான் தாதா என்றால் இவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் சீமாவும் தன் பங்குக்குக் கைல சிக்குனாங்கன்னா சிதைச்சிரு என்று சொல்லி பயமுறுத்துகிறார்.

மேலும் படத்தில் நடித்திருக்கும் மற்றைய நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், பாபி குரியன், ரஞ்சித் வேலாயுதம், அபாயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், லங்கா லக்‌ஷ்மி, பிரிட்டோ டேவிஸ், ஜெயசங்கர், அஷ்ரப் மல்லிசேரி, டாக்டர் மெர்லட் ஆன் தாமஸ் என படத்தில் நடித்திருக்கும் மற்றவர்களும் அவரவர் கதாப்பாத்திரத்தில் சிறப்பு செய்திருக்கிறார்கள். சாந்தினி ஸ்ரீதரனுக்குக் கிடைத்த சின்ன வேடம் நமக்கு ஏமாற்றமளிக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் வேணு மற்றும் ஜிண்டோ ஜார்ஜ் இருவரின் ஒளிப்பதிவும் காட்சிகளை பிரம்மாண்டமாக ஆக்கியதோடு, கதாபாத்திரங்களின் நடிப்பை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. மருத்துவமனையில் நடக்கும் களேபரங்கள்.. நடு இரவில் நடு ரோட்டில் நடக்கும் கார், பைக் சேஸிங் இதையெல்லாம் பரபரப்பாக பதிவு செய்திருக்கிறது கேமிரா.

விஷ்ணு விஜய்யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும்  சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. காட்சிகளின் வீரியத்துக்கேற்ப பின்னணி இசையும் ஒலித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்துகிறது.

மனு ஆண்டனியின் படத் தொகுப்பு சண்டை காட்சிகளை கச்சிதமாய் தொகுத்தளித்துள்ளது. அஜயன் அடாட்டின் ஒலி வடிவமைப்பு ஒரு சிறிய பிசிறுகூட தட்டாமல் ஒலித்திருக்கிறது.

ஆக்‌ஷன் கமர்ஷியல் படம்தான் என்றாலும் அதை மிக சுவாரஸ்யத்துடனும், எதிர்பார்ப்புடனும் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார்ஜ்.

தாதாவாக இருந்தாலும், ஒரு சின்னப் பையன்கள் அவருக்குத் தண்ணி காட்டும் விதமாக திரைக்கதையை எழுதி, அதில் பல கதாபாத்திரங்களையும் நடிக்க வைத்து திரைக்கதையில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டை கொடுத்து படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

அந்த இரண்டு சின்னப் பையன்களும் ஜோஜூவிடம் சிக்குவார்களா? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்குள் கடைசிவரைக்கும் கொண்டு வந்து திக், திக் மனப்பான்மையுடன் படத்தைப் பார்க்க வைத்திருப்பது இயக்குநரின்
இயக்கத் திறமைதான்..!

எப்படியிருந்தாலும் இவரே கொலை, கொள்ளைகளை செய்திருக்கும் தாதாதான் என்பதால் அவர் மீது எந்தப் பரிதாபமும் வரவில்லை. மாறாக அபிநயா மீது வரும் பரிதாபத்தைத் தான் கையில் எடுத்துக் கொண்டு தான் ஒரு நீதிவான் போல கடைசியில் அந்தப் பையன்களுக்கு ஜோஜூ கொடுக்கும் தண்டனை உச்சப்பட்ச அநீதி. அந்தக் கடைசி தண்டனைக் காட்சி மிகவும் கொடூரமானது..!

கமர்ஷியல் சினிமாதான் என்றாலும் ஏற்க முடியாத வன்முறையையும், நீதியையும் சொல்லும் ஒருவிதமான ஹீரோயிஸ படம் இது..!

RATING : 3.5 / 5

Our Score