full screen background image

நடிகர் ஜாக்கி ஷெராப் அகோரியாக பயமுறுத்தும் ‘பாண்டி முனி’ திரைப்படம்..!

நடிகர் ஜாக்கி ஷெராப் அகோரியாக பயமுறுத்தும் ‘பாண்டி முனி’ திரைப்படம்..!

தனுஷ் நடித்த ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’,  ‘3’ ஆகிய படங்களைத் தயாரித்த ஆர்.கே.புரொடெக்சன்ஸ் பட நிறுவனம் தற்போது தயாரித்து வரும் திரைப்படம் ‘பாண்டி முனி.’

இந்தப் படத்தில் நாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா நால்வரும் அறிமுகமாகிறார்கள். பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், ‘அகோரி’ வேடத்தில் நடிக்கின்றார். இன்னொரு முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார். 

ஒளிப்பதிவு – மது அம்பட், இசை – ஸ்ரீகாந்த் தேவா, கலை   இயக்கம் –   ஸ்ரீமான், பாலாஜி, நடன இயக்கம் – சிவசங்கர், சண்டை பயிற்சி   -சூப்பர் சுப்பராயன்,  படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், எழுத்து, இயக்கம் – கஸ்தூரி ராஜா.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் ‘அகோரி’ வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப்.

jackie sheroff

சாதாரண நடிகர்கள்கூட  தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் நடிகர் ஜாக்கி ஷெராப், படப்பிடிப்புத் தளத்தில் ஒரு சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம்தான்.

இந்தப் படத்தில் நடிப்பது பற்றிப் பேசிய நடிகர் ஜாக்கி ஷெராப், “இந்தப் படத்தில் நான் ஒரு ‘அகோரி’யாக நடிக்கிறேன். இயக்குநர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே. சொன்னேன்.

‘ஆரண்ய காண்டம்’ மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக் களம். என் உருவத்தை மட்டும் அல்ல. என் நடை, உடை, பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும். டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே படத்தில் நான் பிரதிபலிக்கிறேன்.

நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள்தான் ஊறி இருக்கிறேன். ஆனால் இயக்குநர் கஸ்தூரி ராஜா கடந்த ஆறு ஆண்டுகளாக இதை தன்னுடைய கனவு படைப்பாகவே தனக்குள் சுமந்து கொண்டிருக்கிறார்.

நல்லது செய்யும் ‘முனீஸ்வரன்’ என்ற அகோரிக்கும், எல்லோரையும் அழிக்க நினைக்கும் ‘பாண்டி’ என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம்தான் கதை.

pandi munii movie stills  

இந்தப் படத்தில் ஒரு தீவிர சிவ பக்தனான அகோரியாக நடிக்கிறேன். ‘அகோரி’ என்றால் ஆ… ஊ… என்று கத்தி கலாட்டா செய்யும் ‘அகோரி’ வேடமல்ல. அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த ‘அகோரி’ வேடம். எனக்கே இது புது வேடம்தான். டைரக்டர் சொன்னதை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன்.

நான் அடிக்கடி சென்னை வருவேன். 80-ம் வருட நடிகர், நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன். ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி, சாம்பார், ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள். ரேவதி, ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள்.

நான் நிறைய படங்களை பார்ப்பது கிடையாது. நிறைய பேர் அந்த நடிகை இந்த நடிகை எப்படி டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் பேர் எல்லாம் எனக்கு தெரியாது. எல்லோருமே சிறப்பாக நடிக்கிறார்கள். நன்றாக நடனமாடுகிறார்கள். இல்லாவிட்டால் சினிமா துரத்தி விட்டிருக்குமே…!?

என்னை பொருத்தவரை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்தான் என் எஜமானர்கள். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை, சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்கவே மாட்டேன்…” என்றார்.

agori movie stills

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியபோது, “இந்த ‘அகோரி’ கேரக்டருக்கு முதலில் நான் பேசியது ராஜ்கிரண் சாரிடம்தான்.  அவர் கதையைக் கேட்டுவிட்டு இந்தக் கதை  நிறைய வேலை வாங்கும். மலை, காடு எல்லாம் ஏறி இறங்க வேண்டி இருக்கும். என்னால அவ்வளவெல்லாம் கஷ்டப்பட முடியாது என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் வேறு சில நடிகர்களையெல்லாம் கடந்து இந்த ‘அகோரி’ கதாபாத்திரம் ஜாக்கியிடம் வந்து நின்றது.

கதையைக் கேட்டு முடித்தவுடன் அவர் ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் போனவர் அரை மணி நேரமாக ஆளையே காணோம். இவரும் நடிக்க மாட்டார் போலிருக்கு என்று வேறு நடிகர்களை மனதுக்குள் ஓட விட்டேன்.

பின்பு சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ஜாக்கி இடுப்பில் வெறும் மஞ்சள் துணியை கட்டிக் கொண்டு வந்து நின்று, ‘இது மாதிரிதானே காஸ்டியூம்?’ என்று கேட்க ஆடிப் போய் விட்டேன். என் கதைக்குள் இருந்த முனீஸ்வரன் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். அந்தளவுக்கு சின்சியரான நடிகர் இவர். இப்போது நடிகராக இல்லாமல் நல்ல நண்பராகவும் நாங்கள் பழகிக் கொண்டிருக்கிறோம்.

தற்போது படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஹாரர்  படமாக ‘பாண்டி முனி’ வளர்ந்து கொண்டிருக்கிறது…” என்றார் இயக்குநர் கஸ்தூரி ராஜா.

Our Score